ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : தொழில்நுட்ப மாற்றத்தை சமாளிக்கும் 'பாஷ்'
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : தொழில்நுட்ப மாற்றத்தை சமாளிக்கும் 'பாஷ்'
UPDATED : செப் 13, 2026 03:25 AM
ADDED : செப் 13, 2026 03:01 AM

'பாஷ் குழுமம்' இந்தியாவில் ஆட்டோமோட்டிவ் மொபிலிட்டி, மென்பொருள், தொழிற்சாலை தானியங்கி மயமாக்கல், நுகர்வோர் மின்னணு பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் 14க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் வாயிலாக செயல்படுகிறது. இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கும் கூடுதலான வரலாறை கொண்ட இந்நிறுவனம், 1922ல் தயாரிப்புகளை விற்பனை செய்ய தொடங்கி, 1951ல் உள்ளூர் உற்பத்தியை தொடங்கியது.
அப்போது, 'மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்துக்கு ஸ்பார்க் பிளக்குகள் மற்றும் டீசல் எரிபொருள் செலுத்தும் பம்புகளை தயாரிக்க பாஷ் உரிமம் வழங்கியது. 2003ல் மைக்கோ நிறுவனம் 'பாஷ் லிமிடெட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பாஷ் குழுமத்தின் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக தொடர்கிறது.
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட தாய் நிறுவனமான ராபர்ட் பாஷ் ஜி.எம்.பி.ஹெச்., தனியார் நிறுவனமாகும். இதன் 94 சதவீத பங்குகளை 'ராபர்ட் பாஷ் ஸ்டிப்டுங்' என்ற தொண்டு அறக்கட்டளை வைத்துள்ளது.
மீதமுள்ள பங்குகளை பாஷ் குடும்பமும் நிறுவனமும் வைத்துள்ளன. எனவே, உலகளாவிய தாய் நிறுவனம் எந்த பங்கு சந்தையிலும் பட்டியலிடப்படவில்லை.
பாஷ் லிமிடெட்
இந்தியாவில் இயங்கும் பாஷ் குழும நிறுவனங்களில், 'பாஷ் லிமிடெட்' மட்டுமே பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியர்கள் பலர் இந்நிறுவனத்திடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்கியதில்லை என்றபோதிலும், நாட்டில் இயங்கும் பெரும்பாலான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பாஷ் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் இடம்பெற்றுள்ளன.
தயாரிப்புகள்
மொபிலிட்டி சொல்யூஷன்ஸ்: நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 89 சதவீதம் பங்களிக்கும் பிரிவு இது. கார், இருசக்கர மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் எரிபொருள் செலுத்தும் அமைப்புகள், ஸ்பார்க் பிளக்குகள், ஸ்டார்ட்டர்கள், சென்சார்கள், ஏ.பி.எஸ்., மற்றும் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் பிரேக்கிங் அமைப்புகளை தயாரிக்கிறது.
டூ-வீலர் மற்றும் பவர்ஸ்போர்ட்ஸ்: இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் செலுத்தும் அமைப்புகள் மற்றும் சென்சார் பாகங்களை தயாரிக்கிறது. புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளால் கூடுதல் சென்சார்களுக்கான தேவை அதிகரித்ததால், 2026ம் நிதியாண்டில் 69 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நுகர் பொருட்கள்: டிரில்லிங் மெஷின்கள், கட்டர்கள் உள்ளிட்ட பாஷ் பிராண்டு மின்சார கருவிகள் இப்பிரிவில் விற்பனை செய்யப்படுகின்றன.
முக்கிய முன்னேற்றங்கள் மின்சார வாகன மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 2026ல் பாஷ் லிமிடெட் மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமாக, இணை நிறுவனமான 'பாஷ் சேசிஸ் சிஸ்டம்ஸ் இந்தியா' நிறுவனத்தை அதிகபட்சமாக 9,069 கோடி ரூபாய்க்கு முழுமையாக கையகப்படுத்த, ஏப்ரல் மாதம் வாரியம் ஒப்புதல் வழங்கியது.
நெதர்லாந்து, அமெரிக்காவிலுள்ள பாஷ் குழும நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்த ஆர்.பி.ஐ.சி., தற்போது பாஷ் லிமிடெட் கீழ் கொண்டு வரப்படுகிறது. இதனால் பாதுகாப்பு, ஏ.பி.எஸ்., மின்னணு ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பிரேக்கிங் தொழில்நுட்பங்கள் நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரும். 2025ம் நிதியாண்டில் ஆர்.பி.ஐ.சி., 3,936 கோடி ரூபாய் வருவாயும், 546 கோடி ரூபாய் நிகர லாபமும் ஈட்டியுள்ளது.
