இந்த வாரம் எப்படி இருக்கும்?: சடுகுடு ஆட்டம் கொஞ்சம் 'பரபர'னுதான் இருக்கும்
இந்த வாரம் எப்படி இருக்கும்?: சடுகுடு ஆட்டம் கொஞ்சம் 'பரபர'னுதான் இருக்கும்
ADDED : அக் 12, 2025 11:24 PM

டவுனு: எங்ககிட்ட ராஜ்ஜியம், ராஜ்ஜியமுன்னு சொல்லாதீங்கன்னு சொல்லிட்டு, போன வாரத்தில 4 நாள் உங்க ராஜ்ஜியமா ஆக்கீட்டீங்களே அப்பு?
அப்பு: உங்களுக்கு தெரியாததா டவுனு; செய்திகள் சாதகமா இருந்தா, நாங்க எப்பவுமே ரொம்ப ஆக்டிவ்வா ஆகிடுவோமுன்னு!
நியுட்ரன்: அடப்போங்க சார். எங்களுக்குத் தான் காலமில்லை
டவுனு: உமக்கு வேண்டுமய்யா. சும்மா எப்பப் பார்த்தாலும் சந்தை ஆடாம அசையாம இருக்கணுமின்னு எதிர்பார்த்துக்கிட்டு. ஆடாம அசையாம இருந்தா அதுக்குப் பேரு சந்தையில்லை. சரி, வர்ற வாரம் என்னென்ன பொருளதார தரவுகள் வெளிவரப்போகுதுங்கிற லிஸ்ட சொல்லுங்க, கேட்போம்.
நியுட்ரன்: ஒண்ணும் பெரிசா இல்லை. பணவீக்கம், எம்3 பணப்புழக்கம், ஏற்றுமதி இறக்குமதி நிகர அளவுன்னு ஒன்றிரண்டு இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வர இருக்கு. 'இண்டஸ்ட்டிரியல் புரொடக்ஷன், ரீட்டெய்ல் சேல்ஸ், ஜாப்லெஸ் க்ளெய்ம்'ன்னு ஒரு சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வர இருக்கு. வேற இன்ட்ரெஸ்ட்டிங்கா ஒண்ணுமில்லை.
டவுனு: தரவுகளை விடுங்க. உலக செய்திகளுக்கு தான் பஞ்சமில்லையே! அதனால சந்தை கொஞ்ச காலத்துக்கு தடதடனுதான் இருக்கும்.
அப்பு: அதுவும் சரிதான். அத்தோட, கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான நிறுவனங்களோட ரெண்டாவது காலாண்டு முடிவுகள்லாம் வெளிவர இருக்கு. 'ஆக்சிஸ் பேங்க், எச்.டி.எப்.சி., பேங்க் ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், இன்போசிஸ், எச்.சி.எல்., டெக், டெக் மஹிந்திரா, விப்ரோ, அதுக்கு பிறகு ஜே.எஸ்.டபுள்யு ஸ்டீல், ஜியோ பைனான்சியல், ரிலையன்ஸ் இது மாதிரி பல முக்கிய நிறுவனங்களோட காலாண்டு முடிவுகளும் வெளிவர இருக்கு. அதனால சந்தையில சடுகுடு ஆட்டம் கொஞ்சம் பரபரன்னுதான் இருக்கும்.
டவுனு: வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தைகள் நல்லா இறங்கியிருக்கு. இங்கே கிப்ட் நிப்டியும் இறங்கியிருக்கு. அதனால திங்கட்கிழமை ஓப்பனிங்கிலேயே நல்லதொரு இறக்கத்தை எதிர்பார்க்கலாம்.
அப்பு: நியுட்ரன், டெக்னிக்கல் சப்போர்ட் ரெசிஸ்ட்டென்ஸை சொல்லுங்க, எப்படியிருக்குமுன்னு பார்ப்போம்.
நியுட்ரன்: வாராந்திர ரீதியா 25,000, 24,715 மற்றும் 24,545 என்ற அளவில் ஆதரவும்; 25,450, 25,615 மற்றும் 25,785 என்ற அளவில் தடுப்பும் டெக்னிக்கலா இருக்க வாய்ப்பு இருக்கு. 25,165-ங்கறது ஒரு முக்கிய லெவலா இருக்கு. இதுக்கு கீழே இறங்கினா உஷாரா இருக்கணும்.
அப்பு: டவுனு சொல்றதைப் பார்த்தா திங்கட்கிழமை ஒப்பனிங்கே 25,165-க்கு கீழே இருக்கும் போல?
டவுனு: சே! அவ்வளவு எல்லாம் இறங்க சான்ஸ் இல்லை. ஆனா, வாய்ப்பு கிடைச்சா, வர்ற வெள்ளிக்கிழமை வரை நாங்க வெளுத்து வாங்கிடுவோம். அதை மட்டும் மறந்துடாதீங்க. தீபாவளி அன்னைக்கு தான் அப்புக்கு சான்ஸ் கொடுப்போம்!
சரி, நானு வெளியூர் போறேன், அதனால அர்ஜென்டா புறப்படறேன் என்று நியுட்ரன் கிளம்ப, 'வாங்க டவுனு, ஒரு காபி சாப்பிட்டுட்டு போகலாம் என அப்பு சொல்ல, இருவரும் ஹோட்டலை நோக்கி சென்றனர்.