சென்செக்ஸ் 1.05 லட்சத்தை எட்டும் ‘மார்கன் ஸ்டான்லி’ கணிப்பு
சென்செக்ஸ் 1.05 லட்சத்தை எட்டும் ‘மார்கன் ஸ்டான்லி’ கணிப்பு
UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 10:22 PM

சென்செக்ஸ், வரும் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 1,05,000 புள்ளிகளை எட்டும் என சர்வதேச தரகு நிறுவனமான ‘மார்கன் ஸ்டான்லி’ கணித்துள்ளது. இந்த தரகு நிறுவனம், சந்தையின் போக்கை மூன்று விதமான சூழ்நிலைகளின் அடிப்படையில் கணித்துள்ளது.
1 95,000 புள்ளிகளை தொட வாய்ப்பு: வலுவான உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, இந்தியா – -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த தீர்வு மற்றும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு, 100 டாலருக்கு கீழ் இருப்பது போன்ற காரணிகளால் இது சாத்தியமாகும். மேலும், 2029ம் நிதியாண்டு வரை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 18 சதவீதமாக இருக்கும்
2 1,05,000 புள்ளிகள் வரை உயரலாம்: கச்சா எண்ணெய் விலை 75 டாலருக்கு கீழ் நிலைத்திருத்தல், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அன்னிய முதலீட்டு வரத்து அதிகரித்தல் ஆகியவை இந்த உயர்வுக்கு துணைபுரியும்
3 68,000 புள்ளிகள் வரை சரியக்கூடும்: ஒருவேளை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேல் நீடித்தாலோ, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தினாலோ அல்லது உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலோ இது நிகழ வாய்ப்பு.
சிறப்பான துறைகள்
வெளிநாட்டு சந்தைகளை சார்ந்திருக்கும் துறைகள் மற்றும் பாதுகாப்பு துறைகளை விட, உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளுக்கு, மார்கன் ஸ்டான்லி அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. குறிப்பாக நிதி துறை, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த பங்குகள் சிறப்பாக செயல்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
