ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : மற்ற தொழில்களிலும் வளர திட்டமிடும் ஐ.ஆர்.சி.டி.சி.,
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : மற்ற தொழில்களிலும் வளர திட்டமிடும் ஐ.ஆர்.சி.டி.சி.,
UPDATED : அக் 18, 2026 02:00 AM
ADDED : அக் 17, 2026 10:24 PM

ரயில்வே துறையை சேர்ந்த ஐ.ஆர்.சி.டி.சி., மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு, உணவு மற்றும் குடிநீர் வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது. நிறுவனம் 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டு, அக்., 2019ல் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2025ம் ஆண்டு நவரத்னா நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிறுவனத்தில் இந்திய அரசுக்கு 62.40 சதவித பங்குகள் உள்ளன. நாட்டில் 89 சதவீத ரயில் டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாகவே முன்பதிவாகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 14.50 லட்சம் முன்பதிவுகள் நடக்கின்றன.
பிசினஸ் மாடல்
நிறுவனம் வருவாய் ஈட்டும் துறைகளை நான்கு பிரிவுகளாக கொண்டுள்ளது.
1. கேட்டரிங் சேவை (~46% வருவாய்): ரயில்களில் உணவு வழங்கும் சேவையை, கட்டணம் செலுத்தும் தனியார் ஒப்பந்ததாரர்கள் வழங்குகின்றனர். வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களில் டிக்கெட்டிலேயே உணவுக்கான தொகையும் சேர்க்கப்படுகிறது. இப்பிரிவு அதிக வருவாய் கொடுத்தாலும், லாப வரம்பு 10-15 சதவீத அளவிலேயே உள்ளது.
2. டிக்கெட் முன்பதிவு (~29% வருவாய்): முன்பதிவுக்கான சேவை கட்டணம், விளம்பரங்கள், 'பேமென்ட் கேட்வே' மற்றும் கூடுதல் சேவைகள் வாயிலாக வருமானம் கிடைக்கிறது. கூடுதல் சொத்துகளோ உட்கட்டமைப்போ தேவையில்லாததால், லாப வரம்பு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளது. விளம்பரங்கள், 'கோ-பிராண்டடு' கிரெடிட் கார்டுகள் மற்றும் ஹோட்டல், கேப் முன்பதிவுகள் வாயிலாக 2025-26ம் நிதியாண்டில் 547 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
3. சுற்றுலா (~17% வருவாய்): பாரத் கௌரவ், தேஜஸ், மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மற்றும் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் வாயிலாக வருவாய் ஈட்டப்படுகிறது.
4. ரயில் நீர் (~7% வருவாய்): 20 உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படும் ரயில் நீர் பாட்டில்கள் விற்பனை இப்பிரிவில் வருகிறது.
ஐந்தாண்டு செயல்பாடு
கொரோனா பாதிப்புக்கு பிறகு ரயில்களில் பயணியர் வருகை அதிகரித்ததால் வருவாய் 2021-22ம் நிதியாண்டில் 1,879 கோடி ரூபாயாக இருந்து, 2025-26ல் 5,215 கோடி ரூபாயாக மும்மடங்கு உயர்ந்தது. நிகர லாபம் இரட்டிப்பாகி 1,393 கோடி ரூபாயை தொட்டது.
அதேநேரம், டிக்கெட் முன்பதிவை விட கேட்டரிங் மற்றும் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சி அதிகமாக இருந்ததால், லாப விகிதம் சற்று குறைந்தது. கடந்த 2025 மார்ச்சில் நவரத்னா அந்தஸ்து கிடைத்த பின், ஐ.ஆர்.சி.டி.சி., சுயமாக முடிவெடுத்து முதலீடு செய்யும் அதிகாரம் அதிகரித்துள்ளது. 2025 ஜூலை முதல் தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டது.
மேலும், முன்பதிவு தொடங்கும் முதல் அரை மணி நேரத்துக்கு ஏஜென்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் தொடங்கிய 'ரயில்ஒன்' செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டாலும், கட்டணம் ஐ.ஆர்.சி.டி.சி.,க்கே செல்கிறது. இருப்பினும், ஐ.ஆர்.சி.டி.சி., செயலிக்கு வந்த பயனாளர்களும், விளம்பர வருவாயும் குறைந்துள்ளன.
