தங்கம் - வெள்ளி எதை வாங்குவது? முடிவெடுக்க சூப்பர் சூத்திரம்
தங்கம் - வெள்ளி எதை வாங்குவது? முடிவெடுக்க சூப்பர் சூத்திரம்
ADDED : அக் 12, 2025 11:31 PM

இந்தியர்கள் பல நுாற்றாண்டுகளாக வீட்டிலும், தங்கத்திலும் முதலீடு செய்து வந்துள்ளனர். அதை அவர்கள் சொத்தாகப் பார்க்கின்றனர். இப்போதும், 67 சதவீத இந்திய குடும்பங்கள், ஒரு வீட்டையேனும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். 94 சதவீத குடும்பங்களில் ஏதேனும் ஒரு தங்க உருப்படியேனும் சொந்தமாக இருக்கிறது.
தங்கத்தை யாரும் உலோகமாக பார்ப்பதில்லை. அது சுபிட்சத்தின் அடையாளம், திருமணங்கள், விழாக்களின் முக்கிய அங்கம், அதே சமயத்தில் சேமிப்புக்கு உகந்தது.
இந்தியக் குடும்பங்களில் இருக்கும் மொத்த தங்கத்தின் அளவு, கிட்டத்தட்ட 25,000 டன்கள். அதாவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தோராயமாக 17.20 கிராம் தங்கம் இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு டாலரில், 3.08 டிரில்லியன். அதாவது கிட்டத்தட்ட 27,30,12,89,40,00,000 ரூபாய்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விட, இந்திய குடும்பங்களிடம் இருக்கும் தங்கம் அதிம். குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் தங்கம் இருக்கிறது.
ஆனால், ஆர்.பி.ஐ., யிடமோ, 880 டன்கள் மட்டுமே இருக்கின்றன. இதன் மதிப்பு, 62,94,56,61,94,900 ரூபாய். இது, இந்தியாவின் அன்னிய நாணய கையிருப்பில் 12 சதவீதம்.
விலை உயர்வு
தங்கம், தொடர்ச்சியாக முதலீட்டாளர்களுக்கு பல ஆண்டுகளாக லாபத்தைத் தந்திருக்கிறது:
கடந்த 10 ஆண்டுகள், தங்கத்தின் விலை ஒவ்வோராண்டும், 13.60 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், தங்கம் ஒவ்வோராண்டும் 14.16 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளியின் புகழும் உயர்ந்து வருகிறது. அதை ஒரு முதலீட்டு வாகனமாக பலரும் கருதுவதே இதற்குக் காரணம். கடந்த 10 ஆண்டுகளில், வெள்ளி, ஒவ்வோராண்டும், 10.80 சதவீத வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
பல வங்கிகளும் நிறுவனங்களும் கூட, வெள்ளியை வாங்கிச் சேமிக்க ஆரம்பித்துவிட்டன. அது வெறும் முதலீட்டுக்காக மட்டும் சேமிக்கப்படுவதில்லை, அதன் தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் வாங்கப்படுகிறது
கடந்த இரண்டு ஆண்டுகளில், தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு இருமடங்கு ஆகிவிட்டது. இதில் எது சிறப்பான முதலீடு என்ற விவாதமே முதலீட்டாளர் மத்தியில் உருவாகிவிட்டது.
எப்படி முடிவெடுப்பது? இந்த முடிவை எடுப்பதற்கு, ஆண்டாண்டு காலமாக முதலீட்டாளர்கள் ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்தச் சூத்திரம் இது தான்:
தங்கத்தின் ஒரு கிராம் விலை ÷ வெள்ளியின் ஒரு கிராம் விலை
உதாரணமாக, தங்கம் ஒரு கிராமின் விலை 11,500 ரூபாய், வெள்ளி ஒரு கிராமின் விலை 190 ரூபாய்
அப்படி எனில்
11,500 ÷ 190 = 60.53, (61)
இந்த விகிதத்தை இப்படிப் புரிந்துகொள்ளலாம்:
78க்கு மேலே வெள்ளியின் மதிப்பு குறைவு வெள்ளியை வாங்கலாம்
70க்கு கீழே தங்கத்தின் மதிப்பு குறைவு தங்கத்தை வாங்கலாம்.
முக்கியமான விஷயம்
தங்கத்துக்கு சர்வதேச மதிப்பு இருக்கிறது. நிலையான சொத்து. பாரம்பரியமாக இதற்கு மதிப்பு உண்டு
வெள்ளியின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால், நல்ல வளர்ச்சி தரும். அதுவும் தொழில்துறையினர் தேவை அதிகமாகும் போது, விலை உயரும்.
உங்கள் போர்ட்போலியோவில் தங்கமும், வெள்ளியும் இருக்க வேண்டும். ஆனால், மேலே சொன்ன விதிமுறைகள் மனதில் இருக்கட்டும். அதேசமயம், சர்வதேச சம்பவங்கள், நாணய விலையில் ஏற்ற இறக்கம், பொருளாதார அதிர்ச்சிகள் நிச்சயம் இவற்றின் விலையில் தாக்கம் ஏற்படுத்தும்.
சிறந்த வழி என்ன?
பரவலாக்குங்கள். உங்களுடைய நிதி இலக்குகள் மற்றும் ஆபத்தை ஏற்றுக்கொள்ளும் சக்திக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில், தங்கத்தையும், வெள்ளியையும் வைத்திருங்கள்.
சி.கே.சிவராம்
நிறுவனர், ஐகுளோபல் ஆல்டர்நேட்