ADDED : டிச 16, 2025 05:54 AM

சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வரும் சூழலில், நேற்று இரு உலோகங்களும் கமாடிட்டி சந்தையில் இதுவரை இல்லாத ஏற்றம் கண்டுள்ளன. அமெரிக்க பெடரல் வங்கி கடன் வட்டி விகிதத்தை குறைத்ததும் இவற்றின் விலை அதிகரிக்க முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக அதிகரித்து வரும் நிலையில், எம்.சி.எக்ஸ்., சந்தையில் 10 கிராம் தங்கம் அடங்கிய ஒரு 'லாட்' விலை 1.35 லட்சம் ரூபாயை தாண்டிஉள்ளது. இதேபோல, தொடர் ஏற்றத்தில் உள்ள வெள்ளி விலை ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை தாண்டியது.
சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. அதேபோல, சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், 5ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்துவரும் தொழில்களுக்கு வெள்ளியின் தேவை அதிகரித்து வருவது வெள்ளி விலை ஏற்றத்தில் இருக்க காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தங்கத்தைவிட வெள்ளி சிறப்பாக செயல்படுவதாக கூறும் நிபுணர்கள், தற்போதைய உயர்வை தக்கவைத்தால், விரைவில் 2.03 லட்சம் ரூபாயாக உயரக்கூடும் என கூறுகின்றனர். 1.90 லட்சம் ரூபாய் என்பது ஆதரவு நிலையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே, விலை குறையும்போது, வெள்ளியில் நீண்டகால முதலீடுகளை துவங்கலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

