ADDED : அக் 26, 2025 12:22 AM

காசோலைகளை விரைவாக கிளியர் செய்து தர உதவும் வகையில் புதிய முயற்சியை, ரிசர்வ் வங்கி கடந்த 4ம் தேதி முதல் துவங்கியது. அதனால், காசோலைகள் இனி விரைவாக பாஸ் ஆகிவிடும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி தொடர்ச்சியாக காசோலைகளை கிளியர் செய்து தரும் புதிய வங்கி நடைமுறையில், சில ஆரம்பக்கட்ட சிக்கல்கள் தென்படுவதாக, இந்திய தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷனும் தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறை வருவதற்கு முன், ஒரு காசோலை கிளியர் ஆவதற்கு இரண்டு நாட்களேனும் ஆகும் என்ற நிலை இருந்தது. அதை துரிதப்படுத்தும் முயற்சியை ஆர்.பி.ஐ., மேற்கொண்டது. அதன்படி, காசோலை வங்கியில் வழங்கப்பட்டதில் இருந்து ஒருசில மணி நேரத்திலேயே, அது கிளியர் செய்யப்பட வேண்டும். உரியவருக்குப் பணம் போய் சேர வேண்டும்.
இந்த நடைமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, என்.பி.சி.எல்., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அக்டோபர் 4ம் தேதி முதல் இதுவரை, 3.01 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2.56 கோடி காசோலைகள் உடனுக்குடன் கிளியர் செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் கொடுக்கப்பட்ட காசோலைகள் கிளியர் ஆனதா அல்லது ஆகவில்லையா என்ற விபரம் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காசோலைகள் கொடுக்கும்போதே, 'பாசிட்டிவ் பே' வசதி பயன்படுத்தப்பட்டு இருக்குமானால், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எல்லாவிதமான பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும், வங்கிகளின் மத்திய கட்டமைப்பிலும், ஒருசில வங்கிகளிலும் ஆரம்பக்கட்ட சிக்கல்கள் தெரியவருகின்றன. அந்தச் சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு, தொடர்ச்சியாக காசோலை கிளியர் செய்யும் நடைமுறை முழுமை பெறும்.
ஒருசில வாடிக்கையாளர்கள், இந்தப் புதிய நடைமுறை துவங்கிய போது சற்றே சிரமப்பட்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய நடைமுறையை எவ்வளவு துாரம் இயல்பாக மாற்றி அமைக்க முடியுமோ, அதை விரைந்து செய்வோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

