ஜீரோ பேலன்ஸ் : மானத்தை விட்டு கடன் கேட்கும் நிலை வேண்டாம்
ஜீரோ பேலன்ஸ் : மானத்தை விட்டு கடன் கேட்கும் நிலை வேண்டாம்
ADDED : நவ 24, 2025 12:44 AM

'அவசர கால நிதித் தொகுப்பு' என்பது, நம்பகமான நிதி பாதுகாப்பு தொகுப்பு ஆகும். எதிர்பாராத சந்தர்ப்பங்களையும் தேவைகளையும் கூட எதிர்பார்த்து, நீங்கள் சேர்த்து வைக்கும் பணம் இது. ஆபத்துக் காலத்தில் உங்களுக்கு உதவி செய்யும் ஒரு 'பாராஷூட்' மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இதற்கு சமீபத்திய உதாரணம் கொரோனா. பலரது வருமானம் குறைந்துபோனது, அல்லது நின்றே போனது. ஆனால், செலவு கள் மட்டும் அப்படியே மென்னியைப் பிடித்தன. அந்த நேரத்தில் உதவிக்கு வந்தது, இந்த அவசர கால நிதிச் சேமிப்பு தான்.
இத்தகைய சமயங்களில் நமது தேவைகளை சற்றே குறைத்துக்கொள்ள முடியும். ஆனால், அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தானே ஆக வேண்டும்?
இப்படிப்பட்ட சமயங்களில் தான், அவசர கால நிதித் தொகுப்பு அத்தியாவசியமாகிறது. அப்போது, உங்களிடம் போதுமான பணம் இருக்குமானால், எந்தவித சிரமமும் இல்லாமல், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
ஏன் தேவை? @@
அவசர மருத்துவ செலவுகள், திடீர் வேலைஇழப்பு, வெளியூர் பயணம் உள்ளிட்டவை, ஏற்கனவே உங்கள் காலியான பர்ஸை மேலும் துடைத்து எடுத்துவிடும். அவசர கால நிதித் தொகுப்பு இருக்குமானால், இத்தகைய சமயங்களில் பேருதவியாக இருக்கும். நிதானமாக எல்லா இடர்களையும் எதிர்கொள்ளலாம்.
இன்னொரு பிரச்னை, இத்தகைய திடீர் செலவுகளைச் சமாளிப்பதற்கு கடன் வாங்க வேண்டிஇருக்கும். அதுவும் மாதத்துக்கு 2 முதல் 3 சதவீத வட்டி என்றால், மொத்த சொத்தையும் எழுதிக் கொடுப்பது போன்றது. இதைத் தவிர்ப்பதற்கு அவசரகால நிதித் தொகுப்பு உதவும்.
பிள்ளைகள் படிப்பு, கல்யாணம், ஓய்வு என்றெல்லாம் திட்டமிட்டு, வைப்பு நிதியில் கொஞ்சம், பி.பி.எப்.இல் கொஞ்சம், மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.,பி.,யில் கொஞ்சம் என்று சிறுகச் சிறுக சேமித்து வருவீர்கள்.
திடீர் அவசரம் வரும் போது, இவற்றையெல்லாம் உடைக்க வேண்டியிருக்கலாம். உங்கள் எதிர்கால திட்டம் அனைத்தும் தவிடுபொடி ஆகிவிடக் கூடும்.
எல்லாவற்றையும் விட முக்கியம், மண்டைக் குடைச்சல் இருக்காது. பணம் இல்லையென்றால், தலை கிறுகிறுவென சுற்றும். பி.பி., எகிறும்.
பொன்னியின் செல்வனில் வரும் ஆபத்துதவிகள் போல, எங்கோ கண் மறைவாக, அவசர கால நிதித் தொகுப்பு ஒன்று இருக்கிறது என்று நம்பிக்கை இருக்குமானால், இத்தகைய பதற்றங்கள் ஏற்படாது.
எவ்வளவு சேமிப்பு?
உங்களுடைய நிதி நிலையைப் பொறுத்து இது வேறுபடும்.
உதாரணமாக, உங்களுக்கு நிலையான உத்யோகமும் வருமானமும் இருக்கிறது; குடும்பத்தினருடைய ஆதரவு நன்றாக இருக்கிறது என்றால், மூன்று மாத செலவினங்களுக்குத் தேவைப்படும் நிதியைச் சேமித்து வைக்கலாம்.
