ADDED : அக் 22, 2025 12:41 AM

ப ல மாதங்கள் தொடர்ச்சியாக உச்சத்தை மட்டுமே தொட்டுக்கொண்டு இருந்த வெள்ளி விலை, அக்டோபர் 20ம் தேதி ஒரே நாளில் ஏழு சதவீத அளவுக்குச் சரிவைக் கண்டது. இதன் தொடர்ச்சியாக வெள்ளி இ.டி.எப்., மதிப்பும் அதே அளவிலான சரிவைக் கண்டன. வெள்ளியை அடிப்படையாக கொண்ட பல எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டுகள், கடந்த ஓராண்டில், 65 முதல் 70 சதவீத ரிட்டர்னை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாத துவக்கத்தில், வெள்ளி ஒரு அவுன்ஸ் விலை 40 டாலருக்கு மேல் உயர்ந்தது. அக்டோபர் மத்தியில் அது 50 டாலரையும் கடந்தது. ஆனால், அக்டோபர் 17ம் தேதி, அமெரிக்க சந்தையில் வெள்ளி விலை ஆறு சதவீதம் குறைந்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் அந்தச் சரிவு எதிரொலித்தது.
அக்டோபர் 20 அன்று, இந்தியாவில் ஒரு கிலோ வெள்ளி 1,71,275 ரூபாயில் இருந்து 1,60,100 ரூபாயாகக் குறைந்தது. அதாவது ஏழு சதவீத சரிவு. இதன் தொடர்ச்சியாக இந்திய வெள்ளி இ.டி.எப்.களின் மதிப்பும் சரிந்தன.
இந்தச் சரிவுக்கு பல முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சர்வதேச அளவில் ஆயுதப் போர் மற்றும் வர்த்தகப் போர் தொடர்பான பதற்றம் சற்றே தணிந்துள்ளன. அதுவும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் பெரிய ஆறுதலைத் தந்துள்ளது.
தங்கள் நாணயங்களின் மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பல மத்திய வங்கிகள், கூடுதலாக வெள்ளியை வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியம் இப்போது குறைந்துள்ளது. இரண்டாவது, வெள்ளி உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை சற்றே நீங்கியுள்ளது. போதுமான வெள்ளி சந்தையில் கிடைப்பதனால், அதன் விலை குறைந்துள்ளது என்று தெரிவிக்கின்றனர் இத் துறை நிபுணர்கள்.
இப்போதைக்கு வெள்ளி விலை குறைந்துள்ளதே தவிர, அது மேலும் குறைந்து தரையைத் தட்டும் என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இன்னமும் சூரிய மின்சாரத் தகடுகள் தயாரிப்பு, தொழிலக பயன்பாடுகள் ஆகியவை அதிக அளவில் தான் இருக்கின்றன. இவற்றைக் கணக்கெடுத்துப் பார்க்கும்போது, வெள்ளி தன் பளபளப்பை அவ்வளவு சீக்கிரம் இழக்காது என்பதே நிபுணர்கள் கருத்து.