ADDED : ஜூன் 01, 2026 03:12 AM

அப்பு: வணக்கம் டவுனு சார்.
டவுனு: என்ன இது புதுப்பழக்கமா இருக்குது.
அப்பு: மொத்த கண்ட்ரோல் உங்க கையில இருக்குது. வணக்கம் வச்சுக்கிறதுதான் நல்லதாப்படுது.
நியுட்ரன்: உங்கள் இருவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
டவுனு: வாய்ப்பேயில்லேன்னா வணக்கம் போட வேண்டியதுதான்.
நியுட்ரன்: அதுதான் இல்லேன்னு ஆயிடுச்சே. அதையே ஏன் திரும்ப திரும்ப நினைவுபடுத்தறீங்க.
அப்பு: ஹெச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்கள்/சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, தொழிற்சாலைகள்/உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், அந்நிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகளும், ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்கள்/சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, ஜே.ஓ.எல்.டி., ஜாப் ஒப்பனிங்ஸ், விவசாயம் அல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வரும் வாரத்தில வெளிவர இருக்குது.
டவுனு: 23,325/23,100 /22,875ல வாராந்திர அளவிலான சப்போர்ட்டும், 23,925/24,310/ 24,525ல வாராந்திர அளவிலான ரெசிஸ்டென்ஸிம் இருக்குது.
அப்பு: கொஞ்ச நாளைக்கு நீங்க சப்போர்ட்டை மட்டுமே சொன்னா போதும் போல இருக்கு. ஏறாத சந்தைக்கு எதுக்கு ரெசிஸ்டென்ஸ்!
நியுட்ரன்: ரொம்ப விரக்தி அடைஞ்ச மாதிரியில்ல இருக்குது.
அப்பு: அப்புறம் என்னங்க. போன வாரம் என்ன நடந்துச்சு. புதன்கிழமை வரைக்கும் நிகர அளவில எந்த அளவுக்கு ஏறியிருந்துச்சோ அதை விட இரண்டு மடங்கு வெள்ளிக்கிழமை இறங்கிடுச்சு.
டவுனு: தெளியவைச்சு தெளியவைச்சு அடிக்கிறதுங்கிறது இதுதான்.
நியுட்ரன்: பிரமாதமுங்க! அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு இந்த வாரத்தில் இருக்கும் ஒரு முக்கிய பொருளாதார நிகழ்வா இருக்குது.
டவுனு: வர்ற வாரம் எப்படியிருக்கும் அப்பு.
அப்பு: அது உங்களுக்குத்தானே நல்லாத்தெரியும். நீங்களே சொல்லீடுங்க.
நியுட்ரன்: அவர் சொல்றது ரொம்பவும் சரி. நீங்களே சொல்லீடுங்க டவுனு.
டவுனு: வீக்காத்தான் இருக்க வாய்ப்பு இருக்கு. ஏறினாலும் பெரிய அளவிலான ஏற்றம் வர்றதுக்கான வாய்ப்பு குறைவாத்தான் தெரியுது.
நியுட்ரன்: செய்திகள் பாசிட்டிவ்வா இருந்தா.
டவுனு: தெளியவைச்சு அடிக்கிறதுங்கறதுக்கு வேணா அது உதவலாம்.
நியுட்ரன்: என்னங்க இப்படி பயமுறுத்தறீங்க.
அப்பு: அவரு பயமுறுத்தல்லாம் இல்லை. தன்னோட பராக்கிரமத்தை சொல்றார்.
நியுட்ரன்: வேணா பாருங்க செய்திகள் பாசிட்டிவ்வா வந்து சிறப்பான ஏற்றம் வரத்தான் போகுது.
டவுனு: உங்க ஆசை பலிக்க நான் பிரார்த்தனை செய்யறேன்.
நியுட்ரன்: எகத்தாளத்தை பாருங்க.
அப்பு: நிலைமை அப்படி இருக்குது. நீங்க சொல்றதும் நடக்கும் நியுட்ரன். ஆனா அது எப்பங்கிறதுதான் கேள்வியே!
நியுட்ரன்: அப்பு என்ன இப்படி டவுனோட சைடுல சேர்ந்துட்டீங்க.
அப்பு: ஓடம் வண்டியிலேயும், வண்டி ஓடத்திலேயும் சூழ்நிலைக்கேற்ப போறதில்லையா அது மாதிரிதான்.
டவுனு: அப்பு இப்படி என் சைடுக்கு வர்றதுதான் கொஞ்சம் பாசிட்டிவ்வான சிக்னலா இருக்குது. என் அனுபவத்தில இப்படி எல்லோரும் மனசை விடும்போதுதான் சந்தையின் போக்கில எதிர்மறையான மாற்றம் வர்றதை பார்த்திருக்கேன்.
நியுட்ரன்: ஏதோ நல்லது நடந்தா சரி. எனக்கென்னவோ பழ பஜ்ஜி சாப்பிடணும் போல இருக்கு. வர்றீங்களா? என்று கேட்க அப்பு மற்றும் டவுன் 'ஓ போலாமே' என கோரஸாக கூறி கடையை நோக்கி புறப்பட்டனர்.
