கேளுங்கள்: காப்பீடு இல்லாத வாகனத்தால் நிகழ்ந்த விபத்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெறுவது எப்படி?
கேளுங்கள்: காப்பீடு இல்லாத வாகனத்தால் நிகழ்ந்த விபத்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெறுவது எப்படி?
UPDATED : அக் 12, 2026 02:26 AM
ADDED : அக் 11, 2026 10:24 PM

அம்மா வணக்கம், 70 வயது உடைய ஒரு பெண்ணுக்கு, காப்பீடு இல்லாத இருசக்கர வாகன உரிமையாளர் விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
தினமும், 1,000 ரூபாய்க்கு காய்கறி விற்று சம்பாதிக்கக்கூடிய நபர். உடல் நிலையும், மனநிலையும் பாதிக்கப்பட்டு முதியோர் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிப்பினை ஏற்படுத்திய இருசக்கர வாகன உரிமையாளர் காப்பீடு செய்யவில்லை என்கிறார். இதற்கு தீர்வு என்ன?
பாண்டி, மதுரை
இது மிகவும் வருத்தமான சம்பவம். 70 வயதிலும் உழைத்து, தினமும் வருமானம் ஈட்டி வந்த ஒருவர், விபத்துக்கு பிறகு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையானது.
விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனமும், அதன் உரிமையாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதால், இதை 'விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும்' (ஹிட் அண்டு ரன்) வழக்காக கருத முடியாது. வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இல்லை என்றாலும், இழப்பீடு பெற வழி உள்ளது.
மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் (எம்.ஏ.சி.டி.,) இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யலாம். இன்சூரன்ஸ் இல்லாத நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளரிடமிருந்து இழப்பீடு கோர வேண்டியிருக்கும்.
அந்த பெண், காய்கறி விற்பனை வாயிலாக தினமும், 1,000 ரூபாய் சம்பாதித்து வந்தது முக்கியம். காயத்தின் தன்மை, மருத்துவ செலவு, வருமான இழப்பு, நிரந்தர உடல் பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்கப்படலாம். முந்தைய வருமானத்துக்கான ஆதாரங்களை பாதுகாத்து வைக்க வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை, போலீஸ் ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள், மருத்துவமனை ரசீதுகள், வருமான ஆதாரங்கள், வாகனம் மற்றும் உரிமையாளர் விபரங்களை சேகரித்து, மோட்டார் விபத்து வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் வாயிலாக தீர்ப்பாயத்தை அணுகுவது நல்லது.
மேலும், பிரதமரின் சாலை விபத்து பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை திட்டத்தின் (பி.எம்.,-ரஹத்) கீழ், தகுதியுள்ளவர்களுக்கு விபத்து நடந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் வரை 1.50 லட்சம் ரூபாய் வரையில் கட்டணமில்லா சிகிச்சை கிடைக்கலாம். இதற்கு, விபத்தை ஏற்படுத்திய வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும், இது சிகிச்சைக்கான உதவி மட்டுமே; தீர்ப்பாயம் வாயிலாக பெறும் இழப்பீட்டுக்கு மாற்றாகாது.
எனவே, காலம் தாழ்த்தாமல் ஆவணங்களை சேகரித்து சட்ட உதவியுடன் இழப்பீடு கோரும் நடவடிக்கையை தொடங்குவது நல்லது.
மேடம், என் பெயர் சரவணபாண்டியன். எனக்கு 49 வயது; திண்டுக்கல்லை சேர்ந்தவன். தமிழக அரசு பணியில் உள்ளேன். எனக்கு 12ம் வகுப்பை முடித்த மகளும், 8ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். எனக்கு ஏற்ற சிறந்த எல்.ஐ.சி., பாலிசியை பரிந்துரைக்கவும். மாதம் 5,000 ரூபாய் பிரீமியம் செலுத்த முடியும்.
உங்கள் தற்போதைய குடும்ப சூழ்நிலையில், ஆயுள் காப்பீட்டின் முதல் நோக்கம் முதலீட்டு வருமானமாக இருக்கக்கூடாது. உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை செலவு மற்றும் எதிர்கால தேவைகளுக்கு போதுமான பணம் கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம்.
இதற்கு டேர்ம் இன்சூரன்ஸ் பொருத்தமானது. குறிப்பிட்ட காலத்துக்குள் பாலிசிதாரர் இறந்தால், நாமினிக்கு இறப்பு பயன் கிடைக்கும். மற்ற ஆயுள் காப்பீடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீடு பெறலாம். ஆனால், சாதாரண டேர்ம் பாலிசியில் முதிர்வு தொகை கிடைக்காது.
உங்களுக்கு 49 வயது. உங்கள் இளைய மகன் எட்டாம் வகுப்பில் இருப்பதால், குழந்தைகள் கல்வியை முடித்து பொருளாதார ரீதியாக நிலைபெறும் காலத்தை கருத்தில் கொண்டு பாலிசி காலத்தை தேர்வு செய்யுங்கள். உதாரணமாக, 15 ஆண்டுகள் காப்பீடு எடுத்தால், உங்களுக்கு 64 வயது வரை பாதுகாப்பு கிடைக்கும்.
மாதம் 5,000 ரூபாய் பிரீமியம் செலுத்த முடியும் என கூறியுள்ளீர்கள். இதற்கு கிடைக்கும் காப்பீட்டு தொகை உங்கள் உடல்நிலை, வாழ்க்கைமுறை, பாலிசி மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டை பொறுத்தது. எனவே, இப்போதே குறிப்பிட்ட தொகையை உறுதியாக கூற முடியாது.
உங்கள் ஆண்டு வருமானம், குடும்ப செலவுகள், குழந்தைகளின் உயர்கல்வி செலவு, கடன்கள், ஏற்கனவே உள்ள சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவற்றை கணக்கிட்டு, முதலில் தேவையான காப்பீட்டு தொகையை முடிவு செய்யுங்கள். பின்னர் அதை மாதம் 5,000 ரூபாய் பட்ஜெட்டுக்குள் பெற முடியுமா என பாருங்கள்.
எல்.ஐ.சி., நிறுவனத் தின் டேர்ம் பாலிசிகளையும் பரிசீலித்து, பிரீமியம், காப்பீட்டு தொகை, பாலிசி காலம் மற்றும் நிபந்தனைகளை ஒப்பிட்டு தேர்வு செய்யலாம்.
குழந்தைகளை நாமினிகளாக பதிவு செய்யுங்கள். அவர்கள் மைனர்களாக இருந்தால், பாலிசி தொகையை பெறுவதற்காக ஒரு பொறுப்பாளரையும் குறிப்பிட வேண்டும்.
முதலில் குடும்பத்துக்கு தேவையான ஆயுள் காப்பீட்டை பெறுங்கள். பின்னர் குழந்தைகளின் கல்வி, உங்கள் ஓய்வுக்காலம் உள்ளிட்ட இலக்குகளுக்கு முதலீடுகளை தனியாக திட்டமிடலாம்.
காப்பீடு பாதுகாப்புக்காக; முதலீடு செல்வத்தை உருவாக்குவதற்காக. இரண்டையும் ஒரே பாலிசியில் செய்ய வேண்டிய அவசியமில்லை.
