ADDED : அக் 31, 2025 03:02 AM

உலகளாவிய காரணங்களால், ரூபாய் தனது நிலையை இழந்து 88.70 என்ற நிலைக்கு நேற்று திரும்பியது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தீவிரமான நிலைப்பாடு, டாலரின் பிடியை மீண்டும் இறுக்கியது. இதன் பாதிப்பு, ரூபாயின் மீதும் படர்ந்தது.
இதற்கிடையே எதிர்பாராத திருப்பமாக, சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சலுகை காட்டியது, நம் உலக வர்த்தக போட்டித் திறனை பாதிப்பதாக அமைந்தது. நாம், 50% வரியால் இன்னமும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் ரூபாயின் மதிப்பு, சரிவை நோக்கி திரும்பியது.
நம் உள்நாட்டு சந்தைகளைப் பொறுத்தவரை, நம்பிக்கை அதிகரித்துள்ளது. வலுவான உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்பு மற்றும் உற்சாகமூட்டும் இரண்டாம் காலாண்டு வருவாய் என்ற இரட்டைக் காரணிகளால், சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும், இம்மாதத்தில் 5 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளன. இந்த ஏற்றம் ஒரு வேகமான ஓட்டமாக இல்லாமல், உறுதியுடன் எடுத்து வைக்கும் அடியாக இருப்பதால், நம்பிக்கை உணர்வை தருகிறது.
தற்போது சந்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது, வர்த்தக ஒப்பந்தம் குறித்த உறுதிப்படுத்தல் தான். இதுவே ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு அடுத்த ----------------துாண்டுதலாக இருக்கும்.
தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், 88.80 அருகில் எதிர்ப்பு நிலை நீடிக்கிறது. அதேநேரம் 87.60 -- 87.70 இடையே ஆதரவு நிலை உள்ளது. இந்த ஆதரவு நிலைக்குக் கீழே சென்றால், குறுகிய காலத்தில் 87.20 நோக்கிய பாதை திறக்கப்படலாம்.
அமித் பபாரி,
நிர்வாக இயக்குநர்,
சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்

