
ஜெயின் ரிசோர்ஸ்
செ ன்னையை தலைமையிடமாக கொண்ட, 'ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங்', 1,250 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. காப்பர், அலுமினிய கழிவுகளை மறுசுழற்சி செய்து, தயாரிப்புகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 750 கோடி ரூபாயும், புதிய பங்கு விற்பனை வாயிலாக 500 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 220 - 232 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. செப்.24 முதல் 26 வரை பொதுமக்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஆனந்த் ரதி
ப ங்குச்சந்தை தரகு நிறுவனமான ஆனந்த் ரதி, 745 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டுவதற்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. 550 கோடி ரூபாயை நிறுவனத்தின் நீண்ட கால மூலதன தேவைக்கும், மீதமுள்ள தொகையை நிறுவனத்தின் பிற செலவுகளுக்கு பயன்படுத்த உள்ளது. இந்நிறுவனம், பங்கு ஒன்றின் விலை 393--414 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. குறைந்தபட்சம், 35 பங்குகள் கேட்டு சில்லரை முதலீட்டாளர்கள் செப். 23 முதல் 25 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
சேஷசாயி டெக்னாலஜிஸ்
மு ம்பையை தலைமையிடமாக கொண்டு, பேமன்ட் கார்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சேஷசாயி டெக்னாலஜிஸ் 813 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை வாயிலாக 333 கோடி ரூபாயும், புதிய பங்கு விற்பனை வாயிலாக 480 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. இதன் வாயிலாக திரட்டும் தொகையில், 198 கோடி ரூபாயை ஆலை விரிவாக்கத்துக்கும், 300 கோடி ரூபாயை கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 402--423 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சோலார் வேர்ல்டு எனர்ஜி
உ.பி.,யின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு, சோலார் மின் திட்டங்கள் தொடர்பான தீர்வுகளை அளித்து வரும், சோலார் வேர்ல்டு எனர்ஜி சொல்யூசன்ஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 490 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட வருகிறது. முதலீட்டாளர் பங்கு வாயிலாக 50 கோடி ரூபாயும், புதிய பங்கு வாயிலாக 440 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.
தி வெல்த் கம்பெனியின் பிளெக்ஸி கேப் பண்டு
மி யூச்சுவல் பண்டு துறையில் நுழைந்துள்ள, 'தி வெல்த் கம்பெனி', புதிய பிளெக்ஸி கேப் பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்திய மியூச்சுவல் பண்டு பரப்பில் தனித்துவமான கலவையாக, நிறுவனத் தரத்திலான ஆராய்ச்சி, பிரைவேட் ஈக்விட்டி பாணியிலான, முழுமையான ஆய்வு மற்றும் சில்லரை முதலீட்டாளர்களுக்கு எளிதில் கிடைக்கும் அணுகுமுறையை பின்பற்ற உள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான நாள் செப்.24ல் துவங்கி, அக்.,8ல் முடிவடைகிறது.
உலகளாவிய குறியீட்டில் இந்திய பத்திரங்கள்
ப ல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும், உலகளாவிய மொத்த குறியீட்டில், இந்தியாவின் அரசுப் பத்திரங்கள் இடம்பெற வேண்டுமா என்பது குறித்து, முதலீட்டாளர்களிடம் புளூம்பெர்க் குறியீட்டு சேவை கருத்து கேட்டுள்ளது. வளர்ந்து வரும் சந்தை என்ற அடிப்படையில், அதன் லோக்கல் கரன்சி பாண்டு குறியீட்டில், கடந்த ஜனவரியில், இந்தியாவை சேர்த்து இருந்தது.