தங்கம், வெள்ளி கடந்த 7 மாதங்களில் இல்லாத புதிய சரிவு
தங்கம், வெள்ளி கடந்த 7 மாதங்களில் இல்லாத புதிய சரிவு
ADDED : ஜூன் 26, 2026 11:18 PM

உலக பொருளாதார மந்தநிலை மற்றும் அமெரிக்க டாலரின் அதீத ஏற்றம் காரணமாக, நடப்பு 2026ம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி ஈட்டிய ஒட்டுமொத்த லாபமும் ஒரே வாரத்தில் காணாமல் போயுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தையில் இரு உலோகங்களும் கடந்த 7 மாதங்களில் இல்லாத புதிய சரிவை சந்தித்துள்ளன.
வெள்ளி விலை
'காமெக்ஸ்' சந்தையில், வெள்ளி அவுன்ஸிற்கு 56.50 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜனவரியின் வரலாற்று உச்சமான 121.62 டாலரிலிருந்து இது 53 சதவீதம் சரிவாகும்
எம்.சி.எக்ஸ்., சந்தையில், கிலோ வெள்ளி விலை 2.10 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. ஜூன் தொடக்கத்தின் உச்சமான 2.65 லட்சம் ரூபாயிலிருந்து இது 20 சதவீதத்துக்கு மேல் சரிவாகும்.
தங்கம் விலை 'காமெக்ஸ்' சந்தையில், தங்கம் அவுன்ஸிற்கு 4,002 டாலராக குறைந்துள்ளது. ஜனவரி 28ன் வரலாற்று உச்சமான 5,589 டாலரிலிருந்து இது 28.30 சதவீதம் சரிவாகும்
எம்.சி.எக்ஸ்., சந்தையில், 10 கிராம் தங்கம் விலை 1.41 லட்சம் ரூபாயாக இறங்கியுள்ளது. மார்ச் மாத உச்சமான 1.64 லட்சம் ரூபாயிலிருந்து இது 14.20 சதவீத சரிவாகும்.
எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்
இது தற்காலிக விலை திருத்தமே தவிர, நிரந்தர வீழ்ச்சி அல்ல என்பதால், முதலீட்டாளர்கள் கலக்கம் கொள்ள வேண்டாம். தற்போதைய டாலர் உயர்வால் தங்கம், வெள்ளி மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது. டெக்னிக்கல் ரீதியாக, தங்கம் 4,000 டாலருக்கு கீழ் சரிந்துள்ளதால், குறுகிய காலத்தில் 3,860 டாலர் வரையும்; வெள்ளி 60 டாலர் எல்லையை உடைத்துள்ளதால், அடுத்து 40 - 50 டாலர் வரையும் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
எனவே, முதலீட்டாளர்கள் தற்போதைக்கு அவசரப்படாமல் கொஞ்சம் பொறுத்திருந்து எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது. முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வைக்கலாம். ஏற்கனவே குறைந்த விலையில் வாங்கியவர்கள் கொஞ்சமாக லாபத்தை பணமாக்கலாம்.
-அருள்முருகன் மூத்த ஆராய்ச்சி அதிகாரி
குட்வில் வெல்த் மேனேஜ்மென்ட்
* அமெரிக்காவில் கடந்த மே மாதத்திற்கான பணவீக்கம் 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது
* வட்டி விகிதங்களை பெடரல் வங்கி இந்த ஆண்டில் மேலும் 3 முறை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு
* வட்டி விகிதங்கள் உயரும் போது, வட்டி தராத தங்கம், வெள்ளி போன்ற முதலீடுகளின் மீதான ஆர்வம் குறையும் என்கிற கணிப்பு
* சீனாவில், கடந்த மே மாதத்தில், ஹாங்காங் வழியிலான தங்க இறக்குமதி கிட்டத்தட்ட 38 சதவீதம் குறைந்துள்ளது. இது சந்தையில் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளதை காட்டுகிறது.
