
ரூ.2,035 கோடி திரட்டுகிறது மில்கி மிஸ்ட்
பா ல் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றான மில்கி மிஸ்ட், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,035 கோடி ரூபாய் நிதி திரட்ட செபி ஒப்புதல் அளித்துள்ளது. இது பால் பொருட்கள் துறையில் இதுவரை இல்லாத பெரிய ஐ.பி.ஓ., ஆகும். தமிழகத்தின் ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட மில்கி மிஸ்ட் நிறுவனம், பனீர், சீஸ், தயிர், ஐஸ்கிரீம் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
புதிய வெளியீட்டில் இருந்து கிடைக்கும் நிதியில், கடனை திரும்ப செலுத்த 750 கோடி ரூபாயும், ஈரோடு பெருந்துறை ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்குதலுக்கு 414 கோடி ரூபாயும் பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லென்ஸ்கார்ட் பங்கு விலை ரூ.382 - ரூ.402
பு திய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் 'லென்ஸ்கார்ட்' நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 382-402 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகளை ஐ.பி.ஓ., வாயிலாக வாங்க முதலீட்டாளர்கள், அக்., 31ஆம் தேதி முதல் நவ., 4 வரை விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனம் நவ.10ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
மூக்கு கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ், ஐ.பி.ஓ., வாயிலாக 7,278 கோடி ரூபாய் நிதி திரட்டுகிறது. திரட்டப்படும் நிதி, புதிய கடைகளை திறப்பதற்காகவும், நவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற வளர்ச்சி திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.455 கோடி திரட்ட வரும் ஸ்டட்ஸ்
ஹெ ல்மெட் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டட்ஸ் அக்சஸரீஸ்' புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 455 கோடி நிதியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அக்.30 முதல் நவ.3 வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 557 -585 ரூபாய்.
இந்நிறுவனம் நவம்பர் 7 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1975 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஸ்டட்ஸ் மற்றும் எஸ்.எம்.கே., பிராண்டுகளில், இருசக்கர வாகன தலைக்கவசங்களை விற்பனை செய்கிறது.

