ஒரிஜினல் புரோக்கர் செயலிகளை அடையாளம் காட்டும் 'டிக்' மார்க்
ஒரிஜினல் புரோக்கர் செயலிகளை அடையாளம் காட்டும் 'டிக்' மார்க்
ADDED : அக் 12, 2025 04:10 AM

கூகுள் பிளே ஸ்டோரில், புரோக்கர்கள் வெளியிட்டுள்ள பங்கு வர்த்தக செயலிகளுக்கு மட்டும் 'டிக்' மார்க் போடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, செபியின் முழுநேர உறுப்பினரான கம்லேஷ் சந்திர வர்ஷினி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
பல வாடிக்கையாளர்கள் தவறான செயலிகளை டவுன்லோடு செய்துவிடும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுப்பதற்காக, ஆப் ஸ்டோரில் இருக்கும் புரோக்கர்களின் செயலிகளுக்கு மட்டும், 'வெரிபைடு' என்று குறிப்பிடும் 'டிக்' சின்னத்தைப் போட முடியுமா என்று கேட்டிருக்கிறோம். கூகுள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரண்டு மாதங்களில் இந்த அம்சம் நடைமுறைக்கு வரும்.
இதோடு புரோக்கர்கள் இன்னும் ஊக்கத்தோடு செயல்பட வேண்டும். குறிப்பாக கமாடிட்டி சந்தையை உயிர்ப்பிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும்.
மேலும், அவர்களுக்கு சிற்றுார்களிலும், சிறு நகரங்களிலும் நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. சமீபத்திய செபி ஆய்வின் படி, ஒரு சதவீதத்துக்கும் குறைவான குடும்பங்களே முதலீடு செய்துவருகின்றன. புரோக்கர்கள் தமது சேவைகளை விரிவுபடுத்தினால், சந்தையும் வளரும். அவர்களுடைய தொழிலும் பெருகும்.
அவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கு உதவியாக, செபியும் ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் தனது அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது. புரோக்கர்கள், வாடிக்கையாளர்கள், மேன்மேலும் பங்குச் சந்தை பற்றிய அறிவைப் பெறுவதற்கும் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.