ADDED : ஜூலை 06, 2026 02:18 AM

நியுட்ரன்: வாங்க டவுனு. நான் டவுட்டானதைப் போலவே செஞ்சுட்டீங்க.
டவுனு: எதைச் சொல்றீங்க!
நியுட்ரன்: எக்ஸ்பைரி வரைக்கும் அப்புவோட கை ஓங்கியிருக்குமுன்னு தோணுதுன்னு சொன்னீங்க. அப்பவே இது அப்புவுக்கு குறிவைக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னேன். எக்ஸ்பைரி வரைக்கும் இறக்கி அதை நிரூபிச்சுட்டீங்க.
அப்பு: நல்லவேளை நியுட்ரன். நீங்க போறபோக்குல சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு போன வாரம் செயல்பட்டேன். இல்லாட்டி நீங்க அதுக்கு முந்துன வாரம் வாங்குனதை விட பெரிய அடியை நான் வாங்கியிருப்பேன்.
டவுனு: சந்தையில இதெல்லாம் சாதாரணம்!
நியுட்ரன்: அது புரியுது. இருந்தாலும் ஒரு ஆதங்கம்தான்.
டவுனு: வர்ற வாரம் வங்கிகள் வழங்கிய கடன்களின் வளர்ச்சி/ வைப்பு நிதியின் வளர்ச்சி, அன்னிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகளும், ஐ.எஸ்.எம்., சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு, 'பேலன்ஸ் ஆப் டிரேட்', வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை மற்றும் வீடுகள் மறு விற்பனை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வெளிவர இருக்குது.
நியுட்ரன்: 23,941/23,610/23,401 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 24,490/24,708/24,918 லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 24,159தான் மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.
அப்பு: டெக்னிக்கல் லெவல்களை பார்த்தா சிரிப்பாத்தான் வருது. ஒரு சில நிறுவனங்களோட காலாண்டு முடிவுகளும் வெளிவர இருக்குது.
நியுட்ரன்: ஆமாமாம். சீசன் துவக்கம். இன்னும் ஒரு சில வாரம் பூராவும் காலாண்டு முடிவுகள் வெளிவற ஆரம்பிச்சுடும். பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
டவுனு: சந்தை பரபரத்தா நியுட்ரனுக்கு ஆகாது.
நியுட்ரன்: என் பேருக்கு ஒரு அர்த்தம் இருக்கு.
டவுனு: அந்த அர்த்தம் உங்களை குறிப்பதுதானே தவிர சந்தையை குறிப்பது இல்லை.
அப்பு: வாக்குவாதம் பண்ணாதீங்க. வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு சொல்லுங்க.
நியுட்ரன்: இறக்கி ஏத்துவீங்களா? இல்லை ஏத்தி இறக்குவீங்களான்னு சொல்லீட்டீங்கன்னா அதுக்கேத்த மாதிரி நடந்துப்போம்.
அப்பு: எங்க ஏத்தி இறக்குறது. ஸ்ட்ராங்கான ரெசிஸ்டென்ஸ் கிட்டே வந்து நிக்குது நிப்டி.
டவுனு: அந்த ரெசிஸ்டென்ஸை உடைச்சுட்டா நல்லாவே மேலே கொண்டுபோயிடுவீங்க அப்பு.
நியுட்ரன்: எனக்கென்னவோ அப்புவால அது முடியுமுன்னு தோணல.
அப்பு: இப்படி வெறியேத்தியே என்னை ரணகளம் செய்துடறீங்க நியுட்ரன்.
டவுனு: டெக்னிக்கலா வலுவான ரெசிஸ்டென்ஸுக்கு அருகில் இருப்பதாலே செய்திகள் ஏதாவது பாசிட்டிவ்வா வந்தாத்தான் அதை தாண்ட முடியும்.
நியுட்ரன்: அப்ப டவுட்டுதான்.
அப்பு: என்ன இப்படி சொல்லீட்டீங்க.
டவுனு: அவர் சொல்றதும் கரெக்ட்டுதான். உலகம் போற போக்குல கடந்த சில மாதங்களா பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் செய்திகள் சரிக்கு சமமால்ல வந்துகிட்டு இருக்குது.
நியுட்ரன்: சமீபத்துல ஜான் ஏறுனா முழம் சறுக்குது. முழம் ஏறினா ஜான் சறுக்குதுன்னு எத்தனை தடவை நான் பார்த்துட்டேன்.
டவுனு: ஐயா அனுபவஸ்தரே. நீங்க சொல்லுங்க உங்க கணிப்பை. வாரா வாரம் நாங்கதானே சொல்றோம்.
நியுட்ரன்: வாராந்திர ரீதியா பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
டவுனு: உங்க பேரோட மீனிங்கை கேட்கலீங்க. உங்க கணிப்பை கேட்டேன் .
அப்பு: சும்மா அவரை கலாய்க்காதீங்க. அவர் கணிப்பைத்தாங்க சொல்றாரு. பெரிய பாசிட்டிவ் செய்திகள் இல்லாட்டி பெரிய மாற்றம் வர்றதுக்கு வாய்ப்பில்லை என்பதுதான் என்னோட கணிப்பும்.
டவுனு: ஆமாம்! டெக்னிக்கலா நிப்டி முக்கிய ரெசிஸ்டென்ஸுக்கு சற்று கீழே இருக்குது. அதனால நீங்க ரெண்டு பேரும் சொல்றது நடக்க வாய்ப்பிருக்கு.
நியுட்ரன்: நேரமாயிடுச்சுன்னு காலையில டிபன் சாப்பிடாம வந்துட்டேன். ப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடலாமா?
டவுனு: சந்தையிலதான் பேருக்கேத்த செயல்பாட்டோட இருக்கிங்க நியுட்ரன். சாப்பாட்டு விஷயத்துல வெறும் வயத்துல ப்ரெஞ்ச் ப்ரைன்னு அடிச்சு விடறீங்க. நமக்கு இது கட்டுப்படியாகாது. நான் காபி மட்டும் சாப்பிட்டுக்கிறேன் என்று சொல்ல மூவரும் ஹோட்டலை நோக்கி புறப்பட்டனர்.
