போலி வர்த்தக தளங்களில் சிக்கினால் இழப்பீடு கிடையாது மீண்டும் செபியின் கறார் அறிவிப்பு
போலி வர்த்தக தளங்களில் சிக்கினால் இழப்பீடு கிடையாது மீண்டும் செபியின் கறார் அறிவிப்பு
ADDED : ஜூன் 18, 2026 01:59 AM

ப ட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் அங்கீகாரமற்ற வர்த்தக தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் குறித்து செபி எச்சரித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2016 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் எச்சரித்த செபி, தற்போது அதிகரித்து வரும் போலி வர்த்தக தளங்கள், ஆன்லைன் 'பேன்டஸி கேம்கள்' மற்றும் பதிவு செய்யப்படாத கடன் பத்திர தளங்கள் குறித்து மீண்டும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, செபி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
முதலீட்டாளர்கள் அங்கீகாரமற்ற இணையதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்த வேண்டாம். இதில் ஏற்படும் இழப்புகள் அல்லது ஏமாற்றங்களுக்கு செபியின் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம், குறைதீர்ப்பு மையங்கள் வாயிலாக எந்தவொரு சட்டப்பூர்வ தீர்வோ அல்லது இழப்பீடோ கிடைக்காது.
மேலும், இந்தியாவில் சட்டப்பூர்வ வர்த்தகம் மற்றும் நிதி திரட்டலுக்கு செபி அங்கீகரித்த பங்கு சந்தைகளுக்கு மட்டுமே முழு அதிகாரம் உண்டு. முதலீட்டாளர்கள் போலி இணையதளங்களில் பணத்தை இழந்து ஏமாற வேண்டாம்.
செபியால் அங்கீகரிக்கப்பட்ட பங்கு சந்தைகளின் முழுமையான விபரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sebi.gov.in-ல் கிடைக்கின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