ஐ.ஆர்.சி.டி.சி., தளம் நிமிடத்துக்கு 37,000 டிக்கெட்டுகளை கையாளும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 16ல் ஒரு நிமிடத்தில் 37,410 டிக்கெட்டுகள் பதிவாகின. ஒட்டுமொத்த திறன் இருமடங்காகியுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 7 அன்று ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
லாபமும் சவால்களும்
நிறுவனத்தின் லாபத்துக்கு டிக்கெட் சேவை கட்டணம் பின்னணியாக இருந்தாலும், அரசின் கொள்கை மாற்றங்கள் இதற்கு பெரிய சவாலாகவும் உள்ளன.
• டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க 2016ம் ஆண்டு இக்கட்டணம் ரத்து செய்யப்பட்டபோது, டிக்கெட் வருவாய் 26 சதவீதம் சரிந்தது. பின்னர் 2019 செப்டம்பரில் ஏ.சி., இல்லாத பெட்டிகளுக்கு 15 ரூபாய், ஏ.சி., வகுப்புகளுக்கு 30 ரூபாய் (+ஜி.எஸ்.டி.,) என மீண்டும் நடைமுறைக்கு வந்தது
• இது யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு முறையே ரூ.10 மற்றும் ரூ.20 ஆக குறைக்கப்பட்டது. தற்போது 51 சதவீத முன்பதிவுகள் யு.பி.ஐ., வாயிலாகவே நடைபெறுகின்றன.
• 2021 அக்டோபரில் சேவை கட்டண வருவாயில் பாதியை தனக்கு தரவேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதால், ஒரே நாளில் ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு 29 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. பின்னர், சில மணி நேரங்களில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
ஐபே சேவை
நிறுவனத்தின் சொந்த பரிவர்த்தனை தளமான ஐபே, கடந்த 2025-26 நிதியாண்டில் 116 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. வெளி வர்த்தகர்களுக்கும் சேவைகளை வழங்க ரிசர்வ் வங்கியிடம் முதற்கட்ட அனுமதியை 2025 ஆகஸ்ட்டில் பெற்றது. இதற்கான இறுதி அனுமதி அடுத்த நிதியாண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத்
ரயில்வே, 2030ம் ஆண்டுக்குள் 800 வந்தே பாரத் ரயில்களையும், 2047ம் ஆண்டுக்குள் 4,500 ரயில்களையும் இயக்க இலக்கு வைத்துள்ளது. ரயில்களின் எண்ணிக்கை உயரும்போது முன்பதிவாகும் டிக்கெட்டுகளும் உயர்ந்து, அதில் சேர்க்கப்படும் உணவு கட்டணமும் நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிடெண்டு
கடனில்லா நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் 2,842 கோடி ரூபாய் ரொக்க இருப்பு உள்ளது. நிகர லாபத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டாக வழங்குகிறது. 2021-22ல் ஒரு பங்குக்கு 3.50 ரூபாயாக வழங்கப்பட்ட டிவிடெண்டு, 2025-26ல் 9 ரூபாயாக கணிசமாக உயர்ந்துள்ளது.
எதிர்கால திட்டம்
டிக்கெட் முன்பதிவு தவிர மற்ற தொழில்களிலும் வளர ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டுள்ளது. அதன்படி உணவு வினியோகத்தில் ஆண்டுக்கு 15 சதவீதமும், சுற்றுலா பிரிவில் 20 சதவீதமும் வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒருங்கிணைந்த இணையதளம் மற்றும் ஐபே வாயிலாக கூடுதல் சேவைகளின் வருவாயை 10 சதவீதம் உயர்த்தவும், இயக்க லாப வரம்பை 30 சதவீத அளவில் தக்கவைக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக முன்பதிவு தளத்தை நவீனப்படுத்தி, புதிதாக 4 ரயில் நீர் ஆலைகளையும் அமைக்கவுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு லாபத்தில் நான்கில் மூன்று பங்கை தருவது டிக்கெட் முன்பதிவு பிரிவுதான். கூடுதல் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்து பயணியரின் எண்ணிக்கை பெருகும்போது, இந்த முக்கிய பிரிவு மேலும் வலுவான வளர்ச்சியை எட்டும் என்பதில் ஐயமில்லை.
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
