தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/நிழலா ?நிஜமா? எவ்வளவு காப்பீடு போதுமானது?

நிழலா ?நிஜமா? எவ்வளவு காப்பீடு போதுமானது?

நிழலா ?நிஜமா? எவ்வளவு காப்பீடு போதுமானது?


UPDATED : ஆக 17, 2026 03:30 AM

ADDED : ஆக 17, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2026 03:30 AM ADDED : ஆக 17, 2026 03:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காப்பீட்டு முகவர்களது வேலை சுலபமானது அல்ல. குடும்பத்துக்கு பாதுகாப்பு தரும் ஒரு பொருளை விற்க, மரணம், குடும்பம் சந்திக்கப்போகும் இழப்பு போன்ற சற்று சங்கடமான விஷயங்களை பற்றி பேச வேண்டியிருக்கும். அதனால், காப்பீட்டின் அவசியத்தை புரிய வைக்க, சிந்திக்க வைக்கும் கதைகளை சொல்வார்கள்.

அதில் ஒரு கேள்வி: “நீங்கள் ஒரு வாரத்துக்கு வெளியூர் போகிறீர்கள் என்றால், உங்கள் குடும்பத்துக்காக எவ்வளவு பணத்தை விட்டு செல்வீர்கள்?”

பதில் வந்ததும் அடுத்த கேள்வி: “அதே நீங்கள் நிரந்தரமாக போய்விட்டால், எவ்வளவு பணத்தை விட்டு செல்வீர்கள்?”

இந்த கேள்வி கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் ஆயுள் காப்பீடு வாங்குவது பற்றி யோசிக்க வைக்கும்.

எனவே எவ்வளவு காப்பீடு தேவைப்படும் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

பல ஆண்டுகளாக, ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை 1 கோடி ரூபாய் என்பது ஒரு பிரபலமான 'ஹெட்லைன்' தொகையாகிவிட்டது. பார்க்க பெரிய தொகை. “ஓ!” என்று ஒரு கணம் நம்மை திரும்பி பார்க்க வைக்கும். ஆனால், இந்த 1 கோடி ரூபாய் காப்பீடு நிழலா? நிஜமா? நிஜமாகத்தான் தெரிகிறது. கொஞ்சம் கணக்கு போட்டு பார்ப்போம்.

ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசியில் மரணத்துக்கான கிளெய்ம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் தொடர்ந்து வாழ்வதுதான் பாதுகாப்பான வழி.

அதற்கு வங்கியில் டிபாசிட் செய்த பணத்துக்கு வரும் வட்டி போன்ற, பாதுகாப்பான, நிச்சயமான வருமானம் வேண்டும்.

இன்று 1 கோடி ரூபாயை வங்கியில் வைத்தால், ஆண்டுக்கு 6 சதவீத வட்டி என்று வைத்துக்கொண்டால், மாதம் கிட்டத்தட்ட 50,000 ரூபாய் கிடைக்கும்.

இந்த 50,000 ரூபாய்தான் குடும்பத்தின் வருமானம். அன்றாட செலவுகள், கடன் தவணைகள், குழந்தைகளின் கல்வி, உடல்நல செலவுகள், குடும்பத்தை சார்ந்திருப்பவர்களின் தேவைகள் என எல்லாவற்றையும் இதிலிருந்துதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போது 1 கோடி ரூபாய் என்பது அவ்வளவு பெரிய தொகையாக தெரியவில்லை. சொல்லப்போனால், மிகவும் சிறியதாகவே தோன்றுகிறது.

அப்படியானால், ஆயுள் காப்பீட்டு கிளெய்ம் வாயிலாக கிடைக்கும் தொகை குடும்பத்துக்கு உண்மையிலேயே போதுமானதாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் எவ்வளவு வருமானம் தேவை என்று கணக்கிட்டு, அங்கிருந்து பின்னோக்கி வர வேண்டும். முதலில், குடும்பத்துக்கு மாதம் எவ்வளவு வருமானம் தேவை என்பதை பாருங்கள். 1 லட்சம் ரூபாயா? அல்லது 2 லட்சம் ரூபாயா?

அந்த அளவு மாத வருமானம் கிடைக்க, எவ்வளவு பணத்தை முதலீடு செய்து வைக்க வேண்டும் என்று கணக்கு போடுங்கள். அந்த தொகைதான் உங்களுக்கு தேவையான ஆயுள் காப்பீட்டின் அளவை தீர்மானிக்க உதவும்.

ஆனால் இத்துடன் கணக்கு முடிவதில்லை.

பணவீக்கம் என்ற ஒன்றும் இருக்கிறதே!

வருடங்கள் போகப்போக பொருட்களின் விலை உயரும். வாழ்க்கை செலவும் அதிகரிக்கும். அதனால், இன்று நம்மிடம் இருக்கும் ஒரு ரூபாயின் வாங்கும் திறன், 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு அதே அளவில் இருக்காது.

20 ஆண்டுகளுக்கு முன் 10 லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகையாக இருந்திருக்கலாம். இன்று அதே 10 லட்சம் ரூபாயால் கிடைக்கும் வாழ்க்கை வேறு.

அதேபோல, இன்றைய 1 கோடி ரூபாயும் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதே மதிப்புடன் இருக்காது. ஒருவேளை நாம் நினைப்பதைவிட வேகமாகவே அதன் மதிப்பு குறைந்திருக்கலாம்.

பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால், இன்று 1 கோடி ரூபாயில் வாங்கக்கூடிய பொருட்களையும் சேவைகளையும் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாங்க 3 கோடி ரூபாய்க்கும் மேல் தேவைப்படலாம்.

அதனால், காப்பீடு நிஜமாக இருக்க வேண்டுமென்றால், இன்றைய தேவையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் போதாது. எதிர்காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், கையில் இருக்கும் 1 கோடி ரூபாய் காப்பீடு, பார்ப்பதற்கு நிஜமாக இருந்தாலும், குடும்பத்தின் தேவையை பொறுத்தவரை ஒரு நிழலாகத்தான் இருக்கும்.

அதிலும் இது சாதாரண நிழல் அல்ல. குடும்பத்தின் வருமானத்தை ஈட்டும் நபர் இல்லாமல் போன பிறகு, அந்த குறையை சரிசெய்ய முடியாத கருமையான நிழல்.

இங்கே இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இவ்வளவு காப்பீட்டை இப்போதே வாங்க முடியுமா?

இளம் வயதில் வருமானம் குறைவாக இருக்கலாம். அதனால், அப்போது உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு சிறிய அளவு காப்பீட்டை வாங்கலாம். உங்கள் தொழில் வளர வளர, வருமானமும் அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளும் கூடும்.

அதற்கேற்ப, உங்கள் ஆயுள் காப்பீட்டையும் அவ்வப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டும். வருமானம் அதிகரிக்கும்போது, காப்பீட்டு தொகையையும் அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும்.

Image 1609822


அப்படியானால், உங்கள் ஆயுள் காப்பீடு நிழலா? நிஜமா?

அதற்கான பதில் வேறு யாருடைய கையிலும் இல்லை. உங்கள் கையில்தான் இருக்கிறது.

தேவையை சரியாக கணக்கிட்டு, எதிர்காலத்தையும் நினைத்து, காப்பீட்டை அவ்வப்போது மறுபரிசீலனை செய்து கொண்டே இருந்தால், உங்கள் குடும்பத்துக்கான காப்பீடு நிழலாக இல்லாமல் நிஜமான பாதுகாப்பாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us