ADDED : ஏப் 22, 2026 02:00 AM

'பி.எல்.ஐ.,' மற்றும் 'ஆர்.பி.எல்.ஐ.,' என்று சொல்லப்படுகிற 'அஞ்சலக ஆயுள் காப்பீடு' மற்றும் 'கிராமப்புற தபால் நிலைய ஆயுள் காப்பீடு' திட்டங்களில் சேர்ந்துள்ளவர்கள், இனி தங்கள் மாதாந்திர பிரீமியத்தை தபால் நிலையத்திற்கு செல்லாமலே, செல்போன் வாயிலாகவே எளிதாக கட்டலாம்.
இதற்காக, இந்திய தபால் துறை 'பாரத் பில்பே' என்ற டிஜிட்டல் தளத்துடன் இணைந்துள்ளது. இதன் வாயிலாக உங்கள் வங்கி செயலியில் உள்ள 'பில் பேமென்ட்' வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் பணம் செலுத்த முடியும். 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' இதற்கான 'பில்லர் ஆப்பரேட்டிங் யூனிட்' ஆக செயல்படுகிறது.
தற்போது 'அஞ்சலக ஆயுள் காப்பீட்டு' திட்டத்தில் சுமார் 1.25 கோடி பாலிசிதாரர்கள் உள்ள நிலையில், இந்த டிஜிட்டல் வசதி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
