வீட்டுக்கான காப்பீடு: சரியாக தேர்ந்தெடுப்பது எப்படி?
வீட்டுக்கான காப்பீடு: சரியாக தேர்ந்தெடுப்பது எப்படி?
UPDATED : நவ 07, 2026 01:26 AM
ADDED : நவ 06, 2026 10:58 PM

நான், எனது மகள் மற்றும் என்னுடைய பெயரில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை சொந்த சேமிப்பிலிருந்து வாங்கி இருக்கிறேன். இந்த வீட்டுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளுமாறு கூறுகின்றனர். நான் எந்த வகையான வீட்டு காப்பீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்; எந்த நிறுவனத்திடமிருந்து வாங்கலாம்; என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் போன்றவற்றை விளக்கி சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- மின்னஞ்சல்
வீட்டு காப்பீடு பற்றி இன்னும் பலருக்கு தெரியவில்லை. உங்கள் மகளுக்காக நீங்கள் வாங்கியுள்ள சொத்தை பாதுகாக்க அக்கறை காட்டுவது பாராட்டுக்குஉரியது.
இந்த வீட்டுக்காக நீங்கள் கடன் வாங்கவில்லை என்பதால், அந்த அடிப்படையில் பதில் அளிக்கிறேன். எனவே, கடன் எதுவும் இல்லாத வீடு என்ற அடிப்படையில் பதில் அளிக்கிறேன்.
உங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். பெயர்தான் தீ காப்பீடே தவிர, வெள்ளம், நீர் சூழ்தல், வெடிவிபத்து போன்ற பல்வேறு ஆபத்துகளுக்கும் இதில் பாதுகாப்பு கிடைக்கும்.
எந்த வகை?
இதற்கு எளிமையான தேர்வு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., உருவாக்கியுள்ள 'பாரத் கிருஹ ரக் ஷா' என்ற தரப்படுத்தப்பட்ட வீட்டு காப்பீட்டு திட்டம்.
எல்லா பொது காப்பீட்டு நிறுவனங்களும், இந்த திட்டத்தை ஒரே பெயரிலும் ஒரே விதமான நிபந்தனை களுடனும் வழங்க வேண்டும். நிறுவனத்தின் பெயர் மட்டும் முன்னால் சேர்க்கப்படும்.
காப்பீட்டு பாதுகாப்பும் நிபந்தனைகளும் ஒன்றாக இருந்தாலும் பிரீமியம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடலாம். இந்த பாலிசி அல்லாமல், பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் மற்ற வீட்டு காப்பீட்டு பாலிசிகளையும் நீங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தில் வீட்டு கட்டடத்துக்கு மட்டுமோ, வீட்டிலுள்ள பொருட்களுக்கு மட்டுமோ அல்லது இரண்டுக்கும் சேர்த்தோ காப்பீடு எடுத்துக்கொள்ளலாம்.
நீங்களே அந்த வீட்டில் வசித்தால், கட்டடத்துக்கும் வீட்டு பொருட்களுக்கும் சேர்த்து காப்பீடு எடுக்கலாம். வாடகைக்கு விட்டிருந்தால் கட்டடத்துக்கும், நீங்கள் வழங்கியுள்ள மரச்சாமான்கள், மின்சாதனங்கள் போன்ற பொருட்களுக்கும் காப்பீடு எடுக்கலாம்.
வாடகைதாரர் தன்னுடைய பொருட்களுக்கு தனியாக காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.
வாகனங்கள் மோதுவது, மரங்கள் அல்லது விமானங்கள் போன்ற வெளிப்புற பொருட்கள் விழுந்து சேதம் ஏற்படுவது, கலவரம், வேலைநிறுத்தம், வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் சேதம், பயங்கரவாத செயல்கள் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு உண்டு.
இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் திருட்டுக்கும், சம்பவம் நடந்த ஏழு நாட்களுக்குள் நிகழ்ந்தால், பாதுகாப்பு கிடைக்கும்.
