ADDED : செப் 16, 2026 04:25 AM

புதுடில்லி: 'நாட்டில் வேலையின்மை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதமாக குறைந்துள்ளது' என, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஜூலை மாதத்தில் 5.10 சதவீதமாக இருந்தது.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வேலையின்மை விகிதம் ஜூலையில் 4.50 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 4.10 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்பான மிக குறைந்த அளவாகும். அதேநேரத்தில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.70 சதவீதத்திலிருந்து 6.80 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 4.30 சதவீதத்திலிருந்து 3.90 சதவீதமாகவும், ஆண்களுக்கான வேலையின்மை 4.60 சதவீதத்திலிருந்து 4.30 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 34.40 சதவீதத்தில் இருந்து 34.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
