ADDED : நவ 16, 2025 10:14 PM

'பர்சனல் பைனான்ஸ்' என்பது எதை குறிப்பிடுகிறது என்பதை எல்லாம் அறியாமல், அடிக்கடி உச்சரிக்கப்படுவதை பார்க்கிறேன். அதனால், முதலில் இதுகுறித்த சரியான புரிதலை ஏற்படுத்துவதில் துவங்கி, படிப்படியாக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொன்றாக விளக்கலாம் என பார்க்கிறேன்.
சரி, பர்சனல் பைனான்ஸ் என்பது எதை குறிப்பிடுகிறது?
நிதி திட்டமிடல், சேமித்தல், முதலீடு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்கள் வருவாயை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது தான் பர்சனல் பைனான்ஸ் எனும் கலை. அதன் வாயிலாக பணம் உங்களுக்கு சேவகனாகத் திகழும்.
முறையான நிதி திட்ட மிடல் தேவையா எனில், தேவைதான். இல்லையெனில், உயர் வருவாய் ஈட்டும் குடும்பங்கள் கூட, கடன் வலையில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
பணம் கத்தி போன்றது. அதை ஆக்கவும் பயன்படுத்தலாம், அழிக்கவும் பயன்படுத்தலாம். நிதி திட்டமிடல், சரியான திறனையும், ஒழுக்கத்தையும், திசையையும் தருகிறது.
நிதி பழக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், மனதில் நெருக்கடி ஏற்படாமல் நிம்மதி கிடைக்கும்.
எதிர்காலப் பாதுகாப்புக்கு சொத்து சேர்ப்பது என்பது ஆடம்பரத்துக்காக மட்டுமல்ல; அன்றாட செலவுகள், வேலை இழப்பு, மருத்துவத் தேவைகள் போன்ற அவசர காலங்களிலும் உதவும்.
நல்ல நிதி திட்டமிடல் குடும்பத்தை நெருக்கடியில் இருந்து காப்பாற்றி, பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும்.
நிதி சுதந்திரத்தை அடைவது எப்படி?
வருவாயைக் கணக்கிடுங்கள்: சம்பளம், தொழில், வாடகை, வட்டி உட்பட அனைத்து வருவாய் வழிகளையும் தெளிவாக எழுதி, மொத்த தொகையை உறுதிப்படுத்தவும்.
ரொக்க கையிருப்பை திட்டமிடுங்கள்: செலவுகளை அத்தியாவசியம் (வாடகை, மளிகை, கட்டணங்கள்) மற்றும் தேவைகள் (சுற்றுலா, ஆடம்பரப் பொருட்கள்) என பிரித்து, தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி சேமியுங்கள்.
சரியான காப்பீட்டை எடுங்கள்: ஆயுள் காப்பீடு (டேர்ம் பிளான்), மருத்துவ காப்பீடு, சொத்துக் காப்பீடு (கார், வீடு) ஆகியவை கட்டாயம். சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சொத்துக் காப்பீடு மிக முக்கியம்.
நீண்டகால இலக்குகளுக்குச் சேமியுங்கள்: குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம், வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, எதிர்காலத்தில் கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
வரி குறித்து திட்டமிடுங்கள்: அபராதங்களைத் தவிர்க்க, குறிப்பிட்ட காலத்துக்குள் வரிகளைக் கட்ட முன்னதாகவே திட்டமிடுவது அவசியம்.
அவசர கால நிதி தொகுப்பு: உங்கள் ஆறு மாத குடும்ப செலவுகளுக்குத் தேவையான தொகையை வங்கியில் தனியே வைத்திருங்கள். திடீர் மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு இது கைகொடுக்கும்.
யோசித்து முதலீடு செய்யுங்கள்: உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப, மியூச்சுவல் பண்டு, பி.பி.எப்., வைப்பு நிதி போன்ற சரியான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, நிதி ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்யுங்கள்.
ஆடம்பரத்துக்குக் கடன் வேண்டாம்: வெளிநாட்டுச் சுற்றுலா, விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது, கிரெடிட் கார்டு அதிகச் செலவுகளுக்காகக் கடன் வாங்காதீர்கள். இது உங்கள் நிதி நிலையைக் குலைக்கும்.
பிள்ளைகளைச் சார்ந்திருக்க வேண்டாம்: வலுவான சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாததால், பெற்றோர் தங்கள் ஓய்வு கால தேவைகளை திட்டமிட்டு சேமிக்க வேண்டும். பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்காமல், நமக்கு பின் மீதமுள்ளதை அவர்களுக்குக் கொடுக்கலாம்.
உயில்: உங்கள் வாழ்வுக்குப் பின், சொத்துக்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் சந்ததியினருக்குப் போய்ச் சேர உயில் அவசியம். இது குடும்பத் தகராறுகளைத் தவிர்க்கும்.
முடிவாக மத்தியதர வர்க்கக் குடும்பங்களுக்கு பர்சனல் பைனான்ஸ் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதும் தான்.
முறையாகத் திட்டமிட்டு, கடன்களைத் தவிர்த்து, காப்பீடு செய்து, எதிர்காலத்துக்காகச் சேமித்து, முதலீடு செய்து வந்தால், முழுமையான நிம்மதியும், நிதி சுதந்திரமும் கிடைக்கும்.
எளிமையான திட்டமிடல் மற்றும் ஒழுங்கு மட்டும் இருந்தால் போதும்; ஒவ்வொரு குடும்பமும் மரியாதையோடும், உறுதியோடும் வாழ முடியும்.

