மினி பேட்டி : அன்னிய நேரடி முதலீட்டால் ஆபத்து இல்லை
மினி பேட்டி : அன்னிய நேரடி முதலீட்டால் ஆபத்து இல்லை
ADDED : ஆக 17, 2026 03:16 AM

பொது காப்பீட்டு துறையில் 100 சதவீதம் நேரடி அன்னிய முதலீட்டுக்கு 'ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,' அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார், 'ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வால்.
அவர், நமது நாளிதழுக்கு அளித்த மினி பேட்டி:
இந்தியாவில் பொதுக் காப்பீடு எந்த அளவுக்கு உள்ளது?
ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு மருத்துவ காப்பீட்டின் தேவையை உணர்ந்து, அதை அதிகம் எடுக்கிறார்கள். தற்போது அசாம், குஜராத், வயநாடு ஆகிய இடங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால், அது தொடர்பான காப்பீடு திட்டங்களிலும் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு வருவது நல்லதா?
ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பு இத்துறையில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. மேலும் தனியார் நிதியங்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது. இது காப்பீடு பெறும் பொதுமக்களுக்கு தேர்ந்தெடுப்பதற்கான நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் 56 சதவீத வாகனங்கள் காப்பீடு செய்யப்படாமலேயே இயக்கப்படுகின்றன என்பதால், மிகப்பெரிய சந்தை வாய்ப்பும் இருக்கிறது.
மருத்துவ காப்பீட்டு பிரீமியம் உயர்ந்து வருகிறதே?
ஆம், கடந்த ஆண்டு 12 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே மருத் துவ சிகிச்சை செலவை ஒரே மாதிரியாக தரப்படுத்த, மருத்துவத் துறையும் காப்பீட்டுத் துறையும் இணைந்து ஆலோசித்து வருகின்றன. விரைவில் இதற்கான சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
காப்பீட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் 'அண்டர்ரைட்டர்ஸ்' துறையினருக்கு என்ன மாதிரியான சவால்கள் இருக்கின்றன?
10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வெள்ளம், நிலச்சரிவு முதலிய பிரச்னைகள் பெரிய அளவுக்கு இந்தியாவில் கிடையாது. இப்போது இவை நிகழத் தொடங்கியிருப்பதால், இவற்றுக்கேற்ப புதிய திட்டங்களை வடிவமைக்கக்கூடிய பணியில் அண்டர்ரைட்டர்ஸ் எனப்படும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
