ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : சர்வதேச சந்தையை குறிவைக்கும் 'மேரிகோ'
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : சர்வதேச சந்தையை குறிவைக்கும் 'மேரிகோ'
UPDATED : ஆக 16, 2026 03:59 AM
ADDED : ஆக 16, 2026 03:38 AM

கடந்த 1988ல் தொடங்கப்பட்ட நுகர்பொருட்கள் நிறுவனமான 'மேரிகோ', 'பாராசூட்' தேங்காய் எண்ணெய் பிராண்டு வாயிலாக பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வெறும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்து, பின் ஆரோக்கிய பராமரிப்பு, உணவு பொருட்கள், டிஜிட்டல் பிராண்டுகள், சர்வதேச சந்தைகள் என பல துறைகளில் தடம் பதித்துள்ளது.
பிராண்டு போர்ட்போலியோ
மேரிகோவின் தயாரிப்புகள் நான்கு பிரிவுகளாக உள்ளன. கூந்தல் எண்ணெய் (பாராசூட்), மதிப்பு கூட்டப்பட்ட கூந்தல் எண்ணெய் (நிஹார் சாந்தி ஆம்லா, பாராசூட் அட்வான்ஸ்டு, ஹேர் கேர்) ஆகியவை முன்னணியில் உள்ளன. 'சபோலா' பிராண்டு சமையல் எண்ணெய்களில் மட்டுமல்லாமல்; ஓட்ஸ், மியூஸ்லி, தேன் மற்றும் சோயா சங்க்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் பிரிவிலும் முக்கிய பங்காற்றுகிறது.
பிரீமியம் தனிநபர் பராமரிப்பு மற்றும் டிஜிட்டல்-பர்ஸ்ட் பிராண்டுகளில் 'செட் வெட், லிவான், பேர்டோ, ஜஸ்ட் ஹெர்ப்ஸ், ட்ரூ எலிமெண்ட்ஸ், பிளிக்ஸ், காஸ்மிக்ஸ் மற்றும் 4,700பிசி' ஆகியவை அடங்கும். சர்வதேச அளவில், வங்கதேசம், வியட்நாம், மத்திய கிழக்கு நாடுகள், எகிப்து, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளில் நிறுவனம் இயங்கி வருகிறது.
சந்தையில் முன்னணி
பிராண்டடு தேங்காய் எண்ணெய் சந்தையில், பாராசூட் ரிஜிட்ஸ் 59 சதவீத விற்பனை பங்கை கொண்டுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட கூந்தல் எண்ணெய் பிரிவில், பாராசூட் அட்வான்ஸ்டு, நிஹார் மற்றும் ஹேர் கேர் ஆகிய பிராண்டுகள் 29 சதவீதம்; கூந்தல் அலங்கார பிரிவில், 'போஸ்ட்-வாஷ் லீவ்-ஆன் சீரம்' 44 சதவீதம், ஹேர் ஜெல், ஹேர் வேக்ஸ், ஹேர்-க்ரீம் சந்தையில் 51 சதவீத பங்கையும் கொண்டுள்ளது.
உணவு பிரிவில், சபோலா ஓட்ஸ் 42 சதவீத சந்தை பங்கு கொண்டுள்ளது. வங்கதேசத்தின் பிராண்டடு தேங்காய் எண்ணெய் சந்தையில் பாராசூட் முதலிடத்தில் உள்ளது. வங்கதேசம் மற்றும் எகிப்து நாடுகளில் ஹேர் கலர் பிரிவில் 'ஹேர்கோட்' பிராண்டு முன்னணி வகிக்கிறது.
நிதிநிலை முடிவுகள்
கடந்த 2025--26 நிதியாண்டில் வருவாய் 26 சதவீதம் உயர்ந்து 13,611 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் 12 சதவீத வளர்ச்சியை விட அதிகம்.
மேரிகோவின் முதன்மை மூலப்பொருளான கொப்பரை தேங்காய் விலை, இக்காலகட்டத்தில் கணிசமாக உயர்ந்ததால், எபிட்டா லாப வரம்பு 2025--26ம் நிதியாண்டில் 17.10 சதவீதமாக குறைந்தது. விலை அதிகரிப்பு மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கைகளால் இந்த இழப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும், பாதிப்பை முழுமையாக ஈடு செய்ய முடியவில்லை.
கடந்த ஜூன் காலாண்டில் பாராசூட் விற்பனை 10 சதவீதமும், வருவாய் 23 சதவீதமும் அதிகரித்தன.
