ADDED : செப் 29, 2026 01:49 AM
தங்கம், வெள்ளி இ.டி.எப்.,கள் சரிவு
ஈரானின் அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தலாம் என்றும் கவலை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை 3 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. இந்திய சந்தையிலும் தங்கம் இ.டி.எப்.களின் விலை 2 சதவீதத்துக்கும் மேல் குறைந்தது. வெள்ளி இ.டி.எப்.களின் விலை அதிகபட்சமாக 3.60 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.
'பேங்க் நிப்டி' குறியீடு 2% இறக்கம்
கடன் பத்திரங்களில் வருமானம் உயர்ந்ததாலும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாலும், நேற்று வர்த்தகத்தில் வங்கி துறை பங்குகள் சரிந்தன. வர்த்தக முடிவில் பேங்க் நிப்டி குறியீடு 2 சதவீதம் இறங்கியுள்ளது. மேலும், பொதுத்துறை வங்கிகளுக்கான 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு 3.24 சதவீதம் சரிந்துள்ளது. 'எஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க், ஹெச்.டி.எப்.சி., பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்' ஆகிய வங்கிகளின் பங்குகள் அதிகளவில் விலை இறங்கியுள்ளன.
