மீண்டும் தலைதுாக்கும் ஸ்மால்கேப் பங்குகள் முதலீட்டுக்கு சாதகமான சூழல் உருவாகிறதா?
மீண்டும் தலைதுாக்கும் ஸ்மால்கேப் பங்குகள் முதலீட்டுக்கு சாதகமான சூழல் உருவாகிறதா?
ADDED : ஆக 22, 2026 01:39 AM

கடந்த 18 மாதங்களாக பின்னடைவை சந்தித்து வந்த ஸ்மால்கேப் பங்குகள் தற்போது மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை பெற தொடங்கியுள்ளன. இந்நிலையில், நடப்பு 2026ம் ஆண்டின் ஆகஸ்ட் 20ம் தேதி வரை 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு கிட்டத்தட்ட 13 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இத்துறை பங்குகள் பற்றி 'ஐகுளோபல் ஆல்டர்னேட்' நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்ததாவது,
'நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு' கடந்த 2023ல் 48.10 சதவீதமும், 2024ல் 26.40 சதவீதமும் உயர்ந்த நிலையில், 2025ல் 6 சதவீதம் சரிந்தது. இது, முந்தைய 7 ஆண்டுகளில் இக்குறியீட்டின் மிக பலவீனமான ஆண்டாக அமைந்தது.
இந்த சரிவு நிறுவனங்களின் கடன் சுமையாலோ அல்லது பணவீக்க பிரச்னைகளாலோ ஏற்படவில்லை. பங்குகளின் மதிப்பீடு அளவுக்கு அதிகமாக உயர்ந்ததும், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததும், ஒழுங்குமுறை அமைப்புகளின் எச்சரிக்கையுமே இதற்கு காரணம்.
அதாவது, நிறுவனங்களின் நிதிநிலை சேதமடையவில்லை; மாறாக, அதிகப்படியாக இருந்த பங்குகளின் விலை, நிறுவனங்களின் உண்மையான வருவாய்க்கு ஏற்ப இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளது.
காரணங்கள்
1 அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்தத்தை தொடர்ந்து, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115 டாலரில் இருந்து 82 டாலராக குறைந்துள்ளது. மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு மீட்சியடைந்துள்ளதுடன், அமெரிக்காவுடனான வர்த்தக வரிகளும் 10 சதவீதமாக குறைந்துள்ளது
2 நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் நிப்டி ஸ்மால்கேப் 250 நிறுவனங்களின் வரிக்கு பிந்தைய லாபம் ஆண்டுக்கு 27 சதவீதம் வளர்ச்சியடையும் என கணக்கிடப்பட்டுள்ளது
3 ஜூலை 2026 நிலவரப்படி, 47 சதவீத ஸ்மால்கேப் பங்குகள் அவற்றின் 10 ஆண்டு சராசரி மதிப்பீட்டை விட குறைவான விலையிலேயே கிடைக்கின்றன
4 நிறுவனங்களின் மூலதனச் செலவு 9 சதவீதம் உயர்ந்துள்ள போதிலும், அவற்றின் கடன் சுமை பல ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது
5 ஸ்மால்கேப் மியூச்சுவல் பண்டுகளின் நிகர வரத்து கடந்த 2021-22ம் நிதியாண்டில் 10,145 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 2025-26ம் நிதியாண்டில் 51,872 கோடி ரூபாயாக உயர்ந்து சந்தைக்கு பக்கபலமாக உள்ளது.
அணுகுமுறை
ஸ்மால்கேப் பங்குகள் வரலாற்று ரீதியாக 11 முதல் 56 சதவீதம் வரை சரிவை சந்திக்கக்கூடிய அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை. எனவே, இதில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5 முதல் 7 ஆண்டுகள் நீண்டகால நோக்கோடு அணுக வேண்டும்.
மொத்த முதலீட்டில் ஸ்மால்கேப் பங்குகள் ஒற்றை இலக்கத்திலோ அல்லது 10-15 சதவீதம் வரையிலோ மட்டுமே இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாக முதலீடு செய்யாமல், எஸ்.ஐ.பி., அல்லது பகுதி பகுதியாக பிரித்து முதலீடு செய்வதே பாதுகாப்பானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