மாறும் தேவைகள் பெட்ரோல், டீசல் அல்லது பேட்டரி என எந்த ஆற்றலில் வாகனம் இயங்கினாலும், பாதுகாப்பு மற்றும் பிரேக்கிங் அமைப்புகள் தொடர்ந்து தேவைப்படுகின்றன. ஆனால், மின்சார வாகனங்களில் பாரம்பரிய எரிபொருள் செலுத்தும் பாகங்களுக்கான தேவை குறையலாம்.
இதனால், ஆர்.பி.ஐ.சி.,யை இணைப்பது பாஷ் நிறுவனத்தின் வருவாய் அடித்தளத்தை விரிவுபடுத்துவதுடன், வழக்கமான இஞ்சின் பாகங்களை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைக்க உதவும்.
கூட்டணி வர்த்தக வாகன உதிரிபாக சந்தையில் தனது பங்கை அதிகரிக்க, சென்னையை சேர்ந்த டி.எஸ்.எப்., குழுமத்தின் பிரிவுகளான பிரேக்ஸ் இந்தியா மற்றும் வீல்ஸ் இந்தியா நிறுவனங்களுடன் பாஷ் 50:50 சமபங்கு கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கனரக லாரிகள், பேருந்துகளுக்கான அடுத்த தலைமுறை காற்றழுத்த கருவிகள், காற்று இடைநீக்க அமைப்புகள், பார்க்கிங் பிரேக்குகளை உருவாக்குவதே இதன் நோக்கம்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட புதிய கூட்டு நிறுவனம், ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு பின் 2026ம் ஆண்டு இறுதிக்குள் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக கண்ணோட்டம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பாஷ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 22 சதவீதம் அதிகரித்து 5,840 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு லாப விகிதம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக 14 சதவீதமாக நீடித்துள்ளது.
பயணியர் மற்றும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பவர்ஸ்போர்ட்ஸ் மற்றும் சந்தைக்குப் பிந்தைய விற்பனைப் பிரிவுகளின் வளர்ச்சியும், பிரீமியம் தயாரிப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவையும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
எதிர்பார்ப்புகள் உள்நாட்டு ஆட்டோமொபைல் துறையின் சாதகமான தேவை, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் 'கபே கட்டம் 3', வர்த்தக வாகனங்களுக்கான ஏடாஸ் விதிமுறைகள் ஆகியவை பாஷ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவலாம்.
'சேசிஸ் சிஸ்டம்ஸ்' கையகப்படுத்தல், டாடா ஆட்டோகாம்ப் நிறுவனத்துடனான மின்சார வாகன கூட்டணி, பிரேக்ஸ் இந்தியா மற்றும் வீல்ஸ் இந்தியாவுடனான வர்த்தக வாகன கூட்டு முயற்சி ஆகியவை பெட்ரோல், டீசல், ஹைப்ரிடு மற்றும் மின்சார வாகனப் பிரிவுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்றன.
பிரீமியம் தயாரிப்புகள், சந்தைக்கு பிந்தைய விற்பனை மீட்பு, ஏற்றுமதி ஆகியவை கூடுதல் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையலாம்.
எதிர்கொள்ளும் சவால்கள் பாஷ் நிறுவனத்தின் முக்கிய அபாயம், மின்சார வாகன மாற்றத்தால் அதன் பாரம்பரிய எரிபொருள் வாகன பாகங்களுக்கான தேவை குறைவதாகும்.
இந்தியாவில் வாகனங்கள் படிப்படியாக மின்சாரத்திற்கு மாறும் நிலையில், இப்பாகங்களுக்கான தேவை குறையக்கூடும். இது சந்தை போட்டியால் ஏற்படும் சாதாரண அபாயம் அல்ல; தொழில்நுட்ப மாற்றத்தால் உருவாகும் நீண்டகால வணிக சவாலாகும்.
இதனை சமாளிக்கவே ஆர்.பி.ஐ.சி., நிறுவனத்தை கையகப்படுத்தல் மற்றும் மின்சார வாகன கூட்டணி உள்ளிட்ட நடவடிக்கைகளை பாஷ் முன்னெடுத்து வருகிறது.
![]() |
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ, எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம். வாங்கிக்கொண்டு இருக்கலாம். அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்து்கொள்ளவும்.

