ADDED : செப் 13, 2026 02:54 AM

கடந்த 1992ம் ஆண்டு நிறுவப்பட்ட என்.எஸ்.இ., பங்கு சந்தை, மின்னணு மற்றும் வெளிப்படையான வர்த்தக முறையை கொண்டு வந்து இந்திய நிதி சந்தையை நவீனப்படுத்தியதில் பெரும் பங்காற்றியுள்ளது. பங்கு வர்த்தகம், டெரிவேட்டிவ்ஸ், கரன்சி வர்த்தகம் மற்றும் பல்வேறு நிதி சார்ந்த வர்த்தக தளமாக செயல்படும் இதன் முதன்மை குறியீடனான 'நிப்டி 50' முதலீட்டாளர்களால் பரவலாக கவனிக்கப்படுகிறது.
தேசிய பங்கு சந்தையான என்.எஸ்.இ.,யில் பதிவு செய்த தனித்துவ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 13 கோடியை கடந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 26.40 சதவீதம் என்ற வேகத்தில் வளர்ந்துள்ளது. உலகளாவிய டெரிவேட்டிவ்ஸ் பிரிவில், வர்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் 2025ம் ஆண்டில் மட்டும் உலக சந்தையில் கிட்டத்தட்ட 50.60 சதவீத பங்கை பெற்று என்.எஸ்.இ., சாதனை படைத்துள்ளது.
என்.எஸ்.இ.,யின் முக்கிய வணிக பிரிவுகள் 1 பரிவர்த்தனை கட்டணங்கள்: ஈக்விட்டி, டெரிவேட்டிவ்ஸ் மற்றும் கடன் சந்தைகளில் எலக்ட்ரானிக் வர்த்தக சேவைகளை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 79 சதவீத வருவாயை தருகிறது. குறிப்பாக, ஆப்ஷன்ஸ் வர்த்தகம் 49 சதவீத சி.ஏ.ஜி.ஆர்., வருவாய் வளர்ச்சியை பதிவு செய்து, அதிக வருவாய் தரும் பிரிவாக உருவெடுத்துள்ளது.
என்.எஸ்.இ.,யின் ஈக்விட்டி ஆப்ஷன்ஸ் பிரிவில் மார்ச் 2016ல் 5,000 ரூபாயாக இருந்த கட்டணம், 2026 மார்ச்சில் 3,553 ரூபாயாக குறைந்துள்ளது. பியூச்சர்ஸ் பிரிவில் 200 ரூபாயில் இருந்து 183 ரூபாயாக குறைந்துள்ள நிலையில், ரொக்க சந்தை பிரிவில் மாற்ற மின்றி கிட்டத்தட்ட 300 ரூபாய் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
2 பட்டியலிடும் சேவைகள்: நிறுவனங்கள், ஈக்விட்டி மற்றும் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு ஏதுவாக பங்குகளை பட்டியலிடும் வசதியை ஏற்படுத்தி தருகிறது.
3 கிளியரிங்க் மற்றும் செட்டில்மென்ட் சேவைகள்: என்.எஸ்.இ., கிளியரிங் நிறுவனம் வாயிலாக பரிவர்த்தனைகளை தீர்த்து வைத்தல், கணக்குகளை முடித்தல் மற்றும் இடர் மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது.
4 கோ-லொகேஷன் வசதி: புரோக்கர்கள் தங்களது வர்த்தக சர்வர்களை என்.எஸ்.இ., வளாகத்திலேயே அமைத்து கொள்ளும் இச்சேவையால் அதிவேக அல்கோ வர்த்தகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. இதற்காக ரேக் ஸ்பேஸ், நெட்வொர்க் மற்றும் பராமரிப்பு கட்டணங்களை வசூலிக்கிறது.
5 இண்டெக்ஸ் வர்த்தகம்: ' என்.எஸ்.இ., இண்டீசஸ்' வாயிலாக நிப்டி 50 உள்ளிட்ட முக்கிய துறைசார்ந்த மற்றும் தீமேட்டிக் குறியீடுகளை வடிவமைத்து நிர்வகித்து வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் என்.எஸ்.இ.,யின் எப்& ஓ., பிரிவில் வர்த்தகர்களின் எண்ணிக்கை 0.14 கோடியிலிருந்து 6 மடங்கு அதிகரித்து 0.85 கோடியாகவும், கேஷ் மார்க்கெட்டில் 0.9 கோடியிலிருந்து 4 மடங்கு அதிகரித்து 3.60 கோடியாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.
கோ-லொகேஷன் சர்ச்சை பின்னணி கடந்த 2012-2014 காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சில பெரிய வர்த்தகர்களுக்கு ரகசிய 'டார்க் பைபர்' கேபிள்கள் வாயிலாக என்.எஸ்.இ.,யின் சர்வர் டேட்டா முன்கூட்டியே கிடைக்க பெற்றதாக முறைகேடு புகார்கள் எழுந்தன. இதுகுறித்து செபி நடத்திய விசாரணையை தொடர்ந்து, என்.எஸ்.இ.,யின் ஐ.பி.ஓ., வரைவு அறிக்கை திரும்ப பெறப்பட்டு 10 ஆண்டுகளாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது. 2026ம் ஆண்டு 1,491 கோடி ரூபாய் செலுத்தி செபியுடன் சமரசம் செய்யப்பட்ட பிறகே இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
இந்திய பங்குச்சந்தை நிலவரம் இந்திய பங்கு சந்தை என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., ஆகிய இரு பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. கேஷ் மார்க்கெட்டில் 93 சதவீத பங்கையும், பியூச்சர்ஸ் மற்றும் ஸ்டாக் ஆப்ஷன்ஸில் கிட்டத்தட்ட 100 சதவீத சந்தை பங்கையும் பெற்று என்.எஸ்.இ., ஆதிக்கம் செலுத்துகிறது.
வளர்ச்சிக்கு உதவும் முக்கிய காரணிகள்: 1 நாட்டின் மக்கள் தொகையில் 13.45 சதவீதம் பேர் மட்டுமே பங்கு சந்தையில் நேரடி முதலீடு செய்துள்ளனர். 2021ல் இருந்து 4 மடங்கு அதிகரித்துள்ள எஸ்.ஐ.பி.,யின் ஏ.யு.எம்., வளர்ச்சி, 2030க்குள் 29 லட்சம் கோடி ரூபாயை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
2 நிறுவனங்கள் வங்கிக் கடன்களை மட்டுமே சார்ந்திருக்காமல், மூலதன சந்தை வாயிலாக எளிதாக நிதி திரட்டுவது வேகமாக அதிகரித்து வருகிறது.
எதிர்கால வளர்ச்சிக்கான காரணிகள்: 1 கமாடிட்டி சந்தையில் என்.எஸ்.இ.,யின் தினசரி வர்த்தகம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
2 கிளியரிங், மார்க்கெட் டேட்டா விற்பனை, கோ-லொகேஷன், இண்டெக்ஸ் உரிம கட்டணங்களால் கூடுதல் வருவாய் ஈட்டுகிறது.
3 கிப்ட் சிட்டியில் உள்ள என்.எஸ்.இ., ஐ.எக்ஸ்., துணை நிறுவனம் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் 99.81 சதவீத சந்தை பங்கை கொண்டு உலகளாவிய முதலீட்டாளர்களை கவர்ந்து வருகிறது.
முக்கிய சவால்கள்: 1 எப்& ஓ., பிரிவில் ரீடெய்ல் வர்த்தகர்களின் அதிக ரிஸ்க்கை கட்டுப்படுத்த செபி எடுத்த நடவடிக்கைகளால் (லாட் அளவு அதிகரிப்பு, வாராந்திர காலாவதி குறைப்பு, கூடுதல் எஸ்.டி.டி., வரி), 2026ம் நிதியாண்டில் இண்டெக்ஸ் ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்கள் 52 சதவீதம் சரிவடைந்தன.
2 ஈக்விட்டி இண்டெக்ஸ் ஆப்ஷன்ஸ் பிரிவில் பி.எஸ்.இ., தனது காலாவதி சுழற்சியை மாற்றி 28 சதவீத சந்தை பங்கை கைப்பற்றி என்.எஸ்.இ.,க்கு சவாலாக உருவெடுத்துள்ளது.
3 அக்டோபர் 2024 முதல் சலுகை கட்டண முறை கைவிடப்பட்டு 'ப்ளாட் ரேட்' கட்டண முறை நடைமுறைக்கு வந்தது.
லாப வரம்பு நிலவரம் என்.எஸ்.இ.,யின் லாப வரம்புகள் கடந்த சில வருடங்களாக சீராகவே நீடித்த நிலையில், செபியின் புதிய விதிமுறை கட்டுப்பாடுகள் காரணமாக 2026ம் நிதியாண்டில் மட்டும் லாபம் சரிவை கண்டது.
ஐ.பி.ஓ., நிலவரம் இது 100 சதவீதம் ஆபர் பார் சேல் முறையில் மட்டுமே வெளியிடப்படுகிறது. இதில் புதிய பங்கு வெளியீடு எதுவும் இல்லை. எஸ்.பி.ஐ., எம்.எஸ்., ஸ்ட்ராடஜிக், கனடா பென்ஷன் பிளான், அரண்டா இன்வெஸ்ட்மென்ட்ஸ், பேங்க் ஆப் பரோடா மற்றும் ஜி.ஐ.சி., ஆகியவை முக்கிய பங்கு விற்பனையாளர்களாக உள்ளனர்.
முடிவுரை என்.எஸ்.இ., என்பது இந்தியாவின் மூலதன சந்தையில் ஒரு தனிப்பெரும் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகும். டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தின் மீதான அதிக சார்பும் செபியின் கொள்கை மாற்றங்களும் குறுகிய காலத்தில் வருவாயில் நிலையற்ற தன்மையை உருவாக்கினாலும், நீண்டகால நோக்கில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி வலுவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பொறுப்பு துறப்பு இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.
