ADDED : அக் 24, 2025 11:10 PM

அண்மைக்காலமாகவே செபி பல்வேறு சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது மூன்று சீர்திருத்தங்களை அறிமுகம் செய்துள்ளது.
கே.ஒய்.சி., சரிபார்ப்பு மியூச்சுவல் பண்டு முதலீடுகளை எளிமையாக்கும் வகையில், புதிய சீரான நடைமுறையை, செபி முன்மொழிந்துள்ளது. இதன்படி, முதலீட்டாளர்களின் கே.ஒய்.சி., விவரங்கள், ஒருமுறை சரிபார்க்கப்பட்ட பின்னரே, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீட்டை துவங்க முடியும்.
இதனால், விதிகளைப் பின்பற்றாத கணக்குகள் வாயிலாக ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க முடியும். மேலும், தவறான வங்கி விபரங்களை அளிப்பதால், முதலீடுகள் திரும்ப பெறுதல், ஈவுத் தொகை செலுத்த முடியாதது போன்ற பாதிப்புகளையும் குறைக்க முடியும்.
என்.ஆர்.ஐ.,க்களுக்கு தளர்வு என்.ஆர்.ஐ., வாடிக்கையாளர்களுக்கான 'ஜியோ டேக்கிங்' எனும் கே.ஒய்.சி., உண்மைத்தன்மை சரிபார்ப்பு முறையை தளர்த்த செபி திட்டமிட்டு உள்ளது. தற்போது என்.ஆர்.ஐ., வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் முறையிலும் வீடியோ வழியாகவும் எந்தவொரு சரிபார்ப்பு அல்லது புதுப்பித்தலை செய்யும்போதும், அந்த நபர் இந்தியாவில் இருப்பது கட்டாயமாக உள்ளது.
இதனை தளர்த்தி, டிஜிட்டல் முறையில் அல்லது வீடியோ வாயிலாக வாடிக்கையாளர் அடையாள சரிபார்ப்பு மட்டுமே போதும் என செபி முன்மொழிந்துள்ளது. எனினும், வெளிநாட்டில் உள்ள தற் போதைய முகவரியுடன், சரி பார்ப்பு முகவரி பொருந்தி போவது கட்டாயமாகும்.
இது குறித்து நவ., 13ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என செபி அறிவித்துள்ளது.
பண்டு நிறுவனங்களுக்கு தடை புதிய பங்கு வெளியீடுக்கு முந்தைய நிதி திரட்டலின்போது, அந்நிறுவனங்களின் பங்குகள் மற்றும் இதர திட்டங்களில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு செபி தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பிக்கு எழுதிய கடிதத்தில், பட்டியலிடப்படுவதற்கு முன் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செய்யும் முதலீடு, பங்குகள் ஒதுக்கப்படாத சூழலில், பட்டியலிடப்படாத பங்குகளை வைத்திருப்பதாகி விடும் என்பதால், பண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பணத்துக்கு ஆபத்தாகி விடக் கூடும் என்று கூறியுள்ளது.

