தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமிடும் 'டைட்டன்'

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமிடும் 'டைட்டன்'

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமிடும் 'டைட்டன்'


UPDATED : ஆக 23, 2026 03:03 AM

ADDED : ஆக 23, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 03:03 AM ADDED : ஆக 23, 2026 02:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டாடா' மற்றும் 'டிட்கோ' இணைந்து, 1984ல் தொடங்கிய 'டைட்டன்', டாடா குழுமத்தின் இரண்டாவது பெரிய 'லைப்ஸ்டைல்' நிறுவனமாகும். வாட்ச் தயாரிப்பில் தொடங்கி நகைகள், ஸ்மார்ட் சாதனங்கள், மூக்கு கண்ணாடிகள், ஆடைகள் என விரிவடைந்த இதன் வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் மேல், நகை வணிகத்தின் வாயிலாகவே கிடைக்கிறது.

ஒழுங்கமைக்கப்படாத சந்தைகளில் புகுந்து, நவீன விற்பனையகங்கள் வாயிலாக மக்களின் நம்பிக்கையை பெற்றதே இதன் வெற்றியாகும். நகைகள், கைக்கடிகாரங்கள் முதன்மை வருவாய் தர, 'ஐ-கேர்' மற்றும் புதிய வணிகங்கள் இதன் எதிர்கால வளர்ச்சிக்கு உதவுகின்றன.

நகை விற்பனை பிரிவு

டைட்டன் நிறுவனம், 'தனிஷ்க், மியா, கேரட்லேன், ஸோயா' ஆகிய பிராண்டுகள் வாயிலாக நகைகளை வழங்குகிறது.

'டமாஸ் ஜூவல்லரி' நிறுவனத்தின் 67 சதவீத பங்குகளை வாங்கியதன் வாயிலாக, வளைகுடா சந்தையில் தடம் பதித்துள்ள இந்நிறுவனம், உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

Image 1611842


கடிகார வணிக பிரிவு

டைட்டனின் தொடக்கக்கால முன்னணி வணிகமான கைக்கடிகார பிரிவு, இன்றும் இந்தியாவின் வலிமையான பிராண்டாக விளங்குகிறது. இந்நிறுவனம் 'டைட்டன், பாஸ்ட்ராக், சொனாட்டா, ஹீலியோஸ், ராகா, சைலிஸ், நெபுலா' ஆகிய பிராண்டுகள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கைக்கடிகாரங்களை வழங்கி வருகிறது.

பிரீமியம் கடிகாரங்களை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் உத்தியில் கவனம் செலுத்தும் டைட்டன், ஹீலியோஸ் வாயிலாக பல பிராண்டுகள் அடங்கிய விற்பனை கட்டமைப்பையும் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்திய நுகர்வோர் கைக்கடிகாரங்களை வெறும் நேரத்தை காட்டும் கருவியாக பார்க்காமல், பேஷன் மற்றும் பிரீமியம் அணிகலன்களாக பார்க்க தொடங்கியுள்ளனர். இந்த உருமாற்றம் சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கண் பராமரிப்பு பிரிவு



டைட்டன் நிறுவனம் 2007ல் 'டைட்டன் ஐ-பிளஸ்' வாயிலாக மூக்குக்கண்ணாடி சில்லறை விற்பனை சந்தையில் களமிறங்கியது. இவ்வணிக பிரிவு மூக்கு கண்ணாடிகள், சூரிய ஒளி கண்ணாடிகள், பிரேம்கள், லென்ஸ்கள், கான்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் கண் பரிசோதனை சேவைகளை வழங்கி வருகிறது.

பிற வணிக பிரிவுகள்

தனீரா: டைட்டனின் பாரம்பரிய இந்திய ஆடைகளுக்கான பிராண்டு

ஸ்கின்: நறுமண திரவியங்களுக்கான பிராண்டு

ஈர்த் : பெண்களுக்கான கைப்பை மற்றும் ஆபரண பொருட்கள்

டீல்: ஆட்டோமேஷன் தீர்வுகள், தொழிற்துறை உற்பத்தி சேவைகள் மற்றும் துல்லிய பொறியியல் ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறது.

