டெக்னிக்கல் அனாலிசிஸ்: எம்.சி.எக்ஸ்., பங்குகள் 80% சரிந்தது ஏன்?
டெக்னிக்கல் அனாலிசிஸ்: எம்.சி.எக்ஸ்., பங்குகள் 80% சரிந்தது ஏன்?
UPDATED : ஜன 03, 2026 02:20 AM
ADDED : ஜன 03, 2026 02:14 AM

மும்பையை தலைமையிடமாக கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் உலோகங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை வர்த்தகம் செய்யும் தளமான, எம்.சி.எக்ஸ்., எனும், 'மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்' பங்குகள், பங்கு பிரிப்புக்கு பின், நேற்று வர்த்தகத்தை துவங்கியது. அப்போது, பல முதலீட்டாளர்களின் கணக்குகளில், எம்.சி.எக்ஸ்.,பங்குகள், 80 சதவீதம் அளவுக்கு சரிவு என காட்டப்பட்டிருக்கும்.

நிறுவனங்கள் பொதுவாக பங்குகளின் விலையை குறைத்து, சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க, பங்கு பிரிப்பை மேற்கொள்வது வழக்கம். பங்குகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், நிறுவனத்தின் சந்தை மதிப்பில் மாற்றம் இருக்காது.
அந்த வகையில் சமீபத்தில், எம்.சி.எக்ஸ்., தன் 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்கு ஒன்றை, 2 ரூபாய் முகமதிப்புள்ள 5 பங்குகளாக பிரிக்க இருப்பதாக அறிவித்திருந்தது.
நேற்றுடன் பங்கு பிரிப்புக்கு ரிகார்டு தேதி முடிந்த நிலையில், டீமேட் கணக்கில் ஒரு எம்.சி.எக்ஸ்., பங்கு வைத்திருந்த முதலீட்டாளர்களுக்கு, ஐந்து பங்குகள் கிடைத்திருக்கும்.
பங்குகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதன் மதிப்பு முந்தைய நிலையிலேயே இருக்கும். இதனிடையே, நேற்றைய வர்த்தக நேர முடிவில், எம்.சி.எக்ஸ்.,பங்குகள் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் உயர்வு கண்டன.