இவை அனைத்துக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளும் நிபந்தனைகளும் உண்டு. சில விலக்குகளும் உள்ளன. எனவே, பாலிசி எடுப்பதற்கு முன் அவற்றை புரிந்துகொள்வது முக்கியம்.
எவ்வளவு கவரேஜ்?
நீங்கள் வீட்டுக்கு கொடுத்த விலைக்கும் காப்பீட்டு தொகைக்கும் சம்பந்தம் இல்லை. அதாவது, வாங்கிய விலை, இன்று விற்றால் கிடைக்கக்கூடிய விலை ஆகியவற்றுக்கு அப்பால், கட்டடத்துக்கான காப்பீட்டு தொகையை நிர்ணயிப்பதற்கான அடிப்படை, சேதமடைந்த வீட்டை இன்றைய நிலையில் மீண்டும் கட்டுவதற்கு ஆகும் செலவுதான். பழுதுபார்க்க அல்லது மீண்டும் கட்டுவதற்கு உண்மையில் செலவாகும் தொகையின் அடிப்படையில்தான் கிளைம் வழங்கப்படும்.
வீட்டு பொருட்களுக்கு, கட்டடத்தின் காப்பீட்டு தொகையில், 20 சதவீதம், அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை, தானாகவே பாதுகாப்பு கிடைக்கும். கூடுதல் பிரீமியம் செலுத்தி, இந்த தொகையை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.
காப்பீட்டில் உள்ள ஆபத்து காரணமாக, வீட்டை வாடகைக்கு விட முடியாமல் போனால் வாடகை வருமான இழப்புக்கோ, வேறு வீட்டில் தற்காலிகமாக தங்க வேண்டியிருந்தால், அதற்கான வாடகைக்கோ கூடுதல் பாதுகாப்பு எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், காப்பீடு செய்தவருக்கும் அவரது வாழ்க்கை துணைக்கும் தலா 5 லட்சம் ரூபாய் விபத்து, மரண பாதுகாப்பும் கூடுதல் வசதியாக கிடைக்கிறது.
பொதுவாக சில தீ காப்பீட்டு பாலிசிகளில், வீட்டின் மதிப்பைவிட குறைவான தொகைக்கு காப்பீடு எடுத்திருந்தால், கிளைம் தொகையும் விகிதாசாரப்படி குறைக்கப்படலாம். இதற்கு 'அண்டர் இன்ஷூரன்ஸ்' என்று பெயர். பாரத் கிருஹ ரக் ஷா திட்டத்தில் இந்த விதி நீக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு சாதகமான அம்சம்.
எத்தனை ஆண்டுகளுக்கு?
இந்த காப்பீட்டின் இன்னொரு சிறப்பு, பிரீமியம் அதிகமில்லை என்பதுதான். ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்குக்கூட நீண்டகால பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இதனால், ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய கவலையும் இருக்காது.
எந்த நிறுவனத்தில் எடுக்கலாம் என்று கேட்டிருக்கிறீர்கள். பாரத் கிருஹ ரக் ஷா திட்டத்தின் அடிப்படை பாதுகாப்பு எல்லா நிறுவனங்களிலும் ஒன்றுதான் என்பதால், சில நிறுவனங்களின் பிரீமியம், சேவை வசதிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு தேர்வு செய்யலாம். வீடு உங்கள் இருவர் பெயரிலும் இருப்பதால், காப்பீட்டு விண்ணப்பத்தில் இருவரின் உரிமைகளையும் குறிப்பிடுங்கள்.
உங்கள் மகளுக்காக வாங்கிய வீட்டுடன், அதை பாதுகாக்கும் காப்பீட்டையும் சேர்த்து கொடுக்க நினைக்கிறீர்கள். இது அவருக்கு நீங்கள் அளிக்கும் இன்னொரு அருமையான பரிசு.
