ADDED : ஜூலை 02, 2026 03:55 AM

யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் 23% வளர்ச்சி
கடந்த ஜூன் மாதத்தில் யு.பி.ஐ., பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 23 சதவீதம் உயர்ந்து 2,272 கோடியாக உள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பரிவர்த்தனைகளின் மதிப்பு 20 சதவீதம் உயர்ந்து 28.92 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தினசரி
சராசரி பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 75.70 கோடியாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
'ரைட்ஸ்' பங்கு16% உயர்வு
'ரைட்ஸ்' நிறுவனம் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திடம் இருந்து 175 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது. அதன்படி பல்கலையில் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளை ரைட்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். இத்தகவல் வெளியானதால் நேற்று ரைட்ஸ் பங்கு விலை கிட்டத்தட்ட 18 சதவீதம் வரை உயர்ந்தது.
'கே.பி.ஐ.டி., டெக்னாலஜிஸ்' பங்கு விலை சரிவு
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த வருவாய் அளவிலேயே இரண்டாம் காலாண்டு வருவாயும் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக 'கே.பி.ஐ.டி., டெக்னாலஜிஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தொழிலில் குறுகிய கால அடிப்படையில் வரும் செப்டம்பர் வரை மந்தநிலை தொடரும் என்ற எதிர்பார்ப்பால், நேற்று இந்நிறுவன பங்கு விலை கிட்டத்தட்ட 17 சதவீதம் சரிந்துள்ளது.
எடெல்வைஸ் ஏ.எம்.சி., சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி
'எடெல்வைஸ் ஏ.எம்.சி.,' நிறுவனம் தன்னிடம் நிர்வாகத்தில் உள்ள ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிடு சொத்துக்களின் மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 29ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்திடம் ஈக்விட்டி, டெப்ட், எஸ்.ஐ.எப்., பேக்டர் பண்டுகள் மற்றும் கிப்டி சிட்டி திட்டங்களில் நிர்வாகத்தில் உள்ள மொத்த சொத்து மதிப்பு 1.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
