ஜீரோ பேலன்ஸ: சுண்டி இழுக்கும் 'கிரிப்டோ கரன்சி' வருவாய்
ஜீரோ பேலன்ஸ: சுண்டி இழுக்கும் 'கிரிப்டோ கரன்சி' வருவாய்
UPDATED : அக் 19, 2025 08:04 PM
ADDED : அக் 19, 2025 08:03 PM

'கிரிப்டோ கரன்சி' அதாவது மெய்நிகர் நாணயம் என்பது புதுவிதமான முதலீடு. அது உற்சாகமானது; அபாயகரமானதும் கூட. மனைவணிகம், தங்கம், பங்குகள் போன்றவை பல நுாற்றாண்டுகளாக இருந்துள்ளன. மெய்நிகர் நாணயங்கள் கடந்த 15 ஆண்டுகளாகத் தான் இருக்கின்றன.
![]() |
இது ஒரு டிஜிட்டல் சொத்து, இதற்குப் பின்னே இருக்கும் 'பிளாக்செயின்' தொழில்நுட்பம் என்பது, அதை பாதுகாப்பாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மிகப் பெரிய கவர்ச்சி என்ன தெரியுமா? கடந்த 15 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், கிட்டத்தட்ட 49 சதவீத சராசரி வருவாயைக் கொடுத்திருப்பது தான்.
இதனால் தான், நமது நாட்டில் 1.20 கோடி பேர் இந்த முதலீட்டில் குதித்துள்ளனர். மொத்த பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பத்து சதவீதம் பேர்.
எல்லா முதலீட்டு இனங்களைப் போலவே இதிலும் அபாயங்களும் உண்டு, வெகுமதிகளும் உண்டு.
மறுபக்கம் மெய்நிகர் நாணயச் சந்தை என்பது கடுமையான ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. ஒருநாள் உங்கள் பணம் இரட்டிப்பாகும்; அடுத்த நாளே பாதிக்குப் பாதியாக குறைந்து போகவும் வாய்ப்புண்டு. ஒரு பக்கம் அதீத உற்சாகம் தருவது போல இருக்கும், மறுபக்கம் கடுமையான மனவேதனையையும் தரக்கூடும்.
சட்ட ரீதியான தெளிவு இப்போது தான் ஏற்பட்டு வருகிறது.
நமது நாடு இதனை நாணயமாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை
இது, விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்து என்று கருதப்படுகிறது.
வரி விகிதம் : லாபத்தில் 30 சதவீதம் + டி.டி.எஸ்.
தங்கம், வெள்ளி, மனை வணிகம், அல்லது பங்குகளில் உள்ளது போல், இதில் முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இந்த துறையில் உலகெங்கும் திருட்டுகளும் மோசடிகளும் ஏராளம். மெய்நிகர் நாணயத்தால் ஏற்படும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க, எந்தவிதமான பாதுகாப்பு வளையமும் இல்லை.
அதனால் தான் மிகப் பெரிய முதலீட்டாளர்களான சார்லி மங்கரும், வாரன் பபெட்டும், இதை சந்தேகக் கண்ணோடு தான் பார்த்தனர். மங்கர், மெய்நிகர் நாணயத்தை 'எலிப் பாஷாணம்' என்றே குறிப்பிட்டார். மெய்நிகர் நாணயத்தை, அரசு உத்தரவாதமில்லாதது, உற்பத்தித் தன்மை அற்றது, முதலீடு என்ற தன்மை சூதாட்டம் போல் இருக்கிறது என்பதே இந்த பெருமுதலீட்டாளர்களின் கருத்து.
ஆனால், வேறு சில நிபுணர்கள் இதில் உள்ள எதிர்கால வாய்ப்பை பார்க்கின்றனர்.
எல்லோருமே மெய்நிகர் நாணயத்தை ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. சர்வதேச அளவில் எல்லோராலும் மதிக்கப்படும் முதலீட்டாளரும் எழுத்தாளருமான ருசிர் ஷர்மா, மெய்நிகர் நாணயம் என்பது, பணத்தின் இன்னொரு வடிவம் என்று கருதுகிறார்.
அது அமெரிக்க டாலர், தங்கம் போன்ற மதிப்புமிக்க சேமிப்பு வடிவங்களுக்கான போட்டியானதாகவும் நினைக்கிறார்.
இது மதிப்புமிக்க சேமிப்பாக உருவாவதற்கான நம்பிக்கையை அளித்தாலும், உலக அளவில், இதனை பரிமாற்றத்துக்குரிய ஒன்றாக யாரும் இன்னும் ஏற்கவில்லை.
இந்தியாவில்
12 முதல் 12.50 கோடி பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்
1.20 கோடி மெய் நிகர் நாணய முதலீட்டாளர்கள்
சொத்துகளின் பரவலாக்கம்
எல்லா முதலீட்டையும் ஒரே இடத்தில் வைத்திருக்கக் கூடாது என்பது தான் முதலீட்டின் முக்கியமான தங்க விதி.
உங்கள் முதலீட்டை, பங்குகள், தங்கம், மனை வணிகம், கடன் பத்திரங்கள், ஏன் மெய்நிகர் நாணயத்திலும் கூட பிரித்துப் போட்டு வைப்பது என்பதே சரியான பரவலாக்கம்.
நீண்டகால போர்ட்போலியோக்களில், 90 சதவீத வருவாய்க்கு நீங்கள் எந்தச் சொத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, மாறாக, ஒவ்வொரு சொத்திலும் எவ்வளவு பிரித்து முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்று தெரிவிக்கிறார் கேரி பிரின்சன் என்ற நிபுணர்.
மெய்நிகர் நாணயம் பற்றிய முக்கியமான ஆசோசனை இது தான்:
உங்கள் மொத்த போர்ட்போலியோ வில் 5 முதல் 7 சத வீதத்துக்கு மேல் முதலீடு செய்ய வேண்டாம்.
இன்னொன்றும் ஞாபகமிருக்கட்டும். மற்ற சொத்துகள் எல்லாம் பல நுாற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. மெய்நிகர் நாணயத்துக்கு வயது வெறும் 15 தான்.
முதலீடு என்பது சமச்சீர் உணவைப் போன்றது.
உங்கள் உணவுத் தட்டை ஒரு போர்ட்போலியோ போல் கருதிக்கொள்ளுங்கள்.
கொஞ்சம் சோறு (பங்குகள்)
பருப்பு (கடன்பத்திரங்கள் / வைப்பு நிதி)
காய்கறிகள் (தங்கம் / மனை வணிகம்)
தயிர் (ரொக்கம்)
சிறு துண்டு இனிப்பு (மெய்நிகர் நாணயம்)
சரி விகிதத்தில் தட்டில் இந்த உணவு ஐயிட்டங்கள் இருக்குமானால், நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.