UPDATED : பிப் 17, 2026 04:02 PM
ADDED : பிப் 17, 2026 12:21 AM

தங்கம் மற்றும் வெள்ளியின்மீது மட்டுமே முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், மறுபுறம் சத்தம் இல்லாமல் காப்பர் மற்றும் அலுமினியம் ஆகிய இரண்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. எம்.சி.எக்ஸ்., சந்தையில், காப்பர் பியூச்சர்ஸ் விலை கிலோவுக்கு 1,200 -- 1,270 ரூபாய் வரம்பில் வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த ஆண்டின் 862 ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்வாகும். அதேபோல், அலுமினியம் பியூச்சர்ஸ் விலை 230 - 240 ரூபாய் வரம்பிலிருந்து 300 -- 315 ரூபாய் வரை ஏறி, 35 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த இரண்டு உலோகங்களின், வர்த்தக வாய்ப்பு எப்படி இருக்கும், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து, கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் கூறுகையில்:
“அலுமினியம் மற்றும் காப்பர் ஆகியவற்றின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், சந்தையில் இதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இதுவே விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாகும். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு மற்றும் ஏற்றுமதி தடை போன்ற காரணங்களும், விலை ஏற்றத்துக்கு ஆதரவாக அமைகின்றன.
குறிப்பாக, கட்டுமானம் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் காப்பர், அலுமினியத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்கள் பயன்பாட்டால், உலகளாவிய பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.
அலுமினியத்தை பொறுத்தவரை தேவை எப்போதும் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் 2021ல் அலுமினியத்தின் தேவை 4.30 கோடி டன்னாக இருந்தது.
2025ல் இது 5.00 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது. இது எதிர்வரும் ஆண்டுகளில், 7.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அதிகரிக்கும் தேவை ஒருபுறம் இருக்க, அலுமினியத்துக்கான வினியோக பற்றாக்குறை, நடப்பு ஆண்டில் 2 லட்சம் டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது இனி வரும் ஆண்டுகளில் 6 லட்சம் டன்னாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, அடுத்த 10 ஆண்டுகளுக்கு காப்பர் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு லட்சம் டன் என்கிற அளவில், தொடர்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்க, இந்தோனேசியாவில் இரண்டு புதிய புராஜெக்ட்கள் ஆரம்பிப்பதாக, சந்தை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஆனால், இந்த இரண்டு புராஜெக்ட்களால், நிச்சயமாக உலகளாவிய தேவையை ஈடு செய்ய முடியாது.
காப்பர் பற்றாக்குறையை தவிர்க்க உற்பத்தியை அதிகப்படுத்தலாம் என நினைத்தாலும், அதை உடனடியாக செய்ய முடியாது. ஏனெனில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், சுரங்கம் அமைத்து காப்பர் உற்பத்தியை ஆரம்பிக்க, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது.
ஆகையால், அலுமினியம், காப்பர் ஆகிய உலோகங்களின் விலை இனிவரும் காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நீண்டகால அடிப்படையில், முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்ப்பதை விட கூடுதல் லாபம் கிடைக் கலாம்.
நேரடியாக கமாடிட்டி சந்தை வாயிலாகத் தான் அலுமினியம், காப்பரில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பங்குச்சந்தையில் உள்ள இவ்விரு உலோகங்களைச் சார்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதன் வாயிலாகவும் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க முடியும்.'' என்றார்.

