ADDED : அக் 21, 2025 12:23 AM

கா கித வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்கள், அதை விரைந்து டிமேட் வடிவில் மாற்றிக்கொள்வதற்கு ஏதுவாக, விதிமுறைகளில் திருத்தங்களை அறிமுகம் செய்ய உள்ளது, செபி.
அதாவது, 2019 ஏப்ரல் 1க்கு முன்னர், காகித வடிவில் பல முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியிருப்பர். அவற்றை டிமேட் வடிவில் மாற்றிக்கொள்ள வேண்டும், இனிமேல் பங்குச் சந்தை பரிவர்த்தனை அனைத்தும் டிமேட் வடிவிலேயே நடைபெறும் என்று செபி தெரிவித்திருந்தது.
அதைச் செய்வதற்கு 2021, மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும், பலரது காகிதப் பங்குகள் தொலைந்து போயிருந்தன; வாடிக்கையாளர்கள் மரணமடைந்திருந்தனர் அல்லது, அவர்கள் சமர்ப்பித்த டிமேட் மாற்று மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தான் தற்போது, பங்குகளை டிமேட் வடிவில் மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த உத்தேசித்திருக்கிறது செபி.
இதன்படி, இந்த ஆண்டு ஜூலை 7 முதல், அடுத்த ஆண்டு ஜனவரி 6க்குள், முதலீட்டாளர்கள் தங்களுடைய காகித பங்குகளை உரிய ரெஜிஸ்ட்ரார்கள், மற்றும் டிரான்ஸ்பர் ஏஜென்டுகளிடம் சமர்ப்பிக்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள எட்டு ரெஜிஸ்ட்ரார்களும் டிரான்ஸ்பர் ஏஜென்டுகளும் ஒரு விவரத்தைத் தெரிவித்துள்ளனர். அதாவது, இந்த வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர், முதல் 45 நாட்களில், மூன்றில் இரண்டு பங்கு மனுக்கள், 2019க்கு முன்பு வாங்கப்பட்ட காகித பங்குகளை மாற்றுவதற்கான புதிய மனுக்களாக வந்துள்ளன என்று அவை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ரெஜிஸ்ட்ரார்கள், டிரான்ஸ்பர் ஏஜென்டுகள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், சட்ட வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனை குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், மேலும் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டுள்ளது செபி.
அதன்படி, முன்பு, காகிதப் பங்குகளை டிமேட்டாக மாற்றப்போகும் போது, அந்தந்த நிறுவனத்திடம் இருந்து உறுதிக் கடிதத்தை -'லெட்டர் ஆப் கன்பர்மேஷனை' 120 நாட்களுக்கு வாங்கி இணைக்க வேண்டும். இல்லையெனில், அந்தப் பங்குகள் தற்காலிக 'எஸ்க்ரோ' கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
தற்போது இந்த லெட்டர் ஆப் கன்பர்மேஷன் என்ற ஒரு படிநிலையை நீக்கலாமா என்று செபி யோசிக்கிறது.
முதலீட்டாளர்கள் தங்களுடைய டிமேட் எண் விபரங்களை நிறுவனத்திடமோ ரெஜிஸ்ட்ரார்கள், டிரான்ஸ்பர் ஏஜெண்டுகளிடமோ கொடுத்தால் போதும். தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, முதலீட்டாளரது டிமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும்.
இந்த விஷயத்தில் பொதுமக்களுடைய கருத்துகள் நவம்பர் 7 வரை கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.