ADDED : அக் 17, 2025 12:01 AM

இந்திய ரூபாய் வியாழன் அன்று, ஒரு மாதத்தில் இல்லாத வலுவான நிலைக்கு உயர்ந்தது. சில வாரங்களுக்கு முன்புவரை, ஆசியாவிலேயே பலவீனமான நாணயங்களில் ஒன்றாக இருந்த ரூபாய், இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் பிரகாசமான நாணயமாக மாறியுள்ளது. நீண்ட சரிவுக்குப் பிறகு மீண்டும் பார்முக்கு வரும் ஒரு கிரிக்கெட் வீரரைப் போல, ரூபாயின் இந்த திடீர் வலிமை, சந்தையை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
எழுச்சிக்குக் காரணம்: அமெரிக்கா - -இந்தியா வர்த்தகப் பேச்சு மீதான நம்பிக்கை காரணமாக, உள்ளூர் நாணயம் 88 என்ற குறியீட்டிற்கு மேல் உறுதியான நிலையைப் பிடித்தது. ஆரம்ப வர்த்தகத்தில் 87.70-ஐ தொட்டது. நாளின் முடிவில் 87.82-ல் நிலைபெற்றது. இது, நம்பிக்கை மெதுவாகத் திரும்புகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
சரியான நேர உதவி: வர்த்தகப் பேச்சு மீதான நம்பிக்கை ரூபாயின் உயர்வுக்கு எரிபொருளாக இருந்த அதே வேளையில், இந்திய ரிசர்வ் வங்கியும் அமைதியாக தனது பங்களிப்பைச் செய்தது. மத்திய வங்கியின் சரியான நேர தலையீடு, ரூபாயின் மீட்புக்கு மேலும் பலம் சேர்த்தது.
அமெரிக்காவின் சிக்கல்களால் ஏற்பட்ட டாலரின் பலவீனம், இந்திய ரூபாய் போன்ற வளரும் சந்தை நாணயங்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது.
வருங்கால நிலை: ரூபாய் 87.50-க்குக் கீழே செல்லுமானால், அது 86.80-87.00 என்ற இலக்கை நோக்கிச் செல்ல வழிவகுக்கும். மறுபுறம், 88.30-88.40 என்பது ஒரு உறுதியான தடுப்பு மண்டலமாக செயல்படும். உலகளாவிய காற்று தொடர்ந்து ரூபாய்க்குச் சாதகமாக வீசினால், ஒரு வலுவான, நிலையான கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கக்கூடும்.
அமித் பபாரி,
நிர்வாக இயக்குநர்,
சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்