ADDED : நவ 16, 2025 10:12 PM

வங்கி மேலாளர் சொன்னதைக் கேட்டு, திட்டங்கள் பற்றி முழுதுமாக தெரிந்து கொள்ளாமல், 'ஆக்சிஸ் மேக்ஸ் இன்சூரன்ஸ் மற்றும் ஸ்மார்ட் வெல்த் ஏர்லி இன்கம்' ஆகிய இரண்டு திட்டங்களை வாங்கி விட்டேன். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் பிரீமியம் என நான்கு ஆண்டுகளாக இரண்டு திட்டங்களிலும் 40 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டேன்.
இந்த திட்டம் எனக்கு பொருந்தாததால் வெளியேற விரும்புகிறேன். ஆனால், சரண்டர் நிபந்தனைகள் சாதகமாக இல்லை. பிரீமியம் செலுத்துவதை நிறுத்தினால், திட்டம் 'லேப்ஸ்' ஆகிவிடும். ஆனால், 'ரிவைவ்' செய்யும் வசதி உள்ளது. குறைந்த திட்டக் காலத்துடன், மரண பெனிபிட் இல்லாமல், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் மீண்டும் துவங்க வேண்டும்.
நான் 'ரிவைவ்' செய்ய நினைக்கிறேன். இதை செய்வது சரியா? இப்படி செய்ய முடியுமா?
- ரகுராமன்.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், சந்தையில் பல திட்டங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதுதொடர்பாக, நிறைய அழைப்புகளும் வரத் தான் செய்கின்றன. காப்பீடு அவசியம் என்றாலும், எந்த திட்டத்தை வாங்குகிறோம், அது நமக்கு ஏற்றதா என்பதையெல்லாம் வாங்கும்முன் பகுப்பாய்வு செய்வது அவசியம்.
காப்பீடு திட்டங்களை வாங்கும் செயல்முறையில் வாடிக்கையாளர்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்க, ஒழுங்குமுறை அதிகார அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தரப்பில் இருந்து, சில சரிபார்ப்பு முறைகள் உள்ளன.
உதாரணமாக, திட்ட விபரங்கள் வாங்குபவர்களுக்கு, தெரிந்த மொழியில் விளக்கப்பட்டதாக ஒரு பொறுப்பேற்பு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். எனவே, அந்த படிவத்தை, வாங்குபவர்களே நிரப்புவதுதான் சரி. கையெழுத்திட்ட பின், அந்த திட்டத்தை தொடர வேண்டிய முழு பொறுப்பும் வாங்கியவர்களிடமே இருக்கும்.
நீங்கள் எடுத்த திட்டத்தில் உள்ள சிக்கலுக்கு வருவோம். நீங்கள் இனி பிரீமியம் செலுத்தாமலே திட்டத்தை லேப்ஸாக விடுகிறீர்கள் என்றால், இதுவரை செலுத்திய 40 லட்சம் ரூபாய், பெனிபிட் மற்றும் ஆயுள் காப்பீடு உட்பட அனைத்தையும் இழக்க நேரிடும்.
நீங்கள் நினைப்பது போல, பிரீமியம் செலுத்துவதை நிறுத்தி, திட்டத்தை செயலிழக்க அனுமதித்துவிட்டு, பின்னர் ரிவைவ் செய்யலாம்.
ஆனால் அதற்கான நிபந்தனைகள், பிரீமியம், உடல்நிலை, வயது போன்ற காரணங்களால் மாறும்.அந்த நேரத்தில், புதிய பாலிசியை வாங்குவது அதிக லாபகரமானதா என்பதை ஆய்வு செய்வது நல்லது.
நீங்கள் ஆயுள் காப்பீடு வேண்டாமென்று சொல்கிறீர்கள். யூலிப் திட்டங்களில் அது சாத்தியமில்லை. நீங்கள் சொல்வதால், உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பாக ஒரு எளிமையான 'டேர்ம் பாலிஸி' எடுப்பது நல்லது.
யூலிப்பின் முதலீட்டு பகுதியை மட்டும் விரும்புகிறீர்கள் என்றால், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம். குறைந்த கட்டணங்கள், உங்களுக்கே சாதகமான அமைப்பு, மேலும் தேவைக்கேற்ப எஸ்.ஐ.பி.ஐ., துவங்கவும், நிறுத்தவும் வசதி உள்ளது.
உங்கள் திட்டத்தை 'பெய்டு- அப்' ஆக்கும் வாய்ப்பு இருந்தால், பிரீமியம் செலுத்துவதை நிறுத்தலாம். அதனால், குறைந்தபட்ச ஆயுள் காப்பீடு ஒன்றை பாதுகாக்கலாம்.
இது லேப்ஸ் ஆக விடுவதை விடச் சிறந்தது. 'பெய்டு -அப்' ஆகும் முன், எத்தனை ஆண்டுகள் பிரீமியம் கட்டியிருக்க வேண்டும் என்பதையும், 'பெய்டு- அப்' ஆன பின் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் காப்பீட்டு நிறுவனம் சொல்வர். அல்லது திட்டத்தை சரண்டர் செய்து, ஒரு குறிப்பிட்ட மதிப்பைத் திரும்பப் பெறுங்கள்.

