வேகமெடுக்கும் மின்சார துறை அதானி பவர் 20% உயர வாய்ப்பு 'மோதிலால் ஓஸ்வால்' பரிந்துரை
வேகமெடுக்கும் மின்சார துறை அதானி பவர் 20% உயர வாய்ப்பு 'மோதிலால் ஓஸ்வால்' பரிந்துரை
ADDED : செப் 06, 2026 02:46 AM

அனல்மின் சக்திக்கு தேவை அதிகரித்து வருவதால் 'அதானி பவர்' பங்குகளை வாங்கலாம் என்று தரகு நிறுவனமான 'மோதிலால் ஓஸ்வால்' பரிந்துரை வழங்கியுள்ளது.
விரிவாக்க திட்டங்கள்
அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய, அதானி பவர் நிறுவனம் பெரிய விரிவாக்க திட்டங்களை வகுத்துள்ளது
தற்போது கிட்டத்தட்ட 18,300 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி திறன் கொண்டுள்ளது
நாட்டின் மிகப்பெரிய தனியார் அனல்மின் நிறுவனமாகவும் முன்னிலையில் உள்ளது
உற்பத்தி திறனை 2031-32ம் நிதி ஆண்டுக்குள் 42,000 மெகாவாட்டாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது
கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவு செய்யவும் திட்டமிட்டுள்ளது
23,720 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்திக்கான பணிகளுக்கு முழு நிலமும் கையகப்படுத்தப்பட்டு, உபகரணங்களுக்கான ஆர்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.
அனல்மின் தேவை மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்புகளின்படி, நாட்டின் உச்சக்கட்ட மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் அனல்மின் சக்தியே பிரதான அடித்தளமாக நீடிக்கிறது.
சூரிய மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆதாரங்களில் ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் இரவு நேர மின்தேவையை ஈடுகட்ட நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தியே நம்பகமான ஆதாரமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு (10,700 மெ காவாட்), உத்தர பிரதேசம் (10,200 மெகாவாட்) ஆகிய மாநிலங்களுக்கு கணிசமான அனல்மின் கட்டமைப்பு தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
நிறுவன வளர்ச்சி அதானி பவர் நிறுவனம் நலிந்த மின் உற்பத்தி நிலையங்களை குறைந்த விலைக்கு கையகப்படுத்தி, அவற்றை லாபகரமாக மாற்றி வருகிறது
எதிர்காலத்தில் அணுமின் சக்தி உற்பத்தியில் கால்பதிக்கும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது
தற்போதைய உற்பத்தி திறனில் 95 சதவீதம் நீண்டகால மற்றும் நடுத்தர கால மின்கொள்முதல் ஒப்பந்தங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது
புதிய ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் சாதகமாக இருப்பதாலும், வருவாய் உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனால், எபிட்டா 2028-29ம் நிதி ஆண்டு வரை சராசரியாக 21 சதவீதம் உயரக்கூடும் என்று மோதிலால் ஓஸ்வால் கணித்துள்ளது.