உணவு பிரிவு 43 சதவீத வளர்ச்சியுடன், ஆண்டு வருவாய் விகிதத்தில் 1,300 கோடி ரூபாயை கடந்துள்ளது. சபோலா சோயா சங்க்ஸ், ஓட்ஸ் மற்றும் மியூஸ்லி ஆகியவை இந்த வளர்ச்சிக்குத் அடிப்படையாக அமைந்தன.
சர்வதேச வணிகம் 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வியட்நாம் 27 சதவீதம், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிரிவு 24 சதவீதம் வளர்ச்சியுடன் முன்னணியில் உள்ளன.
வணிகத்தை மாற்றுதல்
மொத்த வருவாயில் உணவு மற்றும் பிரீமியம் தனிநபர் பராமரிப்பு பொருட்களின் பங்கை, 2030ம் நிதியாண்டுக்குள் 33 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம்
செப்டம்பர் 2025: 'ட்ரூ எலிமெண்ட்ஸ்' பிராண்டின் உரிமையாளரான 'ஹெச்.டபிள்யூ., வெல்னஸ் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் மீதமுள்ள 46.02 சதவீத பங்குகளை வாங்கி, அதனை தனது முழு கிளை நிறுவனமாக மாற்றியது.
ஜனவரி 2026: '4,700 பிசி' என்ற பிரீமியம் பிராண்டின் உரிமையாளரான 'ஜியா மேஸ்' நிறுவனத்தின் 94.02 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது.
பிப்ரவரி 2026: ஆன்லைன் சந்தையில் முன்னிலையில் உள்ள ஊட்டச்சத்து பிராண்டான 'காஸ்மிக்ஸ்' நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை வாங்கியது.
இதனுடன், டிஜிட்டல்-பர்ஸ்ட் பிராண்டான 'பிளிக்ஸ்' நிறுவனத்திலிருந்த தனது பங்குகளை 60 சதவீதமாக உயர்த்தியதுடன், 'கேண்டிட்' பிராண்டின் உரிமையாளரான வியட்நாமின் 'ஸ்கினெடிக்' நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளையும் கைப்பற்றியது.
'சேது' திட்டம்
சில்லரை விற்பனையில் நேரடி வினியோகத்தை அதிகரிக்க 'சேது' என்ற புதிய திட்டத்தை மேரிகோ செயல்படுத்தி வருகிறது. இதனுடன், குயிக்-காமர்ஸ், இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனையை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.
நிதி இலக்குகள்
மேரிகோ நிறுவனம் புதிய நிதி இலக்குகளை வெளியிட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் ஒருங்கிணைந்த வருவாய் 15,000 கோடி ரூபாயை கடக்கும்; இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியுடன், எபிட்டா 15 சதவீதத்துக்கும் மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |
டிவிடெண்டு
நிறுவனம் 2025-26 நிதியாண்டிற்கு ஒரு பங்குக்கு 4 ரூபாய் வீதம் இறுதி டிவிடெண்டு வழங்க பரிந்துரைத்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த லாபத்தில் 29 சதவீதம் மட்டுமே. இது முந்தைய நிதியாண்டில் 85 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது கணிசமாக குறைந்துள்ளது. புதிய நிறுவனங்களை வாங்கவும், விரிவாக்கத்திற்கும் அதிக முதலீடு செய்ததால் மட்டுமே டிவிடெண்டு பங்கு குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது. செயல்பாட்டு பணப்புழக்கம் 2,084 கோடி ரூபாயாக உயர்ந்ததோடு, 'ஏ.ஏ.ஏ.,' கடன் மதிப்பீட்டுடன் நிதி நெருக்கடியின்றி வலுவான நிலையில் உள்ளது.
எதிர்கால வியூகம்
நடப்பு நிதியாண்டில், பாராசூட் மற்றும் கூந்தல் எண்ணெய் சந்தையில் முதலிடத்தை தக்கவைக்கவும், உணவு மற்றும் பிரீமியம் அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை, இந்தியாவில் பெரியளவில் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும், சில்லரை விற்பனையை அதிகரிப்பது, புதிய ஆன்லைன் பிராண்டுகளை வாங்குவது, மற்றும் சர்வதேச வர்த்தகத்தை பெருக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது. இந்த உத்திகள் வாயிலாக, அதிக லாபத்துடன் ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் 'விஷன் 2030' இலக்கை எட்ட மேரிகோ முழுவீச்சில் இயங்கி வருகிறது.
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

