ADDED : அக் 06, 2025 12:04 AM

'உயிருள்ள வரை நம்பிக்கை உண்டு' என்று தொன்மைக்கால கிரேக்க கவிஞர் தியோக்ரிடஸ் சொன்னார். உயிரோடு இருப்பதால் நாம் சிந்திக்கவும், திட்டமிடவும், ஏற்பாடு செய்யவும் முடிகிறது. ஆனால், வாழ்க்கையில் தவறுகளும் நடக்கும். சில சமயம் வாழ்க்கை இரண்டாவது வாய்ப்பையும் கொடுக்கும். காப்பீடில் கூட, தவறுகளை சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஒரு காப்பீடு திட்டத்தை வாங்கிய பின், அதை முறையாக செலுத்த வேண்டும். பிரீமியம் தவணையை செலுத்த மறந்தால், திட்டம் ரத்து ஆகிவிடும். தவறுகள் நிகழும் இடமே இதுதான்.
ஆனால், காப்பீடு நிறுவனங்கள் அதை கைவிட மாட்டார்கள். அவர்களின் விற்பனை மற்றும் சேவை குழுக்கள், தவணையை வசூலிக்கத் தொடர்ந்து முயற்சி செய்வர். சில நேரங்களில் தொந்தரவு போல் தோன்றினாலும், அது உங்கள் நலனுக்குத் தான்.
ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் திட்டம் ரத்து ஆகிவிட்டால், அதை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். அது தவறான திட்டம் என்றும் நீங்கள் தெரிந்தே கைவிட்டதாக இல்லாவிட்டால், உடனே உங்கள் காப்பீடு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, மீட்பிற்கான கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் பட்டியலைக் கேட்டுப் பெறுங்கள். அவர்கள் உதவுவர்.
கம்பெனிகள் மீட்பு முகாம்கள் நடத்தி, எளிய விதிமுறைகளுடன் மீட்க வாய்ப்புகளை கொடுக்கின்றன. தற்போது எல்.ஐ.சி., இத்தகைய மீட்பு முகாம் ஒன்றை நடத்தி வருகிறது.
ஆனால், காப்பீட்டு பாலிசி மீட்பு என்பது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. நீங்கள் தவறவிட்ட தவணைத் தொகையையும், அபராதத்தையும் செலுத்த வேண்டும். சில சந்தர்ப்பங்களில் வயது, உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனை / மறுபரிசீலனை செய்யப்படலாம்.
இப்போது, இந்த தவறவிடுதல் என்ற தவறை ஆரம்பத்திலேயே எப்படி தவிர்த்திருக்கலாம் என்று பார்ப்போம். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில், தவணை செலுத்துவதற்கு அவகாசம் உண்டு. உங்கள் தவணையை செலுத்தும் முறைக்கேற்ப இது, 15 அல்லது 30 நாட்கள் இருக்கலாம். அந்த காலத்துக்குள் செலுத்தினால், உங்கள் காப்பீடு, மரணம், மெச்சூரிட்டி ஆகியவற்றுக்கான நன்மைகள் அனைத்தும் தொடரும்.
ஆக, திட்டம் ரத்து ஆகாமல் தடுக்க நம் முதல் கடமை, அவகாச சலுகை காலத்திற்குள் தவணை செலுத்திவிடுவது. மீறி பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால், அதைக் கையாளும் சில வழிகளை அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்.
நித்யகல்யாணி
காப்பீடு குறித்த நிபுணத்துவஎழுத்தாளர்,
பெருநிறுவன வரலாற்றாசிரியர்