
ரூ.1,500 கோடி திரட்டுகிறது 'போட்'
ஆ டியோ கியர், ஹெட் போன்கள், ஏர்பாட் உள்ளிட்ட 'போட்' தயாரிப்புகளின் தாய் நிறுவனமான 'இமேஜின் மார்க்கெட்டிங்', புதிய பங்கு வெளியீட்டிற்காக புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இதற்கு முன், கடந்த 2022ல், 2,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வரிசை கட்டும் எஸ்.பி.ஐ., நிறுவனங்கள்
பா ரத ஸ்டேட் வங்கியின் குழுமத்தைச் சேர்ந்த மேலும் 2 நிறுவனங்கள், விரைவில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படலாம் என, இந்நிறுவனத்தின் தலைவர் சி.எஸ்.செட்டி தெரிவித்துள்ளார். எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு மற்றும் எஸ்.பி.ஐ., இன்சூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் மதிப்புமிக்கவை என தெரிவித்துள்ள அவர், அவை பங்குச் சந்தைகளில் நிச்சயம் பட்டியலிடப்படும் என கூறியுள்ளார். இருப்பினும் எப்போது என அவர் கூறவில்லை.
குவியும் உள்நாட்டு முதலீடுகள்
ந ம் நாட்டில் ஐ.பி.ஓ., வெளியீட்டில் நிறுவனங்கள் வழங்கும் பங்குகளின் எண்ணிக்கையைவிட, முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கும் பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பே முக்கிய காரணமாக உள்ளது.
2024ல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 97,900 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். அதேநேரம், வெளிநாட்டு நிறுவனங்கள் 79,000 கோடி ரூபாய் அளவிற்கே முதலீடு செய்துள்ளனர். இது, இந்திய பங்குச் சந்தையை சுயமாக இயங்கும் சந்தையாக மாற்றுகிறது என்றாலும், அதிக விலை நிர்ணயம் ஆபத்தானது என கூறப்படுகிறது.