ஆறு மாதச் செலவினங்களுக்குத் தேவைப்படும் நிதியை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பது பொதுவான விதி. இந்த அளவுக்கு பணச் சேமிப்பு இருந்தால், திடீர் செலவுகளை எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் சமாளிக்க முடியும்.
ஒழுங்கான வேலைஇல்லை, வருமானம் இல்லை. அல்லது குடும்பத்தாரிடம் இருந்து போதிய ஒத்துழைப்போ உதவியோ இல்லையென்றால், நீங்கள் நிச்சயம் 12 மாத குடும்பச் செலவினங்களுக்குத் தேவைப்படும் தொகையை முன்னதாகவே ரெடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எதெல்லாம் முக்கியம்?
அவசர கால நிதித் தொகுப்பு என்றால், அதில் எவையெல்லாம் கவர் ஆகவேண்டும்?
வீட்டு வாடகை, மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டணம், மாதாந்திர தவணை, மருத்துவ செலவுகள், எரிவாயு உருளை, மின்சார கட்டணங்கள் உள்ளிட்ட அத்தனையும் அத்தியாவசிய செலவுகள்.
இவற்றுக்கான செலவு களைக் கணக்கிட்டு, போதுமான தொகுப்பை முன்னதாகவே சேர்த்து வைக்க வேண்டும்.
அடிப்படை உண்மை ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை, வருமானம் போன்றவை எவ்வளவு பலவீனமாக இருக்கிறதோ, அவ்வளவு துாரம் உங்களுக்குப் போதிய அவசர கால நிதித் தொகுப்பு வேண்டும்.
எப்படிச் சேமிப்பது?
முதலில் எவையெல்லாம் தவிர்க்கவே முடியாத செலவுகள் என்று கணக்குப் போடுங்கள். வீட்டு வாடகை, உணவுப் பொருட்கள், மாதாந்திர தவணை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் தவிர்க்கவே முடியாதவை.
இந்தச் செலவுகளுக்கான தொகையைத்தான் நீங்கள் சேமித்து வைக்கப் போகிறீர்கள்.
ரொம்ப அதிகம் வேண்டாம். மாதாமாதம் உங்களுடைய வருமானத்தில் இரண்டு சதவீதத் தொகையை எங்கேனும் ஒதுக்கிவையுங்கள். படிப்படியாக இதை அதிகப் படுத்திக்கொண்டே வாருங்கள்.
ஒழுங்காக திட்டமிட்டுச் செய்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆறு மாதத்துக்குத் தேவைப்படும் அவசர கால நிதித் தொகுப்பை உருவாக்கிவிடலாம்.
நமக்குத் தேவையா?
பலருக்கும் இந்தச் சந்தேகம் ஏற்படும். நமக்கு எதற்கு இப்படிப்பட்ட ஒரு சேமிப்பு தேவை? கொஞ்சம் உங்கள் வாழ்க்கையையே திரும்பிப் பாருங்கள். நிச்சயம் பல சமயங்களில் நீங்கள் பணம் இல்லாமல் திண்டாடியிருப்பீர்கள்.
யாரோ நாலு பேரிடம் வெ.மா.சூ.சு.,வை விட்டுவிட்டு, கடன் கேட்டிருப்பீர்கள். பயங்கரமான கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருப்பீர்கள்.
அந்த நேரத்தில் பிரச்னை தீர்ந்தால் போதும் என்று நகை, நட்டையெல்லாம் எடுத்துப் போய் அடகு வைத்திருப்பீர்கள். அவசர கால நிதித் தொகுப்பு இருந்தால், இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் அல்லவா?
யாருக்குத் தேவை?
யாருக்குத் தான் தேவையில்லை? அனைவருக்கும் தேவை.
நான், நீங்கள், அனைவருக்கும், அதாவது எவ்வளவு சம்பாதித்தாலும், எல்லோருக்கும் அவசரம் வரும். அதை சமாளிப்பதற்கு பணம் வேண்டும்.
இது ஏதோ ஒரு நிதி ஆலோனை என்று கருத வேண்டாம். உண்மையில், அவசர கால நிதித் தொகுப்பு என்பது மன நிம்மதியையும், நம்பிக்கையையும் பாதுகாப்பையும் பொட்டலம் கட்டி ஒன்றாகத் தருகிறது.
அதனால், இப்போதே சேமிக்க ஆரம்பியுங்கள். உங்கள் எதிர்காலம் உங்களை மனமார வாழ்த்தும்.
சி.கே. சிவராம்
நிறுவனர், ஐகுளோபல் ஆல்டர்நேட்

