ஃபண்ட மென்டல் அனாலிசிஸ் : மும்பை பங்கு சந்தை: வருவாய் வேகம் நீடிக்குமா?
ஃபண்ட மென்டல் அனாலிசிஸ் : மும்பை பங்கு சந்தை: வருவாய் வேகம் நீடிக்குமா?
UPDATED : நவ 15, 2026 01:36 AM
ADDED : நவ 14, 2026 10:06 PM

ஆசியாவின் மிகப்பழமையான பங்கு சந்தையான பி.எஸ்.இ., 1875ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2017 முதல் புரமோட்டர்கள் அல்லாத பங் கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உள்ளது. தேசிய பங்கு சந்தைக்கு (என்.எஸ்.இ.,) ஒரே போட்டியாளராகவும் உருவெடுத்துள்ளது. நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு 'சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஆப்ஷன்ஸ்' வர்த்தகமே அடித்தளமாக அமைந்துள்ளது.
'டெரிவேட்டிவ்ஸ்' வியூகம்
டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் என்.எஸ்.இ., ஆதிக்கம் செலுத்த, பி.எஸ்.இ., முன்பு எடுத்த முயற்சிகள் எடுபடவில்லை. 2023 மே மாதம் பி.எஸ்.இ., எடுத்த வியூகம் ஆட்டத்தையே மாற்றியது. சிறிய 'லாட்' அளவு, நிப்டிக்கு போட்டியில்லாத தனி காலாவதி நாள் மற்றும் தொடக்கத்தில் கட்டண விலக்கு ஆகிய சிறப்பம்சங்களுடன் 'சென்செக்ஸ் ஆப்ஷன்ஸ்' மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு செபியின் 'வாராந்திர காலாவதி' விதிமுறைகளும் வலுசேர்த்தன. நிப்டி உடன் சென்செக்ஸ் நேரடியாக மோதுவது தவிர்க்கப்பட்டது. இந்த நகர்வுகளால், இண்டெக்ஸ் ஆப்ஷன்ஸ் பிரீமியம் சந்தையில் பூஜ்ஜியத்தில் இருந்த பி.எஸ்.இ., சந்தையின் பங்கு, 2025 - 26ல் 27.9 சதவீதமாக அதிகரித்து, கடந்த ஏப்ரலில் 37 சதவீத உச்சத்தை எட்டியது.
முக்கிய சாதகங்கள்
1 உலகளவில் அறியப்பட்ட 'சென்செக்ஸ்' குறியீடு
2 என்.எஸ்.இ.,யை விட இருமடங்கு அதிக நிறுவனங்கள் பி.எஸ்.இ.,யில் பட்டியலாகி உள்ளன
3 வர்த்தகர்களுக்கான குறைந்த கட்டண அமைப்பு
4 ஒரு சந்தைக்கு ஒரு வாராந்திர காலாவதி, பொதுவான ஒப்பந்த குறிப்பு மற்றும் சிறந்த விலையில் வர்த்தகத்தை முடிக்கும் விதி ஆகியவை.
அடுத்தகட்ட வளர்ச்சி
நிறுவனத்தின் வர்த்தக ஆதிக்கம், காலாவதியை நெருங்கும் ஒப்பந்தங்களை சுற்றியே உள்ளது. காலாவதிக்கு அருகிலுள்ள மலிவு விலை பிரீமியங்களை நம்பியிருப்பதால், கடந்த செப்டம்பர் காலாண்டில், பி.எஸ்.இ., யின் 'பிரீமியம்/நோஷனல்' விகிதம் 0.12 சதவீதமாக உள்ளது. இது என்.எஸ்.இ.,யின் அளவில் சரிபாதியாகும்.
