சர்வதேச சந்தையில் காப்பர் விலை 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
சர்வதேச சந்தையில் காப்பர் விலை 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
UPDATED : ஜன 03, 2026 02:13 AM
ADDED : ஜன 03, 2026 02:11 AM

சமீபகாலமாக உலகச் சந்தையில் தங்கம், வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடியாக மிகவும் கவனிக்கத்தக்க உலோகமாக காப்பர் மாறியுள்ளது. கடந்த 2009-க்குப் பிறகு, காப்பர் விலை தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் எல்.எம்.இ., எனும் லண்டன் உலோகச் சந்தையில், காப்பர் விலை 42 சதவீதம் அதிகரித்து, ஒரு டன் 12,522 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.
1. டேட்டா சென்டர்கள்:
செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர வளர, உலகெங்கும் பிரமாண்டமான 'டேட்டா சென்டர்கள்' நிறுவப்படுகின்றன. இந்த மையங்களில் மின்சாரத்தை கடத்துவதற்கும், குளிர்விக்கும் அமைப்புகளுக்கும் டன் கணக்கில் காப்பர் தேவைப்படுகிறது.
2. மின்சார வாகனங்கள்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உலகம் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கிறது. ஒரு சாதாரண பெட்ரோல் காரை விட, ஒரு மின்சார வாகனத்துக்கு கிட்டத்தட்ட 4 முதல் 5 மடங்கு அதிக காப்பர் தேவைப்படுகிறது. இதுமட்டுமின்றி, சூரியஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலும் செம்பு அதிகம் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
3. வினியோக தட்டுப்பாடு:
தற்போது தேவை மிகவும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப சுரங்கங்களில் காப்பர் உற்பத்தி அதிகரிக்கவில்லை. இந்தோனேஷியா, சிலி மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் உள்ள சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. புதிய சுரங்கங்களை அமைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சுரங்கங்களில் நிலவும் தட்டுப்பாடு ஆகியவை, சந்தையில் காப்பர் கிடைப்பதை குறைத்துள்ளது.
4. புவிசார் அரசியல்கள்:
அமெரிக்கா போன்ற நாடுகள், இறக்குமதி செய்யப்படும் காப்பர் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கத் திட்டமிட்டு வருவது, சர்வதேச சந்தையில், ஒருவித பதற்றத்தையும் விலையேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

