ADDED : அக் 22, 2025 12:30 AM

கிரெடிட் கார்டு கிரேஸ் பீரியடு என்பது, வட்டி இல்லாமல் கடனை திருப்பிச் செலுத்த வழங்கப்படும் கால அவகாசம் ஆகும். இதில், பொதுவாக கவனிக்க வேண்டியவை:
வட்டி இல்லாத சலுகை
அசல் கடன் தொகையை முழுதுமாகச் செலுத்திவிட்டால், இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி எதுவும் விதிக்கப்படாது.பகுதியளவு பணம் செலுத்தினால், இந்தச் சலுகை நீங்கிவிடும், வட்டி உடனடியாக ஆரம்பித்துவிடும்.
பணம் எடுக்க விதிவிலக்கு
ஏ.டி.எம்.,-களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பணம் எடுத்தால், அதற்கு இந்த கிரேஸ் பீரியட் கிடையாது. பணம் எடுத்த உடனே அதற்கான கட்டணம் மற்றும் வட்டி விதிக்கப்படும். அதனால், இது அவசரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சீரான பேமென்ட் முக்கியம்
ஒரு தவணையைத் தவறவிட்டால்கூட, அது கிரெடிட் ஸ்கோரை வெகுவாகப் பாதிக்கும். தாமதக் கட்டணம், அதிக வட்டி விகிதம் மற்றும் கார்டுக்கான சலுகைகள் நீக்கம் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.
பில்லிங் சுழற்சி
ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு தனிப்பட்ட பில்லிங் சுழற்சி இருக்கும். பெரிய தொகைகளை செலவு செய்யும்போது, புதிய பில்லிங் சுழற்சியின் ஆரம்பத்தில் செய்தால், திருப்பிச் செலுத்த அதிக நாட்களும் அவகாசமும் கிடைக்கும்.
திட்டமிட்டுச் செயல்படுதல்
கி ரெடிட் கார்டைப் பயன்படுத்துவது என்பது, எதிர்காலத்தில் இருந்து பணம் கடன்பெறுவதற்குச் சமம். கட்டணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதியை ஒருபோதும் தவறவிடாமல் இருக்க, நினைவூட்டல்களை வைத்துக் கொள்ளலாம்; அல்லது ஆட்டோ-பே வசதியைப் பயன்படுத்தலாம்.