UPDATED : ஜன 10, 2026 07:55 AM
ADDED : ஜன 10, 2026 07:52 AM

டிஜிட்டல் முதலீட்டு தளம் 'இந்தியா போஸ்ட்' அறிமுகம்
'இ ந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய டிஜிட்டல் முதலீட்டு தளத்தை உருவாக்க, 'சாய்ஸ் வெல்த்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய தளத்தில், பழைய மற்றும் புதிய முதலீட்டாளர்கள், மொபைல் செயலி, இணையதளம் மற்றும் தபால் ஊழியர்களின் எம்.ஏ.டி.எம்., வாயிலாக மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யலாம். புதிய டிஜிட்டல் முதலீட்டு தளத்துக்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, முதலீடு சார்ந்த சேவைகளை வழங்க இருப்பதாக சாய்ஸ் வெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெச்.டி.எப்.சி., வங்கிக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு
ஹெச் .டி.எப்.சி.,வங்கியின் பங்குகள், கடந்த வாரத்தின் 5 வர்த்தக நாட்களில் கிட்டத்தட்ட 6 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டு உள்ளன. இதனால், இவ்வங்கியின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு டிபாசிட் வளர்ச்சியை விட கடன் அதிகரித்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது.
ஓலா எலக்ட்ரிக் பங்குகளை விற்றது 'சாப்ட் பேங்க்'
ஜ ப்பானை சேர்ந்த பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான 'சாப்ட் பேங்க்', தன் வசமுள்ள 2.15 சதவீத 'ஓலா எலக்ட்ரிக்' பங்குகளை சந்தையில் நேரடியாக விற்பனை செய்துள்ளது. பங்கு விற்பனைக்கு பின், சாப்ட் பேங்க் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'எஸ்.வி.எப்.,2 ஆஸ்ட்ரிச்' வசமுள்ள ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 15.68 சதவீதத்தில் இருந்து, 13.53 சதவீதமாக குறைந்துள்ளது.
டிஜிட்டல் கையொப்பம்: எப்.பி.ஐ.,களுக்கு அறிமுகம்
வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள், இந்தியாவில் பதிவு செய்யும் முறையை செபி எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி, வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள், தங்களின் பதிவு விண்ணப்பத்துடன் டிஜிட்டல் கையொப்பத்தையும் இணைத்து சமர்ப்பிக்கலாம்.
பொது விண்ணப்ப படிவ இணையதளத்திலேயே இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த டிஜிட்டல் முறையால், வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்குள் வருவதற்கான காலதாமதம் குறையும்; பதிவு செய்யும் நடைமுறை மிகவும் எளிதாகும் என செபி தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.எப்.,களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சி றப்பு முதலீட்டு பண்டுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், முதலீட்டாளர்களை பாதுகாக்கவும், புதிய விதிமுறைகளை செபி அறிவித்துள்ளது.
மியூச்சுவல் பண்டு மற்றும் பி.எம்.எஸ்., ஆகியவற்றிற்கு இடைப்பட்ட இந்த பண்டுகளில், குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளவர்களுக்கு புதிய விதிமுறைகள் பொருந்தும். இந்த வகை பண்டுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ட்ரஸ்டீஸ்களும், முதலீட்டு வரம்புகள், கட்டணங்கள் மற்றும் ரிஸ்க் மேலாண்மை குறித்த விரிவான அறிக்கையை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வகை பண்டுகள் குறித்த விளம்பரங்கள், முதலீட்டு உத்திகள் மற்றும் கடன் பத்திர முதலீட்டு வரம்புகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

