'நிறுவனர்கள் லாபத்துடன் வெளியேற ஐ.பி.ஓ., ஒரு வாய்ப்பாகிவிட்டது' -தலைமை பொருளாதார ஆலோசகர் ஆதங்கம்
'நிறுவனர்கள் லாபத்துடன் வெளியேற ஐ.பி.ஓ., ஒரு வாய்ப்பாகிவிட்டது' -தலைமை பொருளாதார ஆலோசகர் ஆதங்கம்
ADDED : நவ 18, 2025 12:38 AM

ந ம் நாட்டில் புதிய பங்கு வெளியீடு அதிகரித்து வரும் நிலையில், அவை நிறுவனங்களுக்கு புதிய மூலதனத்தை திரட்டும் 'கருவி'களாக இல்லாமல், ஆரம்ப முதலீட்டாளர்கள் லாபத்துடன் வெளியேறும் 'வாகனங்களாக' மாறிவிட்டதாக தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சி.ஐ.ஐ., அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஐ.பி.ஓ.,க்கள் நிறுவன வளர்ச்சிக்கு நீண்டகால முதலீட்டை ஈர்க்க வேண்டியவை. ஆனால், தற்போது அவை 'ஆபர் பார் சேல்' வாயிலாக, ஆரம்ப முதலீட்டாளர்களின் லாபத்தை எடுத்துச் செல்லும் வழியாக மாறிவிட்டது. இந்தப் போக்கு, பங்குச் சந்தையின் உண்மையான நோக்கத்தைப் பாதிக்கிறது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 55 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக 65,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதியைத் திரட்டியுள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை 'ஆபர் பார் சேல்' முறையில், நிறுவனர்கள், ஆரம்ப முதலீட்டாளர்கள் விற்பனை செய்தவை தான். நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் புதிய பங்குகள் வெளியீடு மிகவும் குறைவு.
'சந்தை மதிப்பு' அல்லது 'டெரிவேட்டிவ் வர்த்தக அளவு' போன்றவற்றை வளர்ச்சி எனக் கொண்டாடுவது தவறு. இவை நிதி மேம்பாட்டின் அடிப்படை அளவுகோல் அல்ல. இத்தகைய போக்குகள், மக்களின் சேமிப்புகளை பயனுள்ள முதலீட்டில் இருந்து திசை திருப்பக்கூடும்.
நம் நாடு நீண்டகால முதலீட்டு தேவைகளுக்காக, வங்கிக் கடன்களை மட்டும் நம்பாமல், வலுவான பத்திர சந்தையை உருவாக்க வேண்டும். இந்தியா உலகளாவிய வலிமை பெற்ற நாடாக உயர வேண்டு மானால், ஆபத்தை ஏற்கும் தன்னம்பிக்கையும், நீண்ட கால முதலீடும் அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

