சபையர் புட்ஸ் - தேவ்யானி இணைப்பு ஒப்புதலால் பங்கு விலை உயர்வு
சபையர் புட்ஸ் - தேவ்யானி இணைப்பு ஒப்புதலால் பங்கு விலை உயர்வு
ADDED : ஜூன் 17, 2026 04:02 AM

'சபையர் புட்ஸ், தேவ்யானி இன்டர்நேஷனல்' ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., ஆகிய இரு சந்தைகளுமே ஒப்புதல் அளித்துள்ளதால், அவ்விரு நிறுவன பங்குகளுமே ஏற்றம் கண்டன.
இந்த இரு நிறுவனங்களும் 'கே.எப்.சி., பீட்சா ஹட்' போன்ற உணவகங்களை நடத்துகின்றன. இரு நிறுவனங்களையும் இணைப்பதற்கான நடவடிக்கையில், என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., ஆகிய இரு பங்கு சந்தைகளும் ஒப்புதல் அளித்து கடிதம் வழங்கியுள்ளன. இந்த கடிதம் 6 மாதங்கள் வரை செல்லும் என்பதால், அதற்குள் அடுத்தகட்டமாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுக வேண்டும்.
ஆனால், அதற்கு முன்பாக, கூடுதல் விபரங்களை வெளியிடும் படி இரு நிறுவனங்க ளுக்கும் பங்கு சந்தைகள் அறிவுறுத்தியுள்ளன. இணைப்புக்கு முன்பும், பின்பும் உள்ள பங்குரிமை, சொத்துக்கள் மற்றும் கடன்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அல்லது விசாரணை, புரமோட்டர் சீரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட விபரங்களை வெளியிடும்படி பங்கு சந்தைகள் அறிவுறுத்திஉள்ளன.
எனினும், ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டதால், நேற்று சபையர் புட்ஸ் பங்கு விலை 7 சதவீதமும், தேவ்யானி இன்டர்நேஷனல் பங்கு விலை 9 சதவீதம் வரையும் உயர்ந்தன.
