ADDED : ஜன 26, 2026 01:57 AM

நியுட்ரன்: ஓப்பனிங்கிலேயே பெரிய அளவில் ஏற்ற இறக்கம் நடந்துடும். அதனால, நாள் பூரா நியுட்ரன் கை ஓங்கியிருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லீட்டு போனீங்களே. மனக்கோட்டை கட்டிட்டு இருந்தேன். ஒரேயடியா சரிச்சுப்புட்டீங்களே டவுனு!
டவுனு: எப்பவும் நான் சொல்றதுதாங்க. வாய்ப்பு கிடைச்சா உபயோகிச்சுடுவோம். எப்ப வாய்ப்பு கிடைக்கிதுங்கிறதை யாராலயும் துல்லியமா கணிக்க முடியாது.
அப்பு: வியாழக்கிழமை எங்களுக்கு கொஞ்சம் க்ரிப் கிடைச்சுது. ஆனா, வெள்ளிக்கிழமை மறுபடியும் உங்க கையில க்ரிப் முழுசா வந்துடுச்சு டவுனு.
நியுட்ரன்: சரி, நடக்கப்போறதை பார்ப்போம். இண்டஸ்ட்ரியல் ப்ரொடக்ஷன், மேனுபேக்சரிங் ப்ரொடக்ஷன், எம்3 பணப்புழக்கம், அன்னிய செலாவணி கையிருப்பு, மத்திய அரசு பட்ஜெட் போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் இந்த வாரம் இருக்கு. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களோட காலாண்டு முடிவுகளும் வெளிவர இருக்குது.
டியுரபிள் குட்ஸ் ஆர்டர்கள், வேலையில்லாத நபர்கள், பெடரல் ரிசர்வ் வட்டிவிகித முடிவு, ப்ரொட்யூசர்ஸ் ப்ரைஸ் இண்டெக்ஸ் போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் இருக்கு.
டவுனு: என்.எஸ்.இ.,ல ஜனவரி மாத எப்&ஓ ஒப்பந்தங்கள் நிறைவடைய இருக்கு. இதற்கான நகர்வுகளையும் சந்தையில் எதிர்பார்க்கலாம்.
அப்பு: நிப்டியோட சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்ல விட்டுட்டீங்க.
டவுனு: போனவாரம் நடந்த சம்பவங்களால சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ்களெல்லாம் தாறுமாறா இருக்குது. தவிர பல முக்கிய செய்திகளும் நிகழ்வுகளும் இருப்பதால இந்த வாரம் சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்லப்போறதில்லை.
25,150 என்பதுதான் இப்போதைக்கு முக்கிய திருப்புமுனை லெவலா இருக்குது. இதுக்கு மேலே போனா ஏற்றம். கீழேயே இருந்தா இறக்கமுன்னு டெக்னிக்கலா சொல்லலாம். எல்லாமே செய்திகளுக்கு ஏற்ற மாதிரிதான் நடக்கும்.
நியுட்ரன்: போன வாரம் உங்க இராஜ்ஜியமா இருந்ததால வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு நீங்களே சொல்லுங்க டவுனு.
டவுனு: இது மாதிரி நிலைமையில குத்துமதிப்பாக்கூட கணிக்கிறது சிரமம். செய்திகளும் நிகழ்வுகளும் பெரிய அளவிலான தாக்கத்தை சந்தையில் கொண்டுவந்துடும். அதுலயும் இந்த வாரம் சந்தையின் போக்கை நிர்ணயிக்கின்ற விஷயங்கள் நிறையவே இருக்கு.
அப்பு: வாரக்கடைசியில எனக்கு வாய்ப்பு இருக்குற மாதிரி தெரியுது.
நியுட்ரன்: அப்ப வார ஆரம்பத்தில.
டவுனு: அதிக அளவில ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்பு இருக்கு.
அப்பு: நியுட்ரனுக்கு வாய்ப்பிருக்காதோ!
நியுட்ரன்: அப்பு சந்தையில வேலையில்லை. அதனால என்னை கலாய்க்கிறீங்க.
டவுனு: அவரு கரெக்டாத்தான் சொல்றாரு. ஊருல இருக்கற வீட்டை ரிப்பேர் பண்ண போகனுமுன்னு சொல்லீட்டு இருந்தீங்களே இப்ப அதுக்கு கரெக்டான நேரம். பத்து நாள் வேணுமின்னா நீங்க போயிட்டுவரலாம்.
நியுட்ரன்: என்னை பேக் அப் பண்றதில அப்படி ஒரு சந்தோஷம். நிறைய திடீர் திருப்பங்கள் நிறைஞ்ச வாரமா இருக்கலாமுங்கறதுதான் என்னோட கணிப்பும்.
அப்பு: ஹைதராபாத்துல இருந்து நண்பர் பாதுஷா வாங்கீட்டு வந்தாரு. டவுனுக்கு பாதுஷான்னா உயிராச்சே. பாக்ஸ் பிரிக்காம கொண்டுவந்தேன்.
டவுனு: அட! பிடிக்குமுன்னா நான் மட்டும் சாப்பிடறதா. பாக்ஸை பிரிங்க மூனு பேரும் சாப்பிடுவோம்.
நியுட்ரன்: இந்த பரந்த மனசை சந்தையிலேயும் கொஞ்சம் காட்டுங்க டவுனு. டவுனு சிரிக்க மூவரும் ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.

