உரிமை கோராத பணத்தை கண்டறிய அரசின் ஒருங்கிணைந்த இணையதளம்
உரிமை கோராத பணத்தை கண்டறிய அரசின் ஒருங்கிணைந்த இணையதளம்
ADDED : ஜூன் 02, 2026 07:15 AM

பல்வேறு நிதி திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, உரிமை கோரப்படாமல் முடங்கி கிடக்கும் பணத்தை, வாடிக்கையாளர்கள் எளிதாக கண்டுபிடித்து மீட்பதற்காக, ஒருங்கிணைந்த புதிய இணையதளத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
'உங்கள் பணம், உங்கள் உரிமை' என்ற திட்டத்தின் கீழ், 'பி.எஸ்.பி., அலையன்ஸ்' அமைப்புடன் இணைந்து https://www.unclaimedassetsportal.in/public/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள், காப்பீடுகள் அல்லது பங்குகளில் முதலீடு செய்துவிட்டு காலப்போக்கில் மறந்துபோன மற்றும் வாரிசுகளுக்கு தெரிவிக்க மறந்து இறந்த வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை, இந்த இணையதளம் வாயிலாக தேடி கண்டுபிடித்து மீட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில், உரிமை கோரப்படாத டிபாசிட்களை கண்டறிய, ரிசர்வ் வங்கி அண்மையில் தொடங்கிய, 'உத்கம்' இணையதளம் இணைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு தொகையை கண்டறிய, 'பீமா பரோசா' மற்றும் மியூச்சுவல் பண்டுகள் முதலீடுகளை கண்டறிய, 'மித்ரா' உள்ளிட்ட இணையதளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
