நிழலா ? நிஜமா ? காப்பீட்டில் துணை வரம்பு பாலிசி ஏன் முக்கியம்?
நிழலா ? நிஜமா ? காப்பீட்டில் துணை வரம்பு பாலிசி ஏன் முக்கியம்?
UPDATED : செப் 14, 2026 02:35 AM
ADDED : செப் 14, 2026 02:22 AM

'நிழலா? நிஜமா?' தொடரின் முந்தைய பகுதியில், எவ்வளவு ஆயுள் காப்பீடு போதுமானது என்ற கேள்வியை பார்த்தோம்.
ரூ.1 கோடி என்பது பிரமிப்பூட்டும் தொகையாக தோன்றியது. ஆனால், அதை ஆராய்ந்து பார்த்தபோது, ரூ.1 கோடியின் மதிப்பு பற்றி பல நுணுக்கங்கள் வெளிப்பட்டன.
இதே கேள்வியை மருத்துவமனை சிகிச்சை காப்பீட்டிலும் கேட்போம். இந்த பாலிசிக்கு ரூ.1 கோடி காப்பீட்டு தொகை என்பது நிழலா? நிஜமா?
இதற்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனவே, ஆயுள் காப்பீட்டை போலவே, உங்களுக்கான சரியான தீர்வை நீங்களே கண்டறிய உதவும் ஒரு அணுகுமுறையையும் வழிகாட்டுதலையும் இங்கே தருகிறேன்.
முதலில், உடல்நல காப்பீட்டு பாலிசிகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
முதல் வகை பாலிசியில், நீங்கள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு நோய் இருப்பது கண்டறியப்பட்டாலோ, ஒரு குறிப்பிட்ட தொகை மொத்தமாக வழங்கப்படும். நீங்கள் சிகிச்சை எடுத்தீர்களா, அதற்காக எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதெல்லாம் கிளெய்ம் பெறுவதற்கு முக்கியமில்லை. முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படுவதால், இது பெனிபிட் பாலிசி எனப்படுகிறது.
கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி, கேன்சர் பாலிசி, முக்கிய நோய்களுக்கான பாலிசி, முக்கிய அறுவை சிகிச்சைகளுக்கான பாலிசி, கார்டியாக் கேர் பாலிசி, தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவை இதற்கு உதாரணங்கள்.
இந்த வகை பாலிசியின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகள் உங்களிடம் இருந்தால், அவை அனைத்தின் கீழும் கிளெய்ம் கோரலாம்.
இரண்டாவது வகை உடல்நல காப்பீட்டு பாலிசி இன்டெம்னிட்டி பாலிசி அல்லது இழப்பீடு பாலிசி எனப்படுகிறது. இங்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக செய்யப்பட்ட செலவுகள் ஈடுசெய்யப்படுகின்றன.
இந்த பாலிசிகள் மருத்துவமனை செலவு பாலிசி என்றும் அழைக்கப்படுகின்றன. இவை அடிப்படை பாலிசிகளாக இருக்கலாம்; அல்லது குறைந்த பிரீமியத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் டாப்-அப் / சூப்பர் டாப்-அப் பாலிசி ஆகவும் இருக்கலாம்.
இப்போது, மருத்துவமனை சிகிச்சைக்கான காப்பீட்டு தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கு வருவோம். உங்களுக்கான தொகையை தீர்மானிக்க ஒரு பொதுவான அணுகுமுறையை சொல்கிறேன்.
அந்தத் தொகை நிழலா, நிஜமாஎன்று தீர்மானிப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.?
சென்னையில் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.50,000 முதல் ரூ.2.5 லட்சம் வரை இருக்கலாம். தொடை எலும்பு முறிவுக்கு மருத்துவமனை செலவு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை ஆகலாம்.
எனவே, சிலர் ரூ.3 லட்சம் காப்பீட்டு தொகை போதுமானது என்று நினைக்கலாம். மற்றவர்கள் ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக விரும்பலாம்.
நீங்கள் ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகையை தேர்வு செய்தால், இந்த காப்பீடு நிழலா? நிஜமா?
முதலில், அந்த பாலிசியில் துணை வரம்பு இருக்கிறதா என்று பாருங்கள். அதாவது, காப்பீட்டு தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக அறை வாடகை அல்லது அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணம் போன்றவற்றுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம்.
உதாரணமாக, அறை வாடகைக்கு காப்பீட்டு தொகையில் 1% துணை வரம்பு இருந்தால், ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை கொண்ட உங்கள் பாலிசியில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே அறை வாடகையாக வழங்கப்படும்.
அந்த வரம்பை தாண்டி நீங்கள் செலவு செய்தால், கூடுதல் தொகையை நீங்களே செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல், அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கும் விகிதாசார அடிப்படையில் நீங்கள் ஒரு பகுதியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
குறிப்பிட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் துணை வரம்பு இருக்கலாம். உதாரணமாக, கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படும் என்று வரம்பு இருக்கலாம்.
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துப் பார்த்தால், திடீரென்று ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை ஒரு நிழல் போல தோன்றலாம்.
பல புதிய பாலிசிகளில் துணை வரம்பு எதுவும் இல்லாமல் இருக்கின்றன. எனவே, பாலிசியை தேர்வு செய்யும்போது அவை இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.
பல்வேறு வகையான துணை வரம்பை நீக்குவதற்கான ரைடர்ஸையும் வாங்க முடியும். அப்படி செய்தால், உங்கள் நிழல் இன்னும் கொஞ்சம் நிஜமாகும்!
மருத்துவமனை சிகிச்சைக்கான பாலிசியில் தவறாக தோன்றக்கூடிய அம்சங்களில் இது ஒன்று மட்டுமே. டிடக்டபிள், கோ-பே போன்றவையும் கவனிக்க வேண்டியவை.
காப்பீடு நிஜமாக இருக்க வேண்டுமென்றால், அதை நிஜமாக்குவதற்கு நாம் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும்.
![]() |