'ஐ -கேர்'ன் செயல்திறன்

ஆரம்பத்தில் மந்தமாக இருந்த இப்பிரிவின் செயல்திறன், தற்போது மேம்பட்டு வருகிறது. 2025-2026ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், 2026-2027ம் நிதியாண்டிலும் இந்த வளர்ச்சி நீடிக்கும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது. சர்வதேச பிராண்டுகளுடனான கூட்டணி வாயிலாக இப்பிரிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சவால்கள்

கடிகாரம் மற்றும் 'ஐ-கேர்' துறைகள் செயல்பாட்டில் இருந்தாலும், டைட்டனின் ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பீடு, நகை வணிகத்தையே முதன்மையாக நம்பியுள்ளது. நகை வர்த்தகம் மந்தமடைந்தால், அதை சரிகட்டும் அளவிற்கு மற்ற துறைகள் இன்னும் விரிவடையவில்லை.

ஒட்டுமொத்த நகை வருவாய் அதிகரித்திருந்தாலும், தங்கம் விலை உச்சம் தொட்டதால் நடுத்தர மற்றும் பட்ஜெட் ரக நகைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, 2025-2026ம் நிதியாண்டில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை ஒற்றை இலக்க வளர்ச்சியிலேயே முடிந்துள்ளது.

தேசிய பிராண்டுகளின் வேகமான விரிவாக்கமும், வட்டார நகைக்கடைகளின் வலுவான பிணைப்பும் கடும் போட்டியை தருகின்றன. டைட்டன் சிறிய நகரங்களை நோக்கி நகர்வதால், அங்குள்ள உள்ளூர் வியாபாரிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது முக்கிய சவாலாகும்.

புதிய வர்த்தக முயற்சிகள்

புதிய விற்பனையகங்கள், விரிவாக்கம், வடிவமைப்பு திறன்கள் மற்றும் வினியோக தொடரில் முதலீடு செய்து வரும் டைட்டன், வட்டார தேவைகளுக்கான வடிவமைப்பு மற்றும் சொகுசு ரகங்களில் கவனம் செலுத்துகிறது. வட அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் சர்வதேச விரிவாக்கம் செய்வதுடன், 'பியான்' பிராண்டு வாயிலாக ஆய்வக வைரங்கள் துறையிலும் களமிறங்கியுள்ளது.

ஒட்டுமொத்த பார்வை

நகை சந்தையின் முறைசார்ந்த வளர்ச்சி, பிரீமியம் ரக மாற்றம், தனிஷ்க் மற்றும் கேரட்லேன் விரிவாக்கம், வலுவான பிராண்டு மதிப்பு வாயிலாக, டைட்டன் நிறுவனம் நீண்டகால நிலையான வளர்ச்சிக்கு சாதகமான நிலையில் உள்ளது.

வாட்சுகள், ஐ--கேர், சர்வதேச வர்த்தகம், புதிய வாழ்க்கை முறை பிரிவுகள் மற்றும் டீல் நிறுவனம் ஆகியவை கூடுதல் வளர்ச்சி வாய்ப்புகளை தருகின்றன. தங்கம் விலை ஏற்ற இறக்கம் மற்றும் போட்டி சவால்கள் இருந்தாலும், நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட முயற்சிகள் மற்றும் சந்தை பலம் அதன் நீண்டகால முதலீட்டு கண்ணோட்டத்தை நேர்மறையாக உறுதிப்படுத்துகின்றன.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

நிதிநிலை அறிக்கை நிதி ஆண்டு வாரியாக முக்கிய நிதி அளவீடுகள் 2021--22 2022--23 2023--24 2024--25 2025--26 வருவாய் (ரூ.கோடியில்) 28,799 40,575 51,084 60,456 87,584 வளர்ச்சி (%) - 41 26 18 45 எபிட்டா (ரூ.கோடியில்) 3,344 4,882 5,292 5,694 8,357 வரம்பு (%) 12 12 10 9 10 வரிக்கு பிந்தைய லாபம் (ரூ.கோடியில்) 2,198 3,274 3,496 3,337 5,073 வரம்பு (% ) 8 8 7 - -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us