தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ நிழலா ? நிஜமா ? உங்கள் லாக்கர் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

 நிழலா ? நிஜமா ? உங்கள் லாக்கர் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

 நிழலா ? நிஜமா ? உங்கள் லாக்கர் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?


ADDED : ஏப் 27, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 01:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த மாத துவக்கத்தில், உங்கள் வங்கி லாக்கருக்கான கட்டணம் 'ஆட்டோ - டெபிட்' மூலம் செலுத்தப்பட்டு இருக்கும். அதற்கான போதுமான இருப்பு இருப்பதை உறுதிப்படுத்த எஸ்.எம்.எஸ்., அறிவிப்பும் வந்திருக்கலாம்.

வங்கி லாக்கர் என்பது உங்கள் மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, நீங்கள் பயணம் செல்லும் நேரங்களில்... கோடை விடுமுறை நாட்களில்... இது மன அமைதியையும் தருகிறது.

வங்கி கொள்ளை அல்லது மோசடி பற்றிய செய்திகளை படிக்கும்போது, உங்கள் லாக்கரில் வைத்துள்ள பொருட்கள் உண்மையில் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்று யோசித்தது உண்டா? நகைகள், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் வங்கி லாக்கரில் உள்ளதால், உங்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு உணர்வு நிஜமா, இல்லை நிழலா?

வங்கி லாக்கர்களின் கட்டமைப்பு வலிமையானது, மேலும் 24 மணி நேர பாதுகாப்பும் உள்ளது. இருந்தாலும், வங்கி வளாகத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உங்கள் லாக்கரில் உள்ள பொருட்களுக்கு சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் என்ன ஆகும்? உங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

கிடைக்கும்; ஆனால் கிடைக்காது.

வங்கியின் அலட்சியம் காரணமாக, பாதுகாப்பு குறைபாடு, தீ விபத்து, திருட்டு, கட்டடம் இடிந்து விழுதல், அல்லது வங்கி ஊழியர்களால் ஏற்படும் மோசடி போன்றவற்றால் இழப்பு ஏற்பட்டால், உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும்.

ஆனால், அது வருடாந்திர லாக்கர் கட்டணத்தின் 100 மடங்கிற்குள் மட்டுமே இருக்கும்.

உதாரணமாக, உங்கள் லாக்கர் கட்டணம் 2,000 ரூபாய் என்றால், அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு கிடைக்கும்.

கவனம் தேவை


லாக்கரில் இருந்த பொருட்கள் என்ன, அவற்றின் மதிப்பு என்ன என்பதை நீங்கள் நிரூபிக்க முடிகிறதா என்பதையே அது சார்ந்துள்ளது.

மேலும், உங்கள் சொந்த அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு கிடையாது. அதேபோல, வங்கிகள் லாக்கரில் உள்ள பொருட்களுக்கு தனியாக காப்பீடு எடுக்க மாட்டார்கள்.

மேலும், நினைவில் கொள்ள வேண்டியது என்ன வென்றால், முதலீட்டு ஆவணங்கள் அல்லது சொத்து உரிமை ஆவணங்கள் இருந்தால், அவற்றின் உண்மையான முதலீட்டு மதிப்பு இழப்பீடு கணக்கில் எடுக்கப்படாது. மீண்டும் ஆவணங்களை பெற உதவும் அளவிற்கே பயன்படும்.

வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் போர் போன்ற மனிதர்களால் ஏற்படும் சூழ்நிலைகளும் இழப்பீட்டில் பொதுவாக சேர்க்கப்படாது.

அப்படியானால், நீங்கள் நினைக்கும் பாதுகாப்பு உணர்வு என்ன? அது ஒரு நிழல் மட்டுமே. உங்கள் லாக்கரில் உள்ள பொருட்களின் மதிப்பு, கிடைக்கும் இழப்பீட்டை விட அதிகமாக இருந்தால், அந்த அளவுக்கு நீங்கள் இழப்பை சந்திக்க வேண்டி வரும்.

ஆனால், இதை ஓரளவு மேம்படுத்தலாம். அதற்கு தனியாக காப்பீடு எடுக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, 'இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனம் 'பேங்க் லாக்கர் புரொடெக்டர் பாலிசி' என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இது, வங்கி லாக்கரில் உள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் பிற மதிப்புள்ள பொருட்களை திருட்டு, கொள்ளை, தீ விபத்து போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

இது, வங்கி வழங்கும் பாதுகாப்பை மேலோங்க செய்யும் கூடுதல் பாதுகாப்பாகும்.

இந்த திட்டத்தில், உதாரணமாக, 40 லட்சம் ரூபாய் வரை நகைகள் மற்றும் மதிப்புள்ள பொருட்களுக்கு சுய அறிவிப்பின் அடிப்படையில் காப்பீடு பெறலாம்.

அதற்கு மேல் காப்பீடு தேவைப்பட்டாலோ அல்லது ஒற்றை பொருளின் மதிப்பு 10 லட்சம் ரூபாயை மீறினாலோ, அரசு அங்கீகரித்த மதிப்பீட்டாளரின் அறிக்கை அவசியமாகும்.

நிஜ பாதுகாப்பு


மேலும், 'ஹெச்.டி.எப்.சி., எர்கோ மற்றும் சோழமண்டலம் எம்.எஸ்.,' போன்ற நிறுவனங்களும் இதுபோன்ற காப்பீட்டு திட்டங்களை வழங்குகின்றன. அவற்றிலும் சிறிய வேறுபாடுகளுடன் இதே போன்ற பாதுகாப்பு கிடைக்கும்.

எனவே, உங்கள் வங்கி லாக்கரில் உள்ள பொருட்களுக்கு அதிக பாதுகாப்பு தேவையெனில், அந்த 'நிழல்' பாதுகாப்பை 'நிஜ' பாதுகாப்பாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us