அதேநேரம், சிறிய அளவில் நிலையான வருவாய் தரும் பிரிவுகள் நம்பிக்கை அளிக்கின்றன. தினசரி பங்கு வர்த்தகம் 10,494 கோடி ரூபாயாக உச்சம் தொட்டாலும், சந்தை பங்கு (~9%) நிர்வாகம் எதிர்பார்க்கும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. மறுபுறம், கோ - லொகேஷன் பிரிவு, கடந்த ஏப்ரல் - செப்டம்பர் அரையாண்டில், 103 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
கட்டண நிர்ணயம்தான் பி.எஸ்.இ., பயன்படுத்தாமல் உள்ள துருப்புச்சீட்டாக உள்ளது. உரிய நேரத்தில் கட்டணம் உயர்த்தப்படும் என நிர்வாகம் கூறினாலும், தேதியை குறிப்பிடவில்லை. கட்டணம் உயர்த்தப்பட்டால், அது நேரடியாக எபிட்டா லாபத்தை உயர்த்தும். ஆப்ஷன்ஸ் மற்றும் ஐ.பி.ஓ., பட்டியலிடுதல் பிரிவுகளில் சந்தை பங்கை விரிவுபடுத்த இன்னும் அதிக இடமிருப்பதால், அதில் பி.எஸ்.இ., கவனம் செலுத்துகிறது.
எதிர்கொள்ளும் சவால்கள்
1 வருவாயில் 70 சதவீதம், ஒரேயொரு டெரிவேட்டிவ்ஸ் தயாரிப்பிலிருந்து மட்டும் வருகிறது
2 காலாவதி நாட்களில் சந்தை பங்கை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைவு
3 பங்கு சந்தை வீழ்ச்சி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சிறு முதலீட்டாளர்கள் குறைவது
4 நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ., தேடும் பணி நடைபெறுகிறது.
எதிர்கால பார்வை
அதிக லாப வரம்பையும், வலுவான செயல்பாட்டு திறனையும் கொண்ட பங்கு சந்தையாக பி.எஸ்.இ., மாறியுள்ளது. நிலையான செலவுகள் கட்டுக்குள் இருப்பதால், 65 - 70 சதவீத எபிட்டா லாப விகிதத்தை தக்கவைக்க முடியும். எனினும், இந்த வருவாய் வேகம் நீடிக்குமா என்பதே பெரிய கேள்வி. 2024 - 2026 கால வளர்ச்சி என்பது, சந்தை பங்கை பிடித்ததாலும், சாதகமான செபி விதிமுறைகளாலும் கிடைத்தது.
இனி, மாதாந்திர ஒப்பந்தங்கள், காலாவதி அல்லாத நாட்களின் வர்த்தகம், கட்டண உயர்வு மற்றும் பரிவர்த்தனை சாராத வருவாய் வாயிலாகவே வளர்ச்சியை எட்ட வேண்டும்.
ஆனால், இவற்றில் நிறுவனம் இன்னும் பெரியளவில் முன்னேறவில்லை. கடந்த நவம்பர் 11 நிலவரப்படி 3,906 ரூபாய் என்ற மதிப்பில், எதிர்கால வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தும் இப்போதே பங்கு விலையில் கணக்கிடப்பட்டுவிட்டன.
பொறுப்பு, துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ, எங்கள்
வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்
கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை
உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
சேவைகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சார்ந்த டெரிவேட்டிவ்ஸ்
கடன் பத்திரங்கள்
கரன்சி பிரிவு
எஸ்.எம்.இ., தளம்
'பி.எஸ்.இ., ஸ்டார் எம்.எப்.,' தளம்
சந்தை பங்கு (%)
பங்கு சார்ந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்ஸ்: 27.90
கார்ப்பரேட் கடன் பத்திரங்கள்: 14.30
பங்கு வர்த்தகம்: 7
பங்கு சார்ந்த இண்டெக்ஸ் பியூச்சர்ஸ்: 1.10
தனி பங்கு பியூச்சர்ஸ்: 0
வருவாய் பங்களிப்பு (%)
பரிவர்த்தனை கட்டணங்கள்: 79
பட்டியலிடுதல், 'புக் - பில்டிங்' கட்டணங்கள்: 11
இதர செயல்பாடுகள் (கோ - லொகேஷன், சந்தை தரவு, குறியீட்டு உரிம கட்டணங்கள்): 7
கருவூல வருவாய்: 3.50
துணை நிறுவனங்கள்
பி.எஸ்.இ., கிளியரிங்
பி.எஸ்.இ., டெக்னாலஜீஸ்
பி.எஸ்.இ., இண்டெக்ஸ் சர்வீசஸ்
இந்தியா ஐ.என்.எக்ஸ்.,
இந்தியா இன்டர் நேஷனல் கிளியரிங் கார்ப்பரேஷன்